இன்றைக்குக் கண்ணில்பட்டது;

20050112-rudhraksham.png

 • பிளவில்லா ருத்ராட்சம் – 8,000 ரூபாய்
 • முப்பிளவு ருத்ராட்சம் – 7,00 ரூபாய்
 • ஏழுபிளவு ருத்ராட்சம் – 500 ரூபாய்
 • எட்டுபிளவு ருத்ராட்சம் – 1,000 ரூபாய்
 • பத்துபிளவு ருத்ராட்சம் – 2,000 ரூபாய்
 • பதினான்குபிளவு ருத்ராட்சம் – 7,000 ரூபாய்
 • பதினாறுபிளவு ருத்ராட்சம் – 4,000 ரூபாய்

ஆமாம், இதெல்லாம் ஒத்தகொட்டையின் விலைதான்! மாஸ்டர்/விஸா கார்டு கொடுத்து நேரடியாக வாங்க முடியும். அடியில் காணப்படும் விஷயம் இன்னும் முக்கியமானதாகத் தோன்றுகிறது. இந்த ருத்ராட்சக் கொட்டைகள் நேபாளிலிருந்து நேரடியாகத் தருவிக்கப்பட்டவையாம். எனவே இவற்றின் விலையைப் படிக்கும்பொழுது இதை மனதில் கொள்ளவேண்டுமாம். அசல் நேபாள் ருத்ராட்சங்கள் என்று உறுதி கொடுத்தாலும் இதை அறிவியல்பூர்வமாகச் சோதித்துப் பார்க்க அவர்களிடம் வழியில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டுமாம்.

சுவாமிமலையில் எங்கம்மாவின் சித்தி வீட்டுக் கொல்லையில் ருத்ராட்சம் கொட்டிக்கிடக்கும். ஈ-காமர்ஸ் வரப்போவது தெரியாமலேயே வாலாம்பா பாட்டி போய்ச்சேர்ந்துவிட்டாள். பாவி, சிறுவயதில் விதவையாகி வந்தவள் வீட்டில் இப்படியரு ஐஸ்வர்யம் இருக்கிறது என்று அவளுக்குத் தெரியவே தெரியாது. நாங்களும் வாலாம்பா பாட்டி வீட்டிற்குப் போனால் புழக்கடையில் ருத்ராட்சக் கொட்டையை வைத்து கோலி குண்டு ஆடியிருக்கிறோம். இதனால் என் குடும்பத்திற்கு ஏதாவது தோஷம் வர வாய்ப்பிருக்கிறதா?

எனக்கு பல சந்தேகங்கள் வருகின்றன;

 1. அது என்ன நேபாள் ருத்ராட்சம் மாத்திரம் இந்த விலைக்கு விற்க வேண்டும்?
 2. இணையத்தில் வேறு யாராவது இந்திய ருத்ராட்சக் கொட்டைகள் விற்கிறார்களா? தெரிந்தால் விலையை ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
 3. இந்தியக் கொட்டைகளின் தரத்தை உலகத்தரத்திற்கு எப்படி உயர்த்துவது?
 4. உருண்டைக் கொட்டையின் விலை எட்டாயிரம், ஏழுபிளவு ஐநூறு, எட்டு பிளவு ஆயிரம், பதினாலு பிளவு ஏழாயிரம் ரூபாய்கள் என்று போட்டிருக்கிறார்களே, எதைவைத்து இப்படி விலையை நிர்ணயிக்கிறார்கள்?
 5. மரபு மாற்றம், மரபுக்கூறை வெட்டியட்டுதல் இப்படி ஏதாவது செய்து பதினாலு பிளவை அமோக விளைச்சலுக்கு உள்ளாக்க முடியுமா?
 6. அப்படிச் செய்து வீட்டிற்கு ஒரு பதினாலாம் கொட்டை கொடுத்துவிட்டால் இந்தியா சுபீட்சமடையுமா?
 7. எனக்குத் தெரிந்தவகையில் பண்டாரங்கள்தான் ருத்ராட்சம் போடுவார்கள். அது எப்பொழுது/எப்படி பணக்காரர்களின் சின்னமாக உயர்ந்தது?

ஐயா, யாராவது இதற்கெல்லாம் விடை சொல்லுங்களேன்; இல்லாவிட்டால் இன்னும் நாலு நாளைக்கு எனக்குத் தூக்கம் வராது?