இன்றைக்கு வெளியான செய்தியின்படி சன் மைக்ரோஸிஸ்டம்ஸ் நிறுவனம் தன்னுடைய சோலாரிஸ் இயக்குதளத்தை திறமூலமாக்கியிருக்கிறது . ஓப்பன் சோலாரிஸ் என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின்படி கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் நிரல் வரிகள் திறந்து காட்டப்பட்டிருக்கின்றன. இது திறமூல வரலாற்றில், ஏன் கணினி வரலாற்றிலேயே முக்கியமான ஒரு நிகழ்வு என்று நம்புகிறேன்.

சில மாதங்களாகவே சன் தன்னுடைய இயக்குதளத்தை திறமூலம் ஆக்கப்போவதாகச் சொல்லிவந்தது. கூடவே சன்னின் பிற முக்கிய கருவிகள்(குறிப்பாக ஜாவா -வை) திறக்கச் சொல்லி பலரும் வற்புறுத்தினார்கள் ( என்னுடைய பழைய பதிவு). திற மூல வழிகளுக்கு மாற தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதாக ஐபிஎம் சன்-னுக்கு வாக்களித்தது. ஆனாலும் சோலாரிஸ் திறமூலமாகும் என்று பலருக்கும் நம்பிக்கை இல்லை (எனக்கு 65% நம்பிக்கை இருந்தது). இன்றைய நிலையில் சன் தன்னுடைய நிறுவன வரலாற்றிலேயே மிக, மிக மோசமான நிலையில் இருக்கிறது. ஒருபுறம் வழங்கிகள் சந்தையில் லினக்ஸின் தொடர்ச்சியான வளர்ச்சி. ஐபிஎம் நாவெல்-சூஸி லினக்ஸ்க்கும், டெல் -ரெட்ஹாட்க்கும் நிறைய பண உதவியை சமீபத்தில் அறிவித்தன. மறுபுறம் மைக்ரோஸாப்ட்டின் பினாமியாக நின்று லினக்ஸை உலகைப் பயமுறுத்திவரும் ஸ்கோ-வின் எத்தனங்கள் லினக்ஸிடம் பலிக்காமல் போகின்றன. இந்த வழக்கில் சன்-னும் மைக்ரோஸாப்ட்டுடன் கைகோர்த்து ஸ்கோ மூலமாக லினக்ஸை ஒழித்துக் கட்டலாம் என்று நினைத்தது. சன் அபரிமிதமான தொகையை ஸ்கோவுக்கு உரிமைப்பணமாக வழங்கியது (ஐபிஎம் மீதான லினக்ஸ் வழக்குக்குப் பணவுதவி என்று படிக்கலாம்). ஆனால், லினக்ஸ் என்னமோ தேங்குவதாகத் தெரியவில்லை.

மைக்ரோஸாப்ட்டும் வழங்கிகள் உலகில் நல்ல நிலையில் இருக்கிறது (ஆனால் லினக்ஸைப் போலப் பெரிதாக வளரவில்லை). சன் கடந்த வருடம் பல விஷயங்களில் மைக்ரோஸாப்ட்டுடன் கைகோர்த்துக் கொண்டது ( சன்னலும் சூரியனும் சமரசம் – பழைய பதிவு). குறிப்பாக இணையச் சேவைகளுக்கு மைக்ரோஸாப்ட்டின் பாஸ்போர்ட் கடவு முறையைப் பயன்படுத்துவது. ஆனால் இதெல்லாம் சல்லிக்காசுக்கும் பிரயோசனமில்லாமல் போய்விட்டது. இந்த நிலையில் சன் இனி திறமூல வழிகளை நாடுவதே ஒரே தீர்வாகத் தோன்றியது. அதுதான் இப்பொழுது நடந்திருக்கிறது.

சரி, இந்த திறந்த சோலாரிஸ் இயக்குதளத்தால் என்ன நன்மைகள் கிடைக்கலாம்:

1. ஐந்து மில்லியன் நிரல்வரிகள் இருக்கின்றன. இவை அனைத்தும் தகவல்கள். இந்தத் தகவல்கள் இனிமேல் நிரலெழுதும் சமூகத்திற்குப் (இந்த திறந்த வழிகளில் நம்பிக்கையில்லாத மைக்ரோஸாப்ட் உட்பட) பயன்படும். அதிக பலன் லினக்ஸ் நிரலர்களுக்கு. இதை அப்படியே காப்பியடிக்காவிட்டாலும், இதன் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு அற்புத நிரலிகள் உருவாகக் கூடும்.

2. சன்னின் சில கருவிகள் அற்புதமானவை. குறிப்பாக நிலைதுவக்கும் முறை லினக்ஸ், விண்டோஸ் போல அல்லாமல் அதிவிரைவாக சோலாரிஸில் செயல்படுத்தப்படுகிறது. இதன் வழிமுறைகள் இப்பொழுது எல்லாருக்கும் தெரியும்.

3. சோலாரிஸ் இயக்குதளம் மிகவும் நிலையானது. இதில் ஆபத்துக்கள் வரும்பொழுது சுயதிருத்தம் செய்துகொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் (மைக்ரோஸாப்ட் இயக்குதளங்களைப் போல கணினி தொங்குவது குறைவு). இதன் இரகசியங்கள் இப்பொழுது வெளிவந்திருக்கின்றன.

4. சோலாரிஸ் திறமூலம் ஆனாலும் இதன் முழுக்கட்டுப்பாடும் சன் மைக்ரோஸிஸ்டத்திடம்தான் இருக்கப்போகிறது. அதாவது நிரலர்கள் பங்களித்தாலும் அது சன்- பெரியவர்களின் ஆசியைப் பெற்றே உள்ளேவரும். ஆனால் நாளடைவில் இது தனியாகக் கிளைத்து தனிக்கட்டுபாடற்ற சோலாரிஸ் குழந்தை ஒன்று உருவாகக்கூடும். அது முழுக்க முழுக்க திறமூல வழிகளில் செயல்படும் (உதாரணம் நெட்ஸ்கேப் நாவிகேட்டர் திறக்கப்பட்டதும் அதன்பின் வணிகச் சாத்தியங்களால் நெட்ஸ்கேப் அழிந்தாலும் அதன் வழித்தோன்றலான ·ப்யர்·பாக்ஸ் சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் பினிக்ஸ் போல மைக்ரோஸாப்ட்டுக்குச் சவால் விட்டு நிற்பது).

5. சொல்லத் தேவையில்லை – சன் நிறுவனத்திற்கே இது நல்லது. உலகெங்கிலும் இருக்கும் சோலாரிஸ் பயனர்கள் இதை முன்னேற்றுவது சன்னின் வளர்ச்சிக்கு உதவக்கூடும்.

திறமூலமாக மாறுவது சன்னுக்கு எளிதாக இருந்திருக்காது. காரணம், காப்புரிமை உலகின் உச்சமான யுனிக்ஸில் நிறைய நிறுவனங்களின் காப்புரிமைபெற்ற பகுதிகள் இருக்கின்றன. இவற்றை சன் உரிமைத்தொகை கொடுத்து பயன்படுத்தி வருகிறது (உதாரணமாக ஸ்கோ நிறுவனத்தின் காப்புரிமைக்கு சன் பணம் தருகிறது). இப்படி மூன்றாம் நிறுவனத்தின் இரகசியங்களை சன் வெளியே காட்டமுடியாது. எனவே இதில் இருக்கும் சட்டச் சிக்கல்களை எல்லாம் தெளிவாக ஆராய்ந்துதான் சன் இதை வெளியிட்டாக வேண்டும். ஆனால், சன் தெளிவாக, தைரியமாக இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறது. பாராட்டுக்கள்.

இந்த திறந்த வழி சன்னைப் பொருத்தவரை சிறந்த வழியாக மாறும் என்று நம்புவோம்.