இந்த வார ஜுனியர் விகடனில் “புத்தாண்டில் புது சாதனை” என்று தலைப்பிடப்பட்டு இந்தியாவின் மத்திய தகவல் துறை மற்றும் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறனின் நேர்முகம் வெளியாகியிருக்கிறது. இதில் பல சாதனைகள் பட்டியலிட்டுத் தரப்பட்டிருக்கின்றன. (நேர்முகத்தின்படி அமைச்சரே பட்டியலைத் தயாரித்துக் கொண்டு வந்திருந்ததாகவும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிற கேள்விகளுக்கு முன் அதை ஒப்பித்ததாகவும் தெரியவருகிறது).

அமைச்சர் தயாநிதி மாறனின் பேட்டி (PDF கோப்பு வடிவில்)

<%image(20050418-maaran_jv.jpg|514|140|maa)%>

திரு. தயாநிதி மாறன் வயதில் இளையவர். மிகச் சிறியவயதில் அவருடைய பல தகுதிகளின் காரணமாக வெகுவாக வளர்ந்து மத்தியில் காபினெட் அந்தஸ்து அமைச்சரானவர். (இந்தியாவின் இன்றைய நிலையில் தகவல் மற்றும் தொலைதொடர்பு மிக மிக முக்கியமான ஒரு அமைச்சு). இந்தியாவின் எதிர்காலமாக இந்திய மற்றும் உலகளாவிய ஊடகங்களில் சுட்டப்படுபவர். தன்னார்வலர்களின் முயற்சியில் உருவானவற்றை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வரும் அரசு நிறுவனத்தின் சாதனையாகக் காட்டும் இவருடைய பட்டியல் வேதனையைத் தருவதாக இருக்கிறது.

நானறிந்த வகையில் இதில் இருக்கும் முக்கிய மென்கலன் – மோஸிலா பவுண்டேஷனைச் சேர்ந்த ஃபயர்ஃபாக்ஸ் உலாவி மற்றும் ஓப்பன் ஆபீஸின் தமிழ்ப்படுத்தப்பட்ட வடிவமான பாரதீய ஓப்பன் ஆபீஸ். இரண்டுமே தமிழா குழுவினர் முன்னெடுத்துச் செய்தவை. (நண்பர் முகுந்த் தமிழா குழுவை முன்னின்று நடத்துகிறார்). ஒப்பன் ஆபீஸ் தமிழாக்கத்தில் ழ-கணினி குழுவினருக்கும் பங்கிருக்கிறது. இவற்றிலெல்லாம் சீ-டாக் குழுவினர் எதுவும் பெரிதாகச் செய்ததாகத் தெரியவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக தயாநிதி மாறன் தமிழில் ஓப்பன் ஆபீஸ் வழித்தோன்றலை சீ-டாக்குடன் சேர்ந்து “மைக்ரோஸாப்ட்” வடிவமைத்ததாகச் சொல்லியிருக்கிறார். இந்தியாவின் தகவல் துறை அமைச்சருக்கு திற மூலச் செயலிகள், அவற்றை மைக்ரோஸாப்ட் தன்னுடைய முதல் எதிரிகளாகக் கருதுவது. எப்பாடு பட்டாவது அவற்றை அழிக்கத் தீவிரமாக முயல்வது, இவற்றையெல்லாம் மீறி ஃபயர்ஃபாக்ஸ், ஒப்பன் ஆபீஸ், லினக்ஸ் போன்றவை வெகுவாக வளர்ந்துவருவது இவற்றைப் பற்றிய குறைந்தபட்ச தகவல்கூட இருப்பதாகத் தெரியவில்லை.

பொதுவில் கணினி விற்பன்னர்களின் உலகம் என்று அறியப்படும் இந்தியாவில் தங்களுடைய சுயதேவையைக் கருத்தில் கொள்பவர்கள் யாரும் இல்லை. உலகெங்கும் நடக்கும் திறமூல முயற்சிகளில் இந்தியர்களின் பங்களிப்பு மிக, மிகக் குறைவு (கேவலமான அளவில்). குறைந்தபட்சம் ஆர்வமுள்ள சிலர் இந்தப் பன்னாட்டு முயற்சிகளுடன் இணைந்து “உள்ளூர்மயமாக்கல்” (localization) என்ற அடிப்படையில் இந்த அற்புத, விலையற்ற கருவிகளை நம் மக்களுக்காகத் தமிழ்ப்படுத்தி வருகிறார்கள். இதன் இடையில் இந்தியாவின் தகவல் துறை அமைச்சர் இதெல்லாம் என்னுடைய அமைச்சகம் செய்தது, மைக்ரோஸாப்ட் இந்தியர்களுக்கு (தமிழர்களுக்கு) அளிக்கும் கொடை என்ற ரீதியில் பேசுவது அபத்தத்தின் உச்சகட்டம்.

வெளியாகியிருக்கும் சீ-டாக்கின் குறுவட்டுத் தொகுப்பை முழுமையாகப் பார்வையிட்டு மேற்கொண்டு இந்த அறிவுத் திருட்டு விபரங்களை எழுதுகிறேன்.

(நன்றி: இந்த பேட்டியை எனக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே சிங்கப்பூரிலிருந்து என் நண்பர் திரு சரவணன் அனுப்பியிருந்தார். என்னுடைய மின்னஞ்சல் பொதி அவரிடமிருந்து வந்த அனைத்து அஞ்சல்களையும் எரிதப் பெட்டியில் தள்ளிவிட இன்றைக்குத்தான் என்னால் பார்வையிட முடிந்தது. காலதாமதமான இந்தப் பதிவுக்காக மன்னிப்பும், பேட்டியைச் சுட்டியதற்காக நன்றிகளையும் சரவணனுக்குச் சொல்ல நான் கடமைப்பட்டவன்).