நேற்று முன்தினம் நடந்த நம்பிக்கையின்மை வாக்கெடுப்பில் கனேடிய லிபரல் அரசு தோல்வியைச் சந்தித்தது. இதன் மூலம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஜனவரி 2006, 23 ஆம் தினத்தன்று பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கே எத்தனை பேருக்குக் கனேடிய அரசியல் நிலையைத் தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும் என்று தெரியாத காரணத்தால் நான் இதைப்பற்றி எழுத முயற்சிக்கவில்லை. நேற்று பின்னூட்டத்தில் அலெக்ஸ் இது குறித்து என்னுடைய பார்வையை எதிர்பார்ப்பதாக எழுதியிருந்ததால்…

சென்ற பொதுத்தேர்தல் முடிவுகளைக் குறித்து நான் எழுதியிருந்த வலைப்பதிவை இங்கே பார்க்கலாம். கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்தில் இந்த அரசாங்கம் கவிழ்க்கப்பட்டிருக்கிறது. இது எந்தவிதத்திலும் ஆச்சரியமானதில்லை. இது சிறுபான்மை அரசு. கனடாவில் முக்கிய கட்சிகள் நான்கு (இவற்றையும் இவற்றின் தலைவர்களையும் பற்றிய என்னுடைய பழைய பதிவு இங்கே). புது ஜனநாயகக் கட்சி (New Democratic Party), லிபரல் (Liberal), கன்ஸர்வேட்டிவ் (Conservative) மூன்றும் கனடா முழுவதிலும் வீச்சு கொண்டவை. நான்காவது க்யூபெக் மாநிலப் பிரிவினைவாதக் கட்சியான பார்ட்டி க்யூபெக்வா ( Parti Québécois) . முதலில் பார்ட்டி க்யூபெக்வா குறித்து: இது ப்ரெஞ்சு மொழிபேசும் க்யூபெக் மாநிலம் தனி நாடாக வேண்டும் என்ற பிரிவினைக் கருத்தைக் கொண்டது. இதைத் தவிர இவர்களுக்கும் லிபரல் கட்சிக்கும் எந்தப் பெரிய வித்தியாசமும் இருப்பதாகத் தெரியவில்லை. கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி. க்யூபெக் மாநிலத்தில் கிட்டத்தட்ட 90% இடங்களைப் பிடித்திருந்தது (இதனால் க்யூபெக்கில் 90% பிரிவினையை ஆதரிப்பவர்கள் என்று அர்த்தமில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் பரவலாக 50% ஆதரவைப் பெற்றதன் மூலம் 90% இடங்கள் சாத்தியமாயிற்று). இப்பொழுது இதற்குப் புதிய இளைய தலைவர் கிடைத்திருக்கிறார். இளரத்தம் முழுக்க முழுக்க பிரிவினை பேசுகிறது. விரிவாக இன்னொரு நாள்.

இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தது கன்ஸர்வேட்டிவ் கட்சி. தேசியக் கட்சி என்று சொன்னபோதிலும் இது கனடாவின் மிகப் பெரும் பரப்பையும், மிகக் குறைந்த மக்கள் தொகையையும் கொண்ட மேற்கு மாநிலங்களில்தான் செல்வாக்கைப் பெற்றிருக்கிறது. இவர்களின் மனநிலையைப் பெரிதும் அமெரிக்கர்களின் மனநிலையோடு ஒப்பிடலாம். செல்வாக்கு பெற்ற சர்ச்சுகள், தற்பாலர் மண எதிர்ப்பு, உள்ளிட்ட பல விஷயங்களில் இவர்கள் அமெரிக்காவின் புஷ் கூட்டத்தை நெருங்கி வருபவர்கள். இதன் தலைவர் ஸ்டீவன் ஹார்ப்பர் பதவிக்கு வரத் துடித்துக் கொண்டிருப்பவர். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் முதலாளிகளின் கை ஓங்கும்.

நான்காவது இடத்தைப் பெற்றிருப்பது புது ஜனநாயகக் கட்சி. இது என் பார்வையில் கனேடியக் கட்சிகளுக்குள்ளே மிக முன்னேற்றக் கொள்கைகளை அதிகம் கொண்டது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் (வருவோம் என்று இதன் தலைவர் ஜாக் லெய்ட்டன்கூட கனவில் கூட நம்பமாட்டார்) தொழிலாளர்கள் கை ஓங்கும், இவர்கள் நிறவெறிக்கு எதிர்ப்பானவர்கள், சமயம், சமூகம் உள்ளிட்ட பலவிஷயங்களில் புரட்சிக் கருத்துக்களைக் கொண்டவர்கள். சமூக நலத்திட்டங்களுக்குப் பெரிதும் ஆதரவு அளிப்பவர்கள். சுருக்கமாகச் சொல்லபோனால் கன்ஸர்வேட்டிவ் கட்சி ஒரு துருவம் என்றால் ஜனநாயகக் கட்சி எதிர் துருவம். இந்த இடத்தில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், கனடாவின் வலதுசாரிக் கட்சியான கன்ஸர்வேட்டிவ்வின் கொள்கைகள் அமெரிக்காவின் இடதுசாரிகளான கெர்ரி, அல் கோர், கிளிண்டன்களைவிட இன்னும் அதிக இடதுசாரித்தனம் கொண்டவை. உதாரணமாக கருக்கலைப்பைத் தெரிந்தெடுக்கும் பெண்களின் உரிமையைச் சட்டத்தின் மூலம் தடுக்கும் அமெரிக்க (சில மாநிலங்களின்) நிலைப்பாட்டை கனடாவில் கனவில் கூட எதிர்ப்பார்க்க முடியாது. தீவிர வலதுசாரி கட்டுப்பெட்டித்தனம் கனடாவில் சாத்தியமேயில்லை.

முன்றாவதான லிபரல் கட்சிதான் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் ஆளூம் கட்சி. இது நடுநிலைமைக் கட்சி என்ற் பொழுதும் இடதுசாரித்தனம் அதிகம் கொண்டது. கடந்த பன்னிரண்டு வருடங்களாக ஆட்சியில் இருப்பது. வழவழ கொழகொழ வெண்டைக்காய் கட்சி. நான் அவதானித்த வகையில் பெரும்பாலான கனேடியர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பது இந்தக் கட்சிதான் (குறிப்பாக வெண்டைக்காய்த்தனம்). பால் மார்ட்டினுக்கு முந்தைய பிரதமரான ஜான் க்ரெட்ச்யென் ஆட்சியின் பொழுது க்யூபெக் பிரிவினை ஓட்டெடுப்பு வந்தது. ஒரு சதவீத ஓட்டு வித்தியாசத்தில் க்யூபெக் கனடாவுடன் நிலைத்தது. அது க்ரெட்ச்யெனுக்கு பெரும் வெற்றியாகக் கருதப்பட்டது. அதன் இறுதியில் கனடாவின் ஒற்றுமையைப் பலப்படுத்த அரசு க்யூபெக்கில் பல விளம்பரத்திட்டங்களுக்குச் செலவிட்டது. அதில் நடந்த தில்லு முல்லுகள் இந்த வருடம் நீதிக்குழு ஒன்றினால் அம்பலப்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து புது ஜனநாயகக் கட்சி வெளியிலிருந்து அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற இப்பொழுது சீட்டுக்கட்டிடம் கலைந்துபோயிருக்கிறது. ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும், லிபரல்கள் ஆட்சியில் கனடாவின் பொருளாதாரம் திரமாக உயர்ந்திருக்கிறது. மற்ற பெரிய நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டிருக்கும் நிலையில் கனடா ஒன்றுதான் தொடர்ச்சியான வளர்நிலையில் இருக்கிறது – இதற்கு லிபரல்களின் நிதியாளுமைத் திறன் முக்கிய காரணம். இன்னொரு முக்கியமான விஷயம், அண்டை நாட்டு தாதாவான அமெரிக்காவின் கைமுறுக்கல்களுக்கெல்லாம் பணியாமல் புஷ்ஷின் அயோக்கியத்தனங்களுக்குத் துணைபோகாமல் கனடா நிற்பது பெரியவிஷயம். கன்ஸர்வேட்டிவ்கள் வந்தால் புஷ்க்கு இன்னொரு டோனி ப்ளேர் கிடைப்பார்.

* * *

ஒரு முக்கியமான விஷயம்: இந்தத் தேர்தல் பனிக்காலத்தில் நடக்கிறது. இப்படிப் பொதுவில் நடப்பதில்லை. கிறிஸ்துமஸ் பண்டிகை சமயத்தில் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் மகிழ்ந்திருக்கும் சமயத்தில் அரசியல்வாதிகள் கதவைத் தட்டி ஓட்டுக் கேட்பதைக் கனேடியர்கள் விரும்புவதில்லை. கனேடியக் கடுங்குளிரில் வீடுவிடாகச் சென்று ஓட்டு கேட்பது அரசியல்வாதிகளுக்கும் சிரமமான காரியம்தான். இதைக் காரணம் காட்டி லிபரல்கல் இன்னும் கொஞ்சம் நாட்கள் பதவியில் இருக்க முயற்சித்தார்கள். ஆனால் கன்ஸர்வேட்டிவ்களுக்குப் பொறுமையில்லை. இன்னும் கொஞ்சம் நாட்கள் இருந்தால் லிபரல்கள் இழந்த மதிப்பை மீட்டெடுக்கக் கூடும் என்ற அச்ச்ம் அவர்களுக்கு. ஊழல் அறிக்கைச் சூடு குறையாமல் இருக்கும்பொழுதே தேர்தல் நடந்தால்தான் கன்ஸர்வேட்டிவ்களுக்கு கொஞ்சம் வாய்ப்பு இருக்கிறது.

இனி தேர்தல் பிரச்சாரம் துவங்கியிருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய கணிப்புகளைச் சொல்லலாம்தான். ஆனால் இங்கே எத்தனை பேருக்கு இதில் சுவாரசியம் இருக்கும் என்று தெரியவில்லை.