ரவி ஸ்ரீநிவாஸ் சுஜாதா இருத்தலியல் பற்றிய இரண்டுவரி விளகத்தின் அபத்தத்தை விரிவாக எழுதியிருக்கிரார். அதை விகடன் ஆசிரியருக்கு அனுப்பவதாகவும் எழுதியிருக்கிறார். காலம் காலமாக நாமெல்லாம் இந்தச் சங்கை ஊதிக்கொண்டுதானிருக்கிறோம். ஆனால் வர்த்தக மாஃபியா அதுபாட்டுக்கு அறிவு என்ற பெயரில் அறைகுறை விளங்கங்களையும் அபத்தத்தையும் விதித்துக் கொண்டுதானிருக்கிறது. பத்மா க்ளோனிங் பற்றி விகடனுக்கு என்ன எழுதினார் என்று தெரியாது. ஆனால் நான் க்ளோனிங்க் தொடரைப்பற்றி விகடனுக்கு (ஜூனியர் என்று ஞாபகம்) மிக நீளமாக சுஜாதாவின் பல ஒற்றை வரி விளக்கங்களில் இருக்கும் அபத்தங்களைப் பட்டியலிட்டிருந்தேன். கிணறுதான்; கல்தான்.

இது விகடன் குமுதத்திற்கு மாத்திரமல்ல. உயிர்மை துவக்கப்பட்ட பொழுது அதில் கண்ணீரில்லாமல் யாப்பு, கண்ணீரில்லாமல் கர்நாடக சங்கீதம் என்ற ரீதியில் எழுதினார். அப்பொழுதும் அவரது வெண்பா பாடத்தில் இருக்கும் விஷயங்களைப் பற்றி உயிர்மைக்கு எழுதியிருந்தேன். (இதைப் பற்றிய என் பழைய பதிவு). பொதுவில் விமர்சனங்களுக்கு அஞ்சாத சிற்றிதழில்கூட இது வரவில்லை.

இவர்களிடம் கருத்துகளுக்காகக் கையேந்தி நிற்பவர்களை என்ன சொல்வது? வலைப்பதிவையும் குறுஞ்செய்தியையும் பற்றி கருத்து சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? தனக்குக் கருத்துச் சொல்ல இடமில்லாத இடத்தில் பெருந்தன்மையாக அதை ஒத்துக்கொண்டு விலகும் மனப்பக்குவம் இல்லாதவர்களை என்னென்று சொல்வது. வலைப்பதிவா, “ஆமா என்னமோ செய்றாங்க அதைப்படிக்க எனக்கு நேரமில்லை (இல்லை எனக்குத் தெரிந்தவர்கள் எழுதும் ஒன்றிரண்டு மாத்திரம் படிப்பதுண்டு) என்றாவது சொல்லிவிட்டுப் போகலாம். Ego trip என்று பேச நா கூச வேண்டாமோ? கடந்த முப்பது வருடமாக கணையாழியின் கடைசிப்பக்கங்களில் துவங்கி கற்றதும் பெற்றதும் வரை முழுநேர ஈகோ டிரிப்பில் இருப்பவர் இப்படிச் சொன்னால் இதற்கு ஒரே ஒரு நியாயம்தான் இருக்க முடியும். Territorial Imperative.

இனி இன்று ஒரு சொல் –

சுஜாதாவாக்கம் = எந்த ஒரு கனமான விஷயத்தையும் எடுத்துக்கொண்டு இரண்டு மூன்று குழூஉக்குறிகளையும் பெயர்களையும் போட்டு ஒன்றிலிருந்து மூன்று வாக்கியங்களுக்குள் வரையற்றுத்து விடுவது.

உதாரணமாக தனக்குப் போஸ்ட்மார்டனிஸமும் அதற்கு மேலும் தெரியும் என்று காட்டிக்கொள்ள கொஞ்ச நாட்கள் கழித்து இப்படியொரு கற்றதும் பெற்றதும் வரலாம்.

மேல்தட்டு கீழ்தட்டு போன்ற பாகுபாடுகள் ஒழிந்துவிட்டன என்று தெரிதா சொன்னார். ஆனால் அவருக்கு அப்புறம் வந்த டிபோர் டையலக்டிக் போஸ்ட்மார்டனிஸம் என்று ஒன்றை உருவாக்கினார். அதில் உண்மைக்கும் சமூகத்திற்கும் உள்ள வேறுபாடுகளைச் சொன்னார். இதைத்தான் நம்மாழ்வார்கூட

“துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும்
அணைய வந்த ஆக்க முண்டேல் அட்டைகள்போல் சுவைப்பர்
கணை ஒன்றாலே ஏழ்மரமும் எய்த எம் கார்முகிலை
புணை ஒன்றுஉய்யப் போகல் அல்லவா இல்லை கண்டீர் பொருளே”

என்று பாடியிருக்கிறார். அட்டைகள் போல் சுவைப்பர் – கிருமிபோஜனத்தைக் கண்டுபிடித்தவன் நானில்லை, நம்மாழ்வார். பாருங்கள் எழுதி எத்தனையோ நூறாண்டுகள் ஆனபின்னும் துணை, சுற்றத்தவர், பிறர், சுவைப்பர், பொருள் என்று நாம் இன்றைக்கு தினசரி பயன்படுத்தும் அதே சொற்கள். இதனால்தான் நம்மாழ்வார் காலத்தால் அழியாமல் நிற்கிறார். நம்மாழ்வார் பாட்டை சிம்பொனியில் நீங்கள்தான் போடவேண்டும் என்று இளையராஜாவிடம் சொல்லியிருக்கிறேன். அவரைத் தவிர வேறு யாருக்கும் அந்தத் தகுதி கிடையாது. (ஆனால் ஷங்கர் படத்துக்கு ம்யூஸிக் போடும் தகுதி ஹாரிஸ் ஜெயராஜுக்குத்தான் இருக்கிறது). ஆனால் இண்டர்நெட்டில் சில பேர் ப்ளாக் என்ற பெயரில் அவசரமாகக் கிறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களெல்லோரும் ஐந்து நிமிடப் புகழுக்கு அலைபவர்கள். ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடிகிறது. ஸாப்ட்வேர் எழுதுகிறேன், அமெரிக்காவில் போஸ்ட்டாக்-காக இருக்கிறேன் என்று சொல்லும் இவர்களுக்கு நெட்டில் மேய நிறைய நேரம் கிடைக்கிறது. இல்லாவிட்டால் நான் எழுதுவதில் இப்படிக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு நோண்டிக்கொண்டிருக்கமாட்டார்கள். நான் படிக்கும் காலத்தில் கொஞ்சம் அப்படி இப்படித்தான் பெரி மேஸான், ஹெம்மிங்வே என்று படித்துக் கொண்டிருப்பேன். அப்துல்கலாம் கூட “என்ன ரங்கராஜன் இப்படி சதா கதைப்புத்தகத்தை படித்துக்கொண்டு எப்படி நீ முதல் ரேங்க் வாங்குறே” என்று கேட்பார். ஆனால் இவர்களைப் போல முழுவெட்டியாக இருந்ததில்லை என்பது நிச்சயம்.

இனி எக்ஸிஸ்டென்ஸியலிஸத்திற்கும் மெட்டீரியலிஸத்திற்கும் உள்ள தொடர்பைப் பார்ப்போம். நீட்ஷே கடவுளைக் கொன்றுவிட்டார். அதுமட்டுமில்லாமல் கடவுளைக் கொன்றதில் உங்களுக்கும் எனக்கும் பங்கு இருக்கிறது என்று வேறு பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார். பின்னால் வந்த ஆல்பர் காம்யூவின் கதாநாயகன் அம்மா செத்த அடுத்த நாள் ஸ்த்ரீ சம்போகத்திற்காக அலைகிறான். இவர்கள் எல்லோரும் நம்ம இந்திய தர்மநெறிகளுக்கு எதிரானவர்கள். ஆனால் ஷங்கரைப் பாருங்கள் நேர்மையில்லாதவர்களை அந்நியன் மூலமாக அவ்வப்பொழுது கிருமிகளுக்குக் கிள்ளிப் போட்டுக்கொண்டிருக்கிறார்.

பின் குறிப்பு : தலைப்பைப் படித்துவிட்டு வில்லிவாக்கம் பக்கத்தில் சுஜாதா பெயரில் ஒரு புதிய ஊர் வந்திருக்கிறது என்று நினைத்தால் நான் பொறுப்பல்லன்.