நேற்று இந்த விக்கி முயற்சியைப் பற்றி எழுதும்பொழுதே பத்ரி கேட்ட கேள்வியை யாராவது கேட்பார்கள் என்று நினைத்திருந்தேன். இதைப் பற்றி நேற்ற எழுதாத காரணம் டக்ளஸ் ஆடமின் கொள்கைதான் “முதலில் சாப்பிடலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டும், பிறகு எங்கு சாப்பிடுவது என்று முடிவெடுக்கலாம், அப்புறம் என்ன சாப்பிடுவது என்று கவலைப்படலாம்”. எனவே, நான் நேற்று எப்படி சாப்பிடலாம் என்று எழுதவில்லை. இன்றைக்கு அது;

பல நாட்களாக இந்தத் திட்டத்தை ஒத்திப்போட்டு வரக்காரணம் இதை எப்படிச் செயல்படுத்தினால் திறம்பட வரும் என்று தெரியாததே. இங்கே என்னுடன் தொழில்நுட்பம் கதைக்க ஒருவரும் கிடையாது (இது டொராண்டோவின் பெரிய அவலம், இதுவே சான்பிரான்ஸிஸ்கோவாக இருந்தால் பத்து மென்கலன் தமிழர்களாவது கிடைப்பார்கள்). கொஞ்சம் நாட்களுக்கு முன்னால் இதுபோல தமிழ்த் திரையிசைப் பாடல்களுக்கான தரவுத்தளம் ஒன்று அமைக்க வேண்டும் என்று தூள் பாலாஜியிடம் எழுதியிருந்தேன். ஒன்று செய்தால் மற்றதற்கு எளிதில் வடிவமும் கருவிகளும் புலப்படும். பாலாஜியின் மென்கலன் திறமையில் நம்பிக்கை வைத்துத்தான் இதை திரையிசைப்பாடல்களுக்கு நகர்த்தினேன்

* * *

பத்ரி சொல்லியிருப்பதைப் போல விக்கியா அல்லது தரவுத்தளமா என்று பல நாட்களாக யோசித்ததை இங்கே உரக்கக் கூறுகிறேன்;

தரவுத்தளத்தின் நன்மைகள்

 • ஒழுங்கமைக்கப்பட்ட வடிவம், ஆசிரியர் பெயர், பதிப்பகம், புத்தகப் பெயர் என்று வடிவாக சேமிக்கலாம். இதை எந்த வகையில் வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்தலாம்.
 • இது எந்தவிதமான புறக்கருவிகளுக்கும் அப்பாற்பட்டது. உடனடியாக பிஹெச்பி-யில் ஒரு சிறிய நிரலி எழுதி தமிழ்மணம் பதிவர்கள் பட்டியலைப் போலக் காட்டமுடியும். வருங்காலத்திற்கு சிவராஜ் சொன்னதைப்போல எக்ஸெம்மெல் மூலம் இதன் உபயோகத்தை நீட்டிக்க முடியும். வேண்டுபவர்களுக்காக மைக்ரோஸாப்ட் எக்ஸெல் அட்டவணையாக எளிதில் மாற்றிக் கொள்ள முடியும். (உதாரணமாக)
 • பட்டியலை புத்தகப் பெயர், ஆசிரியர் பெயர், வருடம் என்று எப்படிவேண்டுமானாலும் ஏறுவரிசை, இறங்குவரிசையில் மாற்றி வெளியிடலாம்.
 • மேய்வது எளிதாக இருக்கும். தேடுவது மிக மிக எளிது

விக்கியின் குறைபாடுகள்

 • ஒழுங்கற்ற வடிவம். புத்தக, ஆசிரியர் விபரங்கள் இவற்றில் ஒழுங்கில்லாமல் சேகரிக்கப்படுகின்றன.
 • புத்தகத்தின் தலைப்பின்கீழ் ஆசிரியரைப் பற்றி ஒரு வரி எழுதவேண்டும். பிறகு ஆசிரியரின் பெயரின்கீழ் அந்தப் புத்தகத்தை நாமாகக் குறிப்பிட்டாக வேண்டும். இது இரட்டை வேலை
 • இது விக்கிக்குள் மாத்திரம்தான் செயல்படும். எக்ஸெல் அட்டவணையாக வேண்டினால் எடுப்பது கடினம்
 • பட்டியலிடுவது கடினம்

விக்கியின் நன்மைகள்

 • அதிக நுட்பம் தேவையில்லை. பெரும்பாலான கருவிகள் எளிதில் கிடைக்கின்றன
 • புதிதாகப் பங்களிக்க வருபவர்களுக்கு விக்கி கற்றுக் கொள்வது மிக, மிக எளிது
 • அட்டவணையை விட்டுவிட்டால் மற்றெல்லா உபயோகங்களும் சாத்தியமே. இதில் தரவுத்தளத்தில் முடியாத பல விஷயங்கள் சாத்தியம். உதாரணமாக, ஆசிரியரைப் பற்றிய நீண்ட குறிப்பு, புத்தக மேலட்டையின் படம்,… (இதெல்லாம் தரவுத்தளத்திலும் சாத்தியம் என்றாலும் மிக மிகச் சிக்கலானது
 • தரவுத்தளத்தில் அனுமதிச் சிக்கல்கள் இருக்கின்றன. யாராவது சிலர் முழுப்பொறுப்பு எடுத்துக் கொண்டாக வேண்டும். இப்படிக் குறைந்த பட்சம் பத்து நிர்வாகிகளாவது (ஓரளவுக்கு தரவுத்தள அமைப்பில் பரிச்சயம் தேவை) கிடைக்கவில்லை என்றால் இது துவக்க சடத்துவத்தைத் தாண்டிவருவது கஷ்டம்
 • தரவுத்தளத்தை எழுதி துவக்கப் பல நாட்களாகும். நான் இணையம் முழுவதும் சல்லடை போட்டுத் தேடிவிட்டேன். இதற்கான முன்னுதாரண தரவுத்தளம் திற்மூலமாக எங்கும் கிடைப்பதாகத் தெரியவில்லை. (பல இருக்கின்றன ஆனால் இவையெல்லாம் சிக்கலான்வை, தமிழுக்கு நேரடியாக ஏற்றவையல்ல, மாற்றியமைக்கச் செலவிடும் நேரத்தில் புதிதாக எழுதலாம்)
 • புதிதாக எழுதலாம் என்றால் தமிழில் இதற்கு நம்பிக்கையில்லை. பொதுவில் இந்தியர்கள் (இதை சகோதரத் தமிழர்களையும் சேர்த்து என்று படிக்கவும்) எந்தவிதமான ஆதார மென்கலன் திட்டங்களிலும் ஈடுபடுவதில்லை. உருப்படியாக ஒரு திறமூலத் திட்டம் கூட இந்தியர்களிடம் கிடையாது. எனவே தரையிலிருந்து ஆரம்பித்துப் புதிதாகக் கட்டியெழுப்புவதைப் பற்றி எனக்குப் பலத்த கவலை இருக்கிறது. (இதைச் செய்யும் அளவிற்கு எனக்கு மென்கலன் அறிவு கிடையாது. ஆனால் இதில் என்னென்ன தேவை, எப்படிச் செய்யலாம் என்று சொல்லும் திறமை ஓரளவுக்கு இருப்பதாக நம்புகிறேன்).

கூட்டிக் கழித்துப் பார்த்தால் நாளைக்கு எழும்பும் கோபுரமாக தமிழ்ப் புத்தகத் தரவுத்தளத்தைப் பற்றிக் கனவு கண்டு கொண்டிருப்பதைவிட இன்றைக்கு ஒரு விக்கி குடிசை கட்டலாம் என்று தோன்றுகிறது. இந்த இரட்டைக் கனவில் சில நன்மைகளும் இருக்கின்றன.

விக்கியும் தரவுத்தளமும் ஒன்றுக்கொன்று விலக்கானவை அல்ல, இவை ஒன்றையொன்று சார்ந்திருக்கமுடியும். உதாரணமாக இன்றைக்கு விக்கியில் நிறைய தகவல்களைப் போட்டுவைத்துவிட்டு நாளை ஒரு தரவுத்தளத்தை எழுப்ப இதையே பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு ஏற்ற வகையில்தான் நான் இப்பொழுதைய விக்கியை வடிவமைத்திருக்கிறேன். உதர்ரணமாக நாளை ஒரு சிறிய நிரலியை எழுதி விக்கிக்குள்ளே

ஆசிரியர் பெயர் | <-----> என்று வருவதை வெட்டி தரவுத்தளமாக மாற்ற முடியும். இதற்கு இப்பொழுதிலிருந்தே விக்கியில் ஒரு தீர்மானமான வடிவமுறையைப் பயன்படுத்தினால் போதும். நான் இப்பொழுது கிட்டத்தட்ட பத்து புத்தகங்களுக்கான தகவ்ல்களை உள்ளடக்கியிருக்கிறேன். இவை எல்லாமே ஒரே அட்டவணையைப் பயன்படுத்தி வெட்டி ஒட்டி, பின் மாற்றி எழுதியவைதான். இதையே தொடர்ந்து செய்துகொண்டிருந்தால் வருங்காலத்தில் எளிதாக ஒரு அற்புதமான தரவுத்தளத்தை இதிலிருந்தே எழுப்பமுடியும். தரவுத்தளம் அடிப்படைத் தகவல்களைத் தந்துவிட்டு புத்தகவிக்கியை மேலதிக விபரங்களுக்குச் சுட்டமுடியும். அதாவது விக்கியின் ஒரு பக்கம் தரவுத்தளத்தின் ஒரு தரவாக மாறமுடியும்.

இப்படியொரு நம்பிக்கை வந்தவுடன் நான் எந்த விக்கி என்று தேடினேன். அதில் இந்த எளிதான, சிக்கலற்ற டாக்குவிக்கி என்ற பொதியைத் தேர்ந்தெடுத்தேன். சிக்கலான மீடியாவிக்கி (விக்கிப்பீடியாவை இயக்கும் பொதி) இதற்குத் தேவையில்லை. நம் விபரங்கள் எல்லாமே வெற்று உரைவடிவில், அதிகபட்சமாக புத்தகத்தின் மேலட்டைக்குப் படம் போடும் வசதி தேவை. இதுவும் சாத்தியம். என்னுடைய குவாண்டம் கணினி புத்தகத்தின் மேலட்டையை உள்ளிட்டிருக்கிறேன்). இதைத் தாண்டிய அதிகச் சிக்கல்கள் இந்த விக்கிக்குத் தேவையில்லை. மென்கலன் உலகில் முக்கியக் கோட்பாடு “தேவையில்லாத அளவிற்கு மேல் சிக்கலைச் சேர்க்காதே”.

* * *

இது என்னுடைய உரத்த சிந்தனை. உங்கள் கருத்துக்கள் மிக, மிக முக்கியமானவை. பத்ரியின், ரவியின் பதிவில் இது தேவை என்று சொன்ன அனைவரையும் இந்த ஏற்பாட்டைப் பற்றிய குறைந்த பட்ச கருத்தையாவது எழுத வேண்டுகிறேன். (பிறரையும் எழுத அழைக்கிறேன் என்று சொல்லத் தேவையில்லை).

* * *

இது சரியாக வரும்பட்சத்தில் குறைந்தது நூறு வலைப்பதிவு நண்பர்கள் ஒரு நாளைக்கு ஒரு புத்தகம் வீதம் உள்ளீட்டால் (எனக்கு ஒரு புத்தகத் தகவலை எழுத மூன்று நிமிடங்கள் பிடிக்கின்றன). அடுத்த வாரத்தில் இதில் 700 புத்தகங்கள் பற்றிய தகவல் சேரும்.

கட்டாயமாக, ஈழநாதன், ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மதி, பத்ரி, சந்தோஷ்குரு, யக்ஞா, இப்படி ஏற்கனவே இதைப் பற்றி சிந்தித்து வைத்திருக்கும் நண்பர்கள் இதற்கு முன்வருவார்கள் என்று நம்புகிறேன். நாம் புத்தக மீமியில் எழுதிய நேரம்தான் இதற்குத் தேவை. ஒரு ஆயிரம் புத்தகம் சேர்ந்துவிட்டால் பின்னர் பதிப்பகங்களை அழைத்து உள்ளிடச் சொல்லலாம்.

விக்கிக்கு ஒரு கவர்ச்சி இருக்கிறது. நான் எழுதிய ஒரு பக்கம் விக்கிப்பீடியாவில் உலகம் முழுவதற்கும் தகவலைத் தருகிறது என்ற மனநிறைவுக்காகவே பலர் விக்கிப்பீடியாவில் எழுத முயற்சிக்கிறார்கள். இப்படி உலகிற்கு நான் இந்தப் புத்தகத்தைச் சொல்கிறேன் என்ற பெருமையை விக்கிப்பீடியா எளிதில் தரும். இது பெரும் உந்துசக்தியாக இருக்கும் என்று நம்புகிறேன்.