discovery_shuttle

இன்று காலை நாஸாவின் டிஸ்கவரி விண்ணோடம் வெற்றிகரமாக ஏவப்பட்டிருக்கிறது. இது இரண்டு நாட்கள் வானத்தில் இருக்கப்போகிறது. இது நாள்வரை ஏவப்பட்ட விண்கலன்களிலேயே மிகவும் அதிகமாகக் கண்காணிக்கப்படுவது இதுதான். இதற்குக் காரணம் முந்தைய கொலம்பியா விண்ணோடம் வானில் வெடித்தது. உண்மையில் இந்தமுறை விண்ணோடம் என்ன செய்யப்போகிறது என்பதைவிட எப்படித் திரும்பி வரப்போகிறது என்றுதான் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கபடி விளையாட்டில் முக்கிய ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்த நிலையில் கடைசியாக இருக்கும் நோஞ்சான் ஆள் பாடிச் சென்றால் அவர் எத்தனைபேரை அவுட் ஆக்குவார் என்பதைவிட ஏறுகோட்டைத் தொட்டுவிட்டு பத்திரமாகத் திரும்பிவருவாரா என்றுதான் எதிர்பார்ப்பார்கள். கிட்டத்தட்ட டிஸ்கவரி அந்த நோஞ்சான் ஆட்டக்காரராகத்தான் தோற்றமளிக்கிறது.

எனவேதான் இதை ஒரு முடிவின் ஆரம்பம் என்று தலைப்பிட்டேன். நாஸாவின் விண்ணோடத் திட்டத்தின் முக்கிய அதிகாரி மைக்கேல் கிரிஃப்பின் கூற்றுப்படி கொலம்பியாவும், சேலஞ்சரும் வெடித்துச் சிதறியதில் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை. ஒரு வகையில் அது எதிர்பார்க்கப்பட்டதுதான். கிரிஃப்பின் அடிப்படையிலேயே விண்ணோடத்தின் அமைப்பு ஆபத்தானது என்று சொல்கிறார். நாஸா 2010 ஆம் ஆண்டு வாக்கில் தன்னுடைய விண்ணோடத் திட்டத்தை நிறுத்திவிடப்போகிறது. கடைசி கட்டமாக இன்னும் சில பயணங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று நம்புகிறார்கள் (அதுவும் இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்தது).

ஆச்சரியமான விஷயம் – முதலில் ஏவப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து இப்பொழுது ஒரு விண்ணோடம் சோதனை ஒட்டத்தை மேற்கொண்டிருக்கிறது. அதாவது – பத்திரமாகத் திரும்பி வருமா வராதா என்பதே முதற்கேள்வியாக இருக்கிறது. இந்தத் திட்டத்தில் பல பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டிருக்கின்றன. மனிதனை வானத்திற்கு அனுப்பும் திட்டங்கள் தேவையில்லாதவை என்று பலரும் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்குக் காரணமும் இருக்கிறது சமீபத்திய நாஸா வரலாற்றில் ஆளில்லாமல், ரோபோட்டுகளைக் கொண்டு நடத்தப்பட்ட செவ்வாய் ஆய்வு முயற்சிகள் அற்புத பலனைத் தந்திருக்கின்றன. ஆரம்பகட்ட சிக்கலுக்குப் பிறகு ஹப்பிள் தொலைநோக்கியும் அற்புதத் தகவல்களைத் தந்துகொண்டிருக்கிறது. மாறாக 25 வயதான விண்ணோடம் இந்த முறை முக்கியமாகச் செய்யப்போகிற காரியம், மேலே போனவுடன் மல்லாந்து படுத்துக் கொள்வது. விஞ்ஞானிகள் வெளியே வந்து எங்கேயாவது பட்டையாக உரிந்திருக்கிறதா, ஏதாவது ஓடு பெயர்ந்திருக்கிறதா என்று பார்ப்பார்கள். அதாவது இந்தத் திட்டத்தின் நோக்கமே மேலே போய் காயம் பட்டுக் கொள்வது, அங்கேயே காயத்திற்கு மருந்து வைத்து கட்டு போட்டுத் திரும்பிவருவது. இதற்கு பல பில்லியன் டாலர்கள் செலவாகின்றன. கூடவே இதில் அற்புதமான அறிவுள்ள மனிதர்களின் உயிரும் பணயம் வைக்கப்படுகிறது.

இப்படியெல்லாம் தேவையில்லாம, குட்டி குட்டியாக பல ரோபோட்டுகளை, ஒரு சில செயல்களை மாத்திரமே செய்ய, துல்லியமாக வடிவமைத்து அனுப்புவது. அதை வைத்துக் கொண்டு பல தகவல்களைப் பெறுவது இன்னும் புத்திசாலித்தனம். மாபெரும் விண்ணோடத்தை அனுப்பி, அதற்குப் பல பில்லியன்கள் செலவு செய்து அது திரும்புமா என்று காத்திருப்பதைவிட அவ்வப்பொழுது சிறுசிறு ரோபோட்டுகளை அனுப்புவது நல்லது. ஆனால் அரசியல் ஆதாயங்களுக்கு ரோபோட்டுகள் அதிகம் உதவப்போவதில்லை. இப்போதைக்குத் தொடர்ச்சியாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ஒரே நாடாக அமெரிக்கா இருக்கிறது. இந்த அற்புதமான தகுதியை இழப்பது அவர்களுக்கு சீரணிக்க முடியாத ஒன்று. ஆனால் என்ன செய்வது, இன்றைய நுட்ப வளர்ச்சியில் மனிதனை வைத்துக்கொண்டுதான் எல்லாம் செய்வேன் என்று சொல்லிக்கொண்டிருப்பது வறட்டுப் பிடிவாதம்.

நாஸாவிற்கு இது முக்கியமான சோதனை. இதன் முடிவு அதன் வருங்காலத் திட்டங்களின் போக்கையே மாற்றியமைக்கப்போகிறது.