நான் சிடாக்கின் குறுவட்டை நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் அதன் உள்ளடக்கங்களாக அவர்கள் தளத்தில் போட்டுவைத்திருந்தவை எல்லாவற்றையும் தரவிறக்கிப் பார்த்துவிட்டேன். (விரைவில் இதை மற்ற நண்பர்களுக்காக என் தளத்தில் போட்டுவைக்க உத்தேசம். சிடாக்கின் தளம் மிக மிக மெதுவாகச் செல்கிறது). கூடவே நண்பர் பத்ரி என் வேண்டுகோளுக்கிணங்க குறுவட்டின் எல்லா கோப்புகளின் பெயர்களையும் பட்டியலிட்டு அனுப்பினார் (நன்றி). இதைக் கொண்டு அந்தக் குறுவட்டில் என்ன இருக்கிறது என்று நன்றாக ஊகிக்க முடிகிறது.

அமைச்சர் தயாநிதி மாறன் தமிழுக்கு மென்கலன் பொதி தருவதாக அறிவித்து அதற்கு ஆறுமாதம் கெடுவையும் விதித்துக் கொண்டார். இந்த இடைப்பட்ட நாட்களில் கட்டாயம் அவருடைய கட்டுப்பாட்டிலிருக்கும் சி-டாக்கில் இதற்கான ஒரு செயற்குழு அமைக்கப்பட்டிருக்கும். யாராவது ஒரு பெருந்தலை இந்தத் திட்டத்திற்கான மேலாளராக வரையறுக்கப்பட்டு அவரின் கீழ் குறைந்தபட்சம் ஐந்து-பத்து நிரலர்களாவது இந்தக் குறுவட்டைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியிருப்பார்கள். நான் ஏற்கனவே எழுதியிருந்ததைப் போல இந்தக் குறுவட்டுக்கென எந்த நிரலும் புதிதாக உருவாக்கப்படவில்லை. இவற்றின் முக்கிய உள்ளடக்கங்கள் ஓப்பன் ஆபீஸ், ·பயர்·பாக்ஸ் உலாவி, கூலும்பா மின்னஞ்சல் நிரலி, பொன்விழி எழுத்துணரி, பால்ஸ் மின்னகராதி இவைதான். இவை எல்லாமே ஏற்கனவே தயார் நிலையில் இருந்தவை. இந்தத் திட்டத்தில் இவற்றை ஒன்று திரட்டி ஒரு குறுவட்டில் அடைத்து அதற்கு மேலட்டைத் தயாரித்து அதைப் பிரதியெடுத்திருக்கிறார்கள். அவ்வளவே (கூடவே அமைச்சரிலிருந்து எல்லோரும் ஊடகங்களில் சவால் விடுதல், சாதனை முழங்குதல் போன்ற முக்கிய காரியங்களையும் செய்திருக்கிறார்கள்).

இப்படி எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துப் போடுவதற்குப் பொதியாக்கம் (Software packaging) என்று சொல்வார்கள். இதற்கு நல்ல உதாரணம் மைக்ரோஸாப்ட் ஆபீஸ் பொதி. வேர்ட்லிருந்து வெட்டி பவர்பாயிண்டில் ஒட்டலாம். பவர்பாயின்டை வேர்டாகச் சேமிக்கலாம். எக்ஸெல் அட்டவணையை வேர்ட்டில் பதிக்கலாம். அக்ஸஸ் தரவுத்தளத்திலிருந்து முகவரிகளை வேர்டின் ஒரே கடிதத்தைப் பலருக்கும் அனுப்பலாம். இந்த எளிதான பயன்பாடுதான் ஆபீஸை உலகின் அதிமுக்கிய அலுவல் பொதியாக ஆக்கியது. எனக்கு மைக்ரோஸாப்ட் முறையில் தனிப்பட்ட பல வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களின் ஆபீஸ் பொதி ஆகக்கூடிய வரையில் மிகவும் நேர்த்தியானது என்பதை ஒத்துக் கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. சொல்லப்போனால் இவ்வளவு பெரிய பொதியின் பகுதிகள் ஒன்றுடன் ஒன்று சிக்கலில்லாமல் தொகைப்படுத்தியது (seamless integration) மிகவும் பாராட்டுக்குரியது. நிச்சயமாக இந்தத் துறையை முன்னெடுத்துச் சென்றதற்கு மைக்ரோஸாப்ட் பாராட்டுக்குரியது.

இனி, சிடாக் குறுவட்டைப் பார்ப்போம். இதிலிருக்கும் ஒவ்வொன்றும் ஒரு தரக்குறியீட்டில் இருக்கின்றன. பால்ஸ் மின்னகராதி தாம் (TAM) இலிருக்கின்றது. பொன்விழி எழுத்துணரி தஸ்கியில் (TSCII) இருக்கிறது. திறமூலப் பொதிகளான ஒப்பன் ஆபீஸ், ·பயர்·பாக்ஸ் போன்றவை யுனிகோடில் (Unicode) இருக்கின்றன. ஆறு மாத இடைவெளியில் நான்கு கல்லூரி மாணவர்களைக் கொண்டு எல்லா பொதிகளையும் ஒரே தரக்குறியீட்டிற்கு மாற்றியிருக்கலாம். இந்தக் குறுவட்டை மாத்திரமே வைத்துக் கொண்டு எல்லா காரியங்களையும் செய்து முடித்துவிடலாம் என்ற அரசாங்கத்தின் சொல்லை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் இதைப் பயன்படுத்துபவர் குறைந்தபட்சம் மூன்று தரக்குறியீடுகளைப் பயன்படுத்தியாக வேண்டும். எழுத்துணரியில் கணினிக்கு மாற்றப்பட்ட கையெழுத்தில் இருக்கும் எழுத்துப் பிழைகளை அண்ணா பல்கலைக்கழக பிழைதிருத்தி கொண்டு சரிபார்க்க முடியாது.

இப்படியிருப்பது தவிர்க்க முடியாத நிலையில் இவர்கள் ஒரு குறியீட்டு மாற்றியையாவது சேர்த்திருக்க வேண்டும். இதைத் தவிர தமிழில் தட்டச்சு செய்ய முற்படுபவர்களுக்கு எ-கலப்பையைப் போன்ற எளிதான நிரலி எதுவும் கிடையாது. ஓப்பன் ஆபீஸில் தமிழ் இடைமுகம் இருந்தாலும் தமிழில் உள்ளீடு செய்வது சுலபமில்லை.

எல்லா பயன்பாடுகளுக்கும் போதுமான உதவிகள் கிடையாது. ஆறுமாத காலத்தில் சிடாக்கின் ஆட்களைக் கொண்டு ஓப்பன் ஆபீஸ், ·பயர்·பாக்ஸ் போன்றவற்றுக்கு இருக்கும் உதவிக் கோப்புகளையாவது மொழிபெயர்த்திருக்கலாம். எல்லாமே தமிழில் செய்யலாம் என்று மார்தட்டும்பொழுது அதற்கு ஆங்கில வழி உதவி மாத்திரமே இருப்பது அவலம். இன்னும் சொல்லப்போனால் சிலவற்றை நிறுவதற்கு ஆங்கிலம் தேவை.

அடுத்ததாக இந்தக் குறுவட்டு கற்றுக் கொடுக்கும் சட்டங்களும் விதிகளும் குறித்தவற்றைப் பற்றி எழுதுகிறேன்.