கர்நாட்க அரசின் காவல்துறையினர் வலைப்பதிவைத் துவங்கியிருக்கிறார்கள் என்று பிரகாஷ் வலைப்பதிவில் எழுதியிருந்தார். அடுத்த வார விகடனின் இப்படி வரலாம்;

சமீபத்தில் கர்நாடக அரசின் காவல்துறை ஒரு பிளாக்கை ஆரம்பித்திருப்பதாகச் சொல்லி நெட்டில் வெட்டிப்பேச்சு பேசுபவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அமெரிக்கா போஸ்ட்-டாக்களையும் சியாட்டிலில் கம்யூட்டர் ஜாபிதா எழுதும் சிலரையும்போல கர்நாடாகா போலிஸும் வெட்டியாக இருக்கிறது போலிருக்கிறது. வீரப்பன் ஒழிந்த பிறகு இவர்களுக்கெல்லாம் நிறையவே நேரம் இருக்கிறது. கொஞ்சம் வேளச்சேரி பக்கம் வந்தால் பள்ளத்தில் தேங்கியிருக்கும் தண்ணீரை இறைத்துக் கொடுத்து தமிழ்நாட்டுக்கு உதவலாம். அதைவிட்டுவிட்டு இப்படி இரண்டு நிமிட உலகப்பிரசித்திக்கு அரசாங்க அதிகாரிகளும் அலைவது கண்டு வியப்பாக இருக்கிறது.

என்னையும் பிளாக் துவக்கச் சொல்லி நிறைய பேர் சொல்லிவிட்டார்கள். இவர்களுக்குப் பதில் சொல்லி அலுத்துப் போய்விட்டது. ஒருபுறம் சுடச்சுட என் எழுத்துக்களைப் படிக்கவேண்டும் என்று விரும்பும் என் இரசிகர்களின் மனநிலையை எனக்குப் புரிந்துகொள்ள முடிகிறது. என்றாலும் நம்மாழ்வார்,

சூழ்ந்தடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும்தம் வாய்திறவார்

என்று சொல்லியிருப்பதுதான் இவர்களுக்கெல்லாம் என்னுடைய தாழ்மையான பதில்.