நேற்று திருவாளர் புஷ் இன்னொரு முறை திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் . இந்த முறை பள்ளிக்கூடங்களில் பரிணாமக் கோட்பாட்டின் கூடவே சேதன வடிவாக்கக் கொள்கை (Intelligent Design Theory) யையும் சேர்த்து அறிவியல் பாடமாகப் படிப்பிக்க வேண்டும் என்று சொல்கிறார்.

கொஞ்சம் நாட்களாகவே (கிறிஸ்துவ)மதவாதிகளின் கை அமெரிக்காவில் ஓங்கி வருகிறது. ( என்னுடைய பழைய பதிவு ) 9/11-க்குப் பின்னான சூழலைப் பயன்படுத்தி தங்கள் கொள்கைகளை உயர்ந்ததாகப் பறைசாற்றிக் கொள்ளவும், பரப்பவும் அடிப்படைவாதிகள் தீவிரமாக முயன்று வருகிறார்கள். முந்தைய போப் ஒருவழியாக “பரிணாமக் கொள்கையை முற்றாக ஒதுக்கக் கூடாது” என்று அரைமனதோடு அங்கீகரித்திருந்தார். பின்னர் புதிய போப் கார்டினல் ராட்ஸிகராக இருந்தபொழுது பரிணாமத்தை ஒத்துக் கொள்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சொன்னதாகப் பரவலாக அறியப்பட்டது. ஆனால் இந்தப் போப்பின் ஆட்சியில் முக்கிய இறையியல் தத்துவவாதிகளுள் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரிய கார்டினல் கிறிஸ்டோஃப் ஷோன்போர்ன் (Cardinal Christoph Schonborn) போப் பெனிடிக்டின் வார்த்தைகளுக்குச் சென்ற மாதம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் “அப்படியெல்லாம் இல்லை. மனிதனின் படைப்பு உன்னதமானது, தனித்துவமானது என்பதில் இன்றைய போப்பிற்கு எந்தவித மறுகருத்தும் கிடையாது” பரிணாமம் எல்லாம் குப்பை என்று வியாக்கியானம் எழுதினார் .

வாஷிங்கடன் போஸ்ட்டில் ;

“Both sides ought to be properly taught . . . so people can understand what the debate is about,” he said, according to an official transcript of the session. Bush added: “Part of education is to expose people to different schools of thought. . . . You’re asking me whether or not people ought to be exposed to different ideas, and the answer is yes.”

என்று புஷ் சொன்னதாக வெளியாகியிருக்கிறது. சமீபகாலத்தில் அமெரிக்க அடிப்படைவாதிகள் கருத்துரிமை என்ற பெயரில் படைப்பாக்கம் (Creationism) என்று அறியப்பட்டிருந்த பழைய கள்ளு இறையியல் கொள்கையை சேதன வடிவாக்கம் என்ற புதிய போத்தலில் அடைத்து பரபரப்பாக விற்பனை செய்துவருகிறார்கள். இவர்கள் பரிணாமம் அறிவியல் இல்லை என்ற ரீதியில் பரப்பி வருகிறார்கள். அமெரிக்க அறிவியல் காட்சிசாலைகளில் படைப்பாக்கம் பற்றிய கருத்துக்களை “அறிவியல் மாற்றுக் கொள்கை” (Alternate Scientific Theory) என்று சிறுவர்களுக்குப் போதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் பெரியவர் புஷ் அரசு ரீதியாக இதற்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறார். உண்மையில் பரிணாமத்திற்கு அபரிமிதமான அறிவியல் சான்றுகள் இருக்கின்றன. மாறாக படைப்பாக்கத்திற்கு அறிவியல் சட்டகத்தில் இடமேயில்லை. பல கேள்விகளை அது தவிர்க்கிறது.

மாறு கருத்துக்கள் வரவேற்கப்பட வேண்டியவைதான். ஏற்கனவே இந்த மாறு கருத்தான படைப்பாக்கத்தை இறையியல் வகுப்புகளில் உரக்கவே போதித்து வருகிறார்கள். இதைத் தவிர தேவாலயங்களும் இவற்றைத் தீவிரமாகப் பரப்பிவருகின்றன. இதற்கெல்லாம் யாரும் மறுப்பு சொல்லப் போவதில்லை. ஆனால் இதை அறிவியல் என்று அடையாளம் காட்டுவது முழுப் பம்மாத்து.

தான் ஆட்சியை விட்டுப் போவதற்குள் புஷ் அமெரிக்காவை ஒரு பத்துவருடமாவது பின்னால் தள்ளிவைத்து விட்டுத்தான் போவார். ஆச்சரிமான விஷயம் என்னவென்றால் இதற்கு அமெரிக்காவில் உள்ள அறிவியலாளர்கள் பொங்கியெழவில்லை. இன்றைய அமெரிக்காவில் அரசிற்கு எதிர்கருத்து சொல்வது மிகவும் கஷ்டமாகிவருகிறது.

அமெரிக்காவை ஆண்டவன்தான் இரட்சிக்க வேண்டும்.