இன்றைய வலைப்பதிவில் பத்ரி கிராமங்களில் அனைவருக்கும் உணவளிப்பது அதனால் ஆகும் செலவுகள் பற்றிய மேலோட்ட மதிப்பீட்டு இவற்றைக் காட்டி, அரசு முன்வந்து கிராமங்களில் அணைவருக்கும் உணவளிக்க வேண்டும் என்றும் அதனால் பசி பற்றிய பயத்தையும் கவலையையும் மறந்த மக்கள் அதனால் உழைப்பில் ஈடுபடுவார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

எனக்கென்னமோ இது நடைமுறையில் சாத்தியமான காரியம் இல்லை என்று தோன்றுகிறது. முதலில் இதை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. பத்ரியே காட்டியிருப்பதைப் போல இதில் இடைத்தரகர்கள், தாதாக்கள், அரசியல்வாதிகள் என்று மத்திய அமைச்சர் தொடங்கி தெருக்குண்டர்கள் வரை இந்த விழலுக்கு இறைக்கும் நீர் ஒழுகியோட நம்மிடம் அதிகம் ஓட்டைகள் இருக்கின்றன. இவற்றின் பங்கை அவர் குறைத்து மதிப்பிடுகிறார் என்று தோன்றுகிறது.

ஆதாரமாக மேலை நாடுகளில் நடக்கும் சூப் கிச்சன் என்ற நடைமுறையைச் சொல்லியிருக்கிறார். ஆனால் நம் மனோபாவத்திற்கு இது எதிர் உதாரணம்தான் என்று தோன்றுகிறது. மேலை நாடுகளில் சூப் கிச்சனிலிருந்து பெற்று உண்பது தங்கள்க்கு இழுக்கு என்ற அடிப்படை மனோபாவம் இருக்கிறது. கையேந்துபவர்களுக்கு அவர்கள் உணவளித்தாலும் ஒரு அருவருப்போடுதான் அதைச் செய்கிறார்கள் (உனக்குக் காசு கொடுத்துவிட்டால் காலை வேலை செல்லும் நேரத்தில் உன் பசி முகத்தை நான் பார்த்துத் தொலைய வேண்டியதில்லை). ஆனால், நம்மூரிலோ அருவருப்புக்கு மாறாகப் பிச்சையெடுப்பவனை (பிராம்மணார்த்தம் சாப்பிடுபவனை) தெய்வமாக மதிக்கிறோம். இந்தியர்களின் மனோபாவப்படி பெரும்பாலானவர்கள் தங்களுக்கு இலவச உணவு கிடைத்தால் இதைத் தங்கள் அடிப்படை உரிமையாக மாற்றிவிடும் அபாயம் நிறையவே இருக்கிறது. இன்னொரு முக்கியமான காரணி கையேந்துபவர்களின் எண்ணிக்கை. ஆயிரத்தில் ஒருவர் கையேந்தும் மேலை நாடுகளை, நாலில் ஒருவருக்கு உணவளிக்க வேண்டிய இந்தியாவுடன் ஒப்பிடுவது சரியில்லை என்றுதான் தோன்றுகிறது.

இதற்கு முக்கிய காரணம் இந்து மதம் நமக்குப் போதித்த கேவலமான வழக்கங்கள். நம் மதத்தில் உடலுழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு மரியாதை இல்லை (மதம் என்பதைக் கலாச்சாரம் என்றும் படிக்கலாம்). அதாவது, உடலைக் குறுக்கிப் புலனையொடுக்கிப் பொதுச் சுகாதாரத்திற்கு உழைக்கும் ஒருவனைப் “பீயள்ற நாயே” என்று சொல்லும் அதே அற்ப ஜந்துக்கள்தான், ஐய்யருக்கு அரிசியும் வாழைக்காயும் தானமாக வழங்குகிறன. “ப்ராம்ணார்த்தம் சாப்ட்றவா, பித்ருக்களுக்குச் சமானம், அவா கால்ல விழுடா”, “கோவிலுக்குப் போய்விட்டு வரும்பொழுது வாசல்ல இருக்கற பிச்சக்காரனுக்குப் பத்து காசு போட்டா புண்ணியம் அதிகம்” இப்படி உடலுழைப்பை எதிர்க்கும், மறுதலிக்கும் ஒரு குழுவிற்கு தெய்வீக அந்தஸ்தை வழங்கும் நம் சமூகத்தில் உழைப்பின்றி உடல் வளர்க்கப் பலரும் தயாராகத்தான் இருப்பார்கள் என்று தோன்றுகிறது. எனவே, நமக்கு முக்கிய தேவை உடலுழைப்பை முன்னிருத்தும், அதன் உன்னதத்தை வழிபடும் மனமாற்றம்தான். இதை எப்படி அடைவது?

எல்லாவற்றையும் மீறி நம்மூரில் வளம் பெருக எனக்குத் தோன்றும் ஒரே வழி, எல்லா தொழில்களையும் முறைப்படுத்துதல்தான். அது கூடை முடைவதாக இருக்கட்டும், தெருக்கூட்டுவதாக இருக்கட்டும், எல்லாவற்றுக்கும் பயிற்றுவித்தலில் தொடங்கி, ஊதியம், வேலைக்காப்பீடு, வருமான வரி, திறமை முன்னேற்றப் பயிற்சி, சந்தைப்படுத்தல் போன்றவற்றை முறைமைப்படுத்த வேண்டும். இது செய்தொழில்களில் ஈடுபடுவர்களுக்கு ஒரு கௌரவத்தைத் தரும். ஒழுங்கமைக்கப்பட்ட வேலைக்காரர்கள் தங்கள் திறனை உயர்த்திக் கொள்ளக் கருவிகளை வடிக்கத் தொடங்குவார்கள் (எத்தனை நாளைக்குத்தான் வெளக்குமாத்த வச்சுக் கூட்றது, வாக்குவம் கிளீனர் வாங்கனும்). வேலை செய்யும் எவரும் தலை நிமிர்ந்து நிற்க வழி செய்ய வேண்டும். இப்படி முறைப்படுத்தாத தொழில்கள் எதுவுமே தொழிலாளிக்கு (சமூகத்திற்கும்தான்) நல்லதல்ல. வருமானவரி, கணக்குக் காட்டல் போன்ற ஆரம்பகாலச் சிக்கல்கள் இருந்தாலும் ‘நானும் ஒரு தொழிலாளி’ என்று செய்யும் தொழிலை உன்னதமாக நினைக்கும் மனப்பாங்கை நாளாவட்டத்தில் வளர்க்கும். “நான் வரிகட்றவன், நீ என்னடா சமூகத்துக்குக் கொடுத்தே?” என்று தலைநிமிர்ந்து கேட்கும் நிலை வரவேண்டும். இது ஒன்றுதான் வெட்டிப்பேச்சு பேசுபவர்கள், திண்ணை தின்று தூங்குபவர்கள் போன்றவர்களைச் சிறுமைப்படுத்த ஒரேவழி.

மேலை நாடுகளில் வீடு சுத்தம் செய்ய தாதிகள் வருவார்கள். “ஐய்யயோ, சனிக்கெழம காலைல என்னோட பிலிப்பினோ வேலைக்காரி வருவா, என்னால வரமுடியாது” என்று அவளுக்கு உரிய இடத்தையும் அவளது நேரத்தை மதிக்கும் முறையையும் பார்த்திருக்கிறேன். மாறாக நம்மூரில் அழைத்த நேரத்திற்கு வரவும், சொன்ன வேலையைச் செய்யவும்தான் அவர்களை எதிர்பார்க்கிறோம். அவளை ஒரு சக தொழிலாளி என்று மதிக்கும் வழக்கம். இல்லை. செய்யும் தொழில் எல்லாம் உயர்ந்தவை என்ற நிலை வரவேண்டும்.

இந்த இடத்தில் மாணவர்களுக்குச் சத்துணவு தரும் திட்டம் நான் பொதுஜனங்களுக்குச் சொன்னதற்கு எதிர்மாறான பலனைத் தரும் என்பதும் நிச்சயம். பசிக்கவலை இல்லாத மாணவர்கள் பாடங்களைச் செவி மடுத்துக் கேட்பது நிச்சயம். எனவே, ஏழை மாணவர்களுக்கு ஒரு வேளையாவது சோறிடும் மதிய உணவுத்திட்டம் மிகவும் முக்கியம். அங்கேகூட, நான் சின்ன வயதில் படித்த பள்ளிக்கூடத்தில் மதிய உணவில் இருப்பவர்களைப் பள்ளிக்கு இருக்கும் தோட்ட வேலைகளுக்கு முறைவைத்து அனுப்புவது வழக்கம். குழுவாகப் பிரித்து, வாரத்தில் ஒருநாள் பள்ளி விட்டதும் ஒரு மணி நேரம் இருந்து பள்ளிக்கு முன் இருக்கும் மலர்ச்செடிகளைச் சீரமைப்பது, பின்புறத்தில் இருக்கும் காய்கறித் தோட்டங்களுக்கும் நீர் பாய்ச்ச, பாத்தி கட்ட, களையெடுக்க அனுப்பவது வழக்கம். இப்படி தாமே காய்கறி பயிரிட்டு நம் மதிய உணவில் பயன்படுத்தும்பொழுது மாணவர்களின் தன்மானம் உயர்வதைப் பார்த்திருக்கிறேன். காய்கறியில் ஒரு பங்கைக் கூறுகட்டி மாணவர்கள் விற்றுப் பணத்தை மதிய உணவில் சேர்த்திருக்கிறார்கள். இப்படி வேலை செய்து பள்ளிக்கூடத்திற்கு என்னாலான காசைச் சேர்க்கமுடியவில்லையே என்று நான் வருந்தியிருக்கிறேன்.

நேரடி உடல் உழைப்புடன் தொடர்பில்லாமல் ஊதியம் (உணவு) வழங்கப்படுவது ஒரு நாளும் பலனைத் தராது என்பது என் எண்ணம்.