சமீபத்தில் என்னிடம் சிலபேர் உன்னுடைய domesticatedonion.net தளத்தை எப்படி உருவாக்கினாய்? இதைப் போல நானும் சொந்தத்தில் இணையதளம் வைத்துக் கொள்வது எப்படி என்று கேட்டிருந்தார்கள். அவர்களுக்குப் பதில் தரும் முகமாகவும் தமிழ் வலைப்பதிவு விக்கியை வளப்படுத்துவதற்காகவும் இந்தக் குறிப்பை எழுதுகிறேன். சொந்த வலைப்பதிவு அமைப்பதைப் பற்றி என்றாலும் இது பொதுவில் வலைப்பதிவு கடந்த விஷயங்களையும் தொடுகிறது.

பல நாட்களாக ஒத்திப் போட்டுக்கொண்டிருந்த இதற்கான இன்றைய வினையூக்கி மூக்கு சுந்தரின் இந்த வலைக்குறிப்பு. நன்றி சுந்தர்.

தனக்கென்று இணையதளம் வைத்துக் கொள்வதன் நன்மைகள் என்ன?

1. அடையாளம். உங்கள் பெயருடன் ஆளுமையுடன் இணைத்துப் பேச மின்வெளியில் ஒரு தளம்.

2. உங்களுக்கு வேண்டிய விஷயங்களைத் திரட்டும் வசதி; பிறருடன் பகிர்ந்துகொள்ளும் விஷயங்களை நேரடியாகப் பிறர், தயவின்றி பரிமாறிக்கொள்ளும் வசதி.

3. நிரந்தர மின்னஞ்சல் முகவரி. மாறும் மின்வெளியில் ஓரளவுக்கு நிரந்தரமான அடையாளத்துடன் மின்னஞ்சல் பெறும்/அனுப்பும் வசதி.

4. இலவசச் சேவைகள் ஒருநாள் மாயமாக மறைந்துபோகும் அபாயம் எப்பொழுதும் உண்டு. நிச்சயமின்மையைக் குறைக்க சொந்த தளம் உதவும்.

5. உங்களுக்குத் இணையம்/கணினி சார்ந்த நுட்பங்களில் ஆர்வம் இருந்தால் அவற்றுடன் விளையாடிப் பார்க்க ஒரு வழி.

6. சும்மா..

சொந்தத்தில் இணையதளம் வைத்துக் கொள்வது அவ்வளவு சிக்கலான விஷயம் கிடையாது.

அ. இணையதளம் பதிவு செய்தல்

1. முதலில் உங்களுக்குப் பிடித்தமான பெயரைத் தெரிந்தெடுங்கள். பலரும் முதலில் தெரிவு செய்யும் விஷயம் அவர்களுடைய சொந்தப் பெயர்தான் (பல பெயர்களின் அடிப்படையிலான தளங்கள் ஏற்கனவே பிறரால் கைகொள்ளப்பட்டிருக்கும்). உதாரணமாக நான் தெரிந்தெடுத்த பெயர் domesticatedonion (கேட்பவர் முகத்தில் உடனே ஒரு நொடி புன்னகை வர வேண்டும் என்பது என் விருப்பம்). நீங்கள் உங்கள் பெயர், உங்கள் மாமனார் பெயர், நாய்க்குட்டியின் பெயர், பள்ளிப்பருவத் தோழி/தோழன் பெயர், என எது விருப்பமோ அதைக் குறித்துக் கொள்ளுங்கள். எதற்கும் இரண்டு மூன்று பெயர்கள் கைவசம் இருக்கட்டும். (ஒன்று கிடைக்கவில்லை என்றால் வேறொன்று). பின் அதை எந்த முதன்மை புலத்துடன் இணைக்க விருப்பம் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். .காம், .ஆர்க், .நெட்,…

நம்முடைய உதாரணத்திற்கு coovam.org என்ற இணைய தளத்தை வைத்துக் கொள்வோம்.

2. அடுத்ததாக உங்கள் தெரிவு இப்பொழுது உங்களுக்குக் கிடைக்குமா அல்லது வேறு யாராவது இதைப் பதிவு செய்திருக்கிறார்களா என்று சோதிக்க வேண்டும். இதைப் பல தளங்களின் மூலம் சோதிக்க முடியும். உதாரணமாக 1and1.com சென்று அங்கிருக்கும் பெட்டியில் உங்கள் தெரிவை உள்ளிட்டால் இது கிடைக்கிறதா என்பது தெரியும். கூவம்.நெட் கிடைக்கிறது என்று பதில் வரும். (ஆசப்பட்டது கெடைக்கலன்னா கெடைக்கறதுக்கு ஆசப்படனுன்னு தமிழ் சினிமா வசனத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்).

3. பல நிறுவனங்கள் வலைத் தளத்தின் பெயரைப் பதிவு செய்கின்றன. இவற்றின் நம்பகத்தன்மை மிகவும் முக்கியம். அதேபோல பதிவு செய்யும் ஒரே சேவைக்கு ஐந்து டாலர் தொடங்கி ஐம்பது டாலர் வரை வசூலிப்பவர்கள் இருக்கிறார்கள். என்னுடைய தேடல் அனுபவத்தில் மேலே சொன்ன 1and1.com ஓரளவுக்கு நல்ல சேவை, குறைந்த கட்டணத்தில் தருகிறது. நான் என்னுடைய தளத்தை வருடத்திற்கு ஆறு டாலர்களுக்குப் பதிவு செய்தேன். பல நிறுவனங்கள் நேரடியான மின்வணிக வசதி மூலம் (கடன் அட்டை) உடனடியாக பதிவு செய்கின்றன.

4. பதிவு நிறுவனத்திற்கு இதைச் செய்து முடிக்க 24 மணி நேரம் ஆகக் கூடும். அதன் பிறகு இந்தத் தளம் உங்கள் பெயரில் உறுதியாக நிச்சயமாகும்.

பெயர் கிடைத்துவிட்டது. இனி தளத்தை எப்படி உருவாக்குவது? இதற்குப் பல வழிகள் இருக்கின்றன. இவற்றைப் பற்றி அடுத்ததாக எழுதுகிறேன்.