ஃப்ளோரிடா மாநிலத்தில் தன்னுடைய காரில் உட்கார்ந்துகொண்டு இன்னொருவர் வீட்டிலிருந்து வரும் கம்பியில்லா இணைய இணைப்பைப் பயன்படுத்தியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது . திருட்டுத்தனமாக பிறருடைய சொத்தில் கைவைப்பதை எதிர்க்கும் நான், அதே சமயத்தில் இந்த கைது மடத்தனம் என்று எண்ணுகிறேன்.

இப்பொழுது பல முன்னேறிய நாடுகளில் வீடுகளில் கம்பியில்லா இணைப்பைப் பயன்படுத்துகிறார்கள். பெரிய வீடுகள், மூன்றடுக்கு வீடுகள் (மாடி, தரைநிலை, நிலவறை), வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள், மடிக்கணினிகளின் பெருக்கம் போன்றவை அதிகரித்திருப்பதால் கம்பியில்லா இணைப்பு மிகவும் பிரபலமாகியிருக்கிறது. வீட்டின் புழக்கடையில் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு, நல்ல காற்றை அனுபவத்துக்கொண்டு, மடிக்கணினியில் பாட்டு கேட்டுக் கொண்டு, வலைப்பதிவை எழுதுவது இனிமையான அனுபவம்தாம். கம்பியில்லா இணைய இணைப்பு, அகலப்பாட்டை இணைய வசதி இவை அமெரிக்காவில் இப்பொழுதுதான் பிரபலமாகிவருகின்றன. அண்டை நாடான எங்கள் கனடாவில் இவை மிகவும் பிரபலம், மலிவும் கூட. கொரியா, ஜப்பான், ஃபின்லாந்து போன்ற நாடுகள் வழக்கம்போல் இந்த விஷயத்தில் மிக முன்னேறியிருக்கின்றன. இனி வழக்கு விஷயத்திற்கு வருவோம்.

தெருவில் இருந்துகொண்டு வேறொருவர் இணைய வசதியைத் திருடினார் என்பது குற்றச்சாட்டு. ஆனால் பலரும் பல இடங்களிலும் இப்படிச் செய்வது மிகச் சாதாரணம். உதாரணமாக, கம்பியில்லா வழிச்செலுத்தியை (Wireless Router) வைத்திருப்பவர்களில் பலர் அதற்குத் தேவையான பாதுகாப்புகளைச் செய்வதில்லை. இணையத்துடன் இணைந்தால் போதும் என்று நிறுத்திவிடுகிறார்கள். எனவே பலருடைய வீட்டிலும் அவர்களது கம்பியற்ற வலையின் பெயர் ‘Default’ ‘linksys’ ‘netgear’ போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கிறது. இதைப் பயன்படுத்த எந்தவித அதீத எத்தனங்களும் தேவையில்லை, ஒற்றை பொத்தானில் அழுத்தி “இணை’ என்று சொன்னால் போதும் உடனடியாக வலையலாம்.
என்னுடைய நண்பர் ஒருவர் வீட்டிற்கு கம்பியில்லா வழிச்செலுத்தியை நிறுவித்தர சென்றிருந்தபொழுது என் மடிக்கணினியில் ‘default’ என்ற பெயர் கொண்ட அவருடைய வலையில் தற்காலிகமாக என் மடிக்கணினியை இணைத்திருந்தேன். மறுநாள் வீட்டில் புழக்கடையில் உட்கார்ந்துகொண்டு வலைந்துகொண்டிருந்தபொழுது என் வீட்டு இசைவழங்கி கணினியில் இருக்கும் பாட்டைத் தேடினால் கிடைக்கவில்லை. முழுக்கத் தேடிப்பார்த்ததில் என்னுடைய வீட்டு வலையில் இணைவதற்குப் பதிலாக கொல்லைத்தெருவில் இருக்கும் நண்பர் வீட்டு ‘default’ வலையில் இணைந்திருக்கிறது என் கணினி. என்வீட்டுப் புழக்கடையில் உட்கார்ந்தால் குறைந்தபட்சம் ஆறு அல்லது ஏழு வீடுகளில் இருக்கும் வலைகளைப் பார்க்கமுடியும். இவற்றில் மூன்று எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாதவை’ யாராலும் எளிதில் பயன்படுத்த முடியும். இவற்றில் இரண்டு நண்பர்களிடம் இதன் அபாயத்தைச் சொல்லி பாதுகாப்பு செய்யுங்கள், வேண்டுமானால் நான் உதவி செய்யத் தயார் என்றுகூட சொன்னேன். “ஆங், செய்யனும்…, செய்யலாம்…. உங்கள கூப்புட்றேன், எனக்கு இதெல்லாம் தெரியாது. நீங்கதான் உதவனும்” என்றெல்லாம் சொன்னார்கள். சொல்லி மூன்றுமாதங்களாகின்றன. இன்னும் அவர்கள் அழைக்கவில்லை.

பிறருடைய கம்பியில்லா வலையைப் பயன்படுத்தி சிறுவர் பாலியல் படங்களைப் பார்க்கிறார்கள்; சேர்க்கிறார்கள் என்பதுதான் இதிலிருக்கும் முக்கிய குற்றச்சாட்டு. ஆனால் இந்தக் குற்றத்தில் நிறைய பேருக்கு பங்கிருக்கிறது. நாயகன் முதலியாரைப் போல “அவன நெறுத்தச் சொல்லு; நான் நெறுத்தறேன்” என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

1. தன்னுடைய வீட்டிற்கு கம்பியற்ற வலையை உருவாக்கியவர்கள் அதைப் பாதுகாப்பு செய்யாதது தவறு. ஒருவகையில் பாதுகாப்பற்ற தகவலை வானலையில் பரப்புவது குற்றம்தானே.

2. பயன் எளிமை கருதி மைக்ரோஸாப்ட் எக்ஸ்பி போன்ற இயக்குதளங்களை எந்தவிதமன வலைகளுடனும் தானாக இணைத்துக் கொள்வதாக வடிவமைத்த மைக்ரோஸாப்ட்டுக்கும் இந்தத் தவறில் பங்குண்டு. (ஆப்பிளில் எப்படி என்று தெரியவில்லை. லினக்ஸில் இதெல்லாம் சாத்தியமில்லை). ஒருவகையில் இது தொழில்நுட்பம் தெரியாதவர்கள்கூட குற்றம் செய்ய வசதி செய்துகொடுத்ததைப் போலாகிறது.

3. முன்பின் தெரியாதவர்களிடம், அவர்கள் அனுமதியின்றி அவர்கள் வலையில் இணைவது குற்றம்.

4. ஆனால் வேறொரு சந்தர்ப்பத்தில் அதே பெயர் கொண்ட வலையில் இணைந்திருந்து அவர்கள் அறியாமலேயே இதைச் செய்தால் – பிதாவே, இன்னதென்று அறியாமலேயே செய்கிறார்கள் இவர்களை மன்னியும் என்றுதான் இறைஞ்சத் தோன்றுகிறது.

5. இதுபோன்ற விஷயங்களில் முறையான சட்டங்களை உருவாக்காமல், அதன் சிக்கல்களை உணராமல், சராசரி பொதுமக்களுக்கும் அறிவுறுத்தாமல் இருக்கும் அரசுகளுக்கும் குற்றத்தில் பங்கிருக்கிறது.

இப்படியெல்லாம் இருக்க, பொத்தாம் பொதுவாக மாட்டிக்கொண்ட ஒருவரை பிடித்துப்போடுவது அபத்தம். பொதுவில் தொழில்நுட்பங்களுக்கு சமூகத்தில் இப்படியான வரவேற்பு கிடைபப்தைப் பார்க்கையில் கோபம்தான் வருகிறது. தொழில்நுட்பத்தைத் துய்ப்பவர்களின் மனங்களில் குற்ற உணர்வை விதைப்பது அநியாயம்.

இப்படியே கொஞ்சம் நாட்களுக்கு கம்பியில்லா இணைப்பைப்பற்றிய தவறான பிரச்சாரத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தால் இதுவும் எம்பி3 என்பதைப் போல கெட்ட வார்த்தையாக மாற்றப்படும் சாத்தியம் இருக்கிறது. இதை ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டும்.