கனேடியப் பாராளுமன்றக் கலைப்பு மற்றும் தேர்தல் குறித்த என்னுடைய முந்தைய பதிவு.

தேர்தல் பிரச்சாரம் துவங்குவதற்கு முன்னால் என்னுடைய கருத்துக்களை எழுத நினைத்திருந்தேன். நேரம் கிடைக்கவில்லை.

பிரச்சாரம் துவங்குவதற்கு முன்பு என்னுடைய கணிப்பில் பால் மார்ட்டினின் லிபரல் கட்சியும் (கலைக்கப்பட்ட அரசு) ஸ்டீவன் ஹார்ப்பரின் கன்ஸர்வேட்டிவ் கட்சியும் சமநிலையில் இருக்கின்றன. புதிய ஜனநாயகக் கட்சி தன் நிலையை முன்னேற்றிக் கொள்ளக்கூடும். க்யூபெக் மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக பிரிவினைவாதக் கட்சியான பார்ட்டி க்யூபெக்வா அள்ளிச் செல்லப்போகிறது (இருந்தபோதும் க்யூபெக் மாநிலத்தின் பெரும்பான்மையினர் பிரிவினை கோருவதாக நான் எண்ணவில்லை). இதில் புது ஜனநாயகம், க்யூபெக்வா இரண்டும் எந்த நிலையிலும் கன்ஸர்வேட்டிவ்களுடன் இணைந்து செயல்பட முடியாது. புதுஜனநாயகம் இடதுசாரி எல்லை என்றால் கன்ஸர்வேட்டிவ் வலது எல்லை. பெரும்பாலும் மேற்கு மாநிலங்களின் கட்சியாகக் கருதப்படும் கன்ஸர்வேட்டிவ் க்யூபெக்கில் ஒரு எதிர்சக்தி. பிரெஞ்சு விழுமியங்களைக் கொண்ட க்யூபெக்கில் தாராளவாதம்தான் மதிப்புடையது. எனவே க்யூபெக் மாநிலப் பிரதிநிதிகளாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் பார்ட்டி க்யூபெக்வாவும் கன்ஸர்வேட்டிவ்களுடன் இணைந்து செயல்பட முடியாது. எனவே கனடாவில் மீண்டும் புதுஜனநாயக ஆதரவு பெற்ற லிபரல்தான் அரசாங்கம் அமைக்கும் என்று தோன்றுகிறது. (அதுதான் ஒருவகையில் நான் விரும்பவதும் கூட).

நேற்று இரவு நான்கு கட்சித் தலைவர்களும் தேசிய தொலைக்காட்சியில் நேரடி விவாதம் நடத்தினார்கள். முழுக்க முழுக்க பிரெஞ்சு மொழியில் இருந்தது. (ஆங்கில மொழிபெயர்ப்புக் குரல்களுடன்) நான் இதை இரசிக்கவில்லை (இந்த விவாத அமைப்பு முறை குறித்து தனியாக ஒரு பதிவு எழுதியாகவேண்டும்). இன்றைக்கு இரவு ஆங்கிலத்தில் விவாதம் நடக்கவிருக்கிறது. (இதைக் கேட்பதற்கு முன்னால் என்னுடைய ஆரம்பக் கருத்துக்களை எழுதவேண்டும் என்றுதான் அவசர அவசரமாக இப்பொழுது எழுதுகிறேன்).

பிரச்சாரம் இன்னும் சூடுபிடிக்கவில்லை. நம்மூர் மாதிரி இங்கெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டுவது, மேடை போட்டு சோடா குடிப்பது எல்லாம் கிடையாது. தேர்தல் நடக்கிறது என்று தெரிந்துகொள்ள தெருக்களில் ஒரே வழி (கட்சி அனுதாபிகளின்) வீட்டுக்கு முன்னால் குச்சியில் குத்தப்பட்ட ஒன்றரைஅடிக்கு இரண்டு அடி அளவுள்ள அட்டைகள்தாம். வழக்கமாக புல்தரைகளில் குத்தப்பட்டிருக்கும் இவை, இப்பொழுது பனிக்குவியலில் செருகப்பட்டிருக்கின்றன. ஆனால் மிக மிகக் குறைவான அட்டைகளே காணப்படுகின்றன (டொராண்டோ பெருநகரில்). நான் வசிக்கும் புறநகர் பகுதியில் தெருவுக்கு ஒரு அட்டைகூட காணக்கிடைக்கவில்லை. பெரும்பாலும் பிரச்சாரம் தொலைக்காட்சி உரையாடல்களிலும், அரட்டை வானொலிகளின் விவாதங்களிலுமே வழிநடத்தப்படுகின்றது. வீடுவீடாகப் படியேறி ஓட்டுக் கேட்பதும் முக்கியமான வழி. (ஆனால் இந்த முறை கிறிஸ்துமஸ் சமயத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஒயின் அருந்தி விருந்தில் ஈடுபட்டிருக்கும் சமயத்தில் படியேறிச் சென்று பேசத்தொடங்கினால் எதிர்முறையான விளைவுகள்தான் கிடைக்கும் என்று அஞ்சி இன்னும் அரசியல்வாதிகள் வீதிக்கே வரவில்லை. இது கிறிஸ்துமஸ்க்குப் பிறகுதான் நடக்கும் என்று நம்புகிறேன்).

ஆரம்பத்தில் நான் எதிர்பார்த்ததுபோலவே லிபரல் கட்சியின் ஊழல் பற்றித்தான் விவாதங்கள் பெரிதும் நடக்கின்றன. பால் மார்ட்டின் கிட்டத்தட்ட ஆரம்பகால ராகுல் திராவிடைப்போல ஆடிக்கொண்டிருக்கிறார். வரும் எல்லா மட்டையடிகளுக்கும் ஒரே மாதிரியான பதிலைச் சொல்லி (லிபரல் அரசில் ஊழல் நடந்தது உண்மைதான், ஆனால் அது ஜான் க்ரெட்ச்யெனின் அரசு, நான் பால் மார்ட்டின்; எனக்கும் ஊழலுக்கும் சம்பந்தமில்லை,…). இப்படிப் ஊழல் பிரச்சாரத்தைக் கட்டை போட்டு தடுத்தாடி பந்துவீச்சாளர்களை சோர்வடையச் செய்வதுதான் லிபரல் உத்தியாக இருக்கும். பிரச்சார ஆரம்பத்தில் பலம்-பலவீனமாக நான் காணுவது இவைகளைத்தான்;

லிபரல்

பலம் : அசைக்க முடியாத அற்புதமான பொருளாதார முன்னேற்றம். உலகமெங்கும் முன்னேறிய நாடுகள் தத்தளித்துக் கொண்டிருக்க கனடாவில் மற்றும்தான் பொருளாதாரம் ஏறுமுகமாக இருக்கிறது.

பலவீனம்: க்ரெட்ச்யென் ஆட்சியின் ஊழல்.

பலம்: சொல்லப்போனால கனடா முழுவதுக்குமான ஒரே கட்சி லிபரல்தான். எனவே வலுவான தேசியம் பேச இவர்களால் மட்டும்தான் முடியும். பார்ட்டி க்யூபெக்வா ஒற்றை மாநிலக் கட்சி, புதுஜனநாயகம் ஒண்டாரியோ, பிரிட்டிஷ் கொலம்பியா தவிர வேறெங்கும் வலுவில்லாதது, கன்ஸர்வேட்டிவ் மேற்கு மாநிலங்களின் பிரதிநிதியாக மாத்திரமே காணப்படுகிறது. லிபரல்தான் கிழக்கு ஹாலிஃபாக்ஸில் தொடங்கி மேற்கு வான்கூவர் வரை செல்வாக்கு பெற்ற ஒரே கட்சி. சொல்லப்போனால் லிபரல்களின் விழுமியங்கள்தான் பெரும்பாலும் கனேடிய விழுமியங்களாக அறியப்படுகின்றன.

பலம்: அதிசக்திவாய்ந்த பிரச்சார இயந்திரம். கடந்த தேர்தல்களில் கடைசி இரண்டு வாரத்தில் ஒரு அதிரடிப் பிரச்சாரத்தின்மூலம் போக்கையே திருப்பி அனுப்பியவர்கள். குறிப்பாக இவர்களின் பிரச்சார உத்தி யாராவது ஒருவரைப் பிடித்து வில்லனாக்கி முழு கவனத்தையும் அவர்மேல் திருப்பி அந்த ஆளைக் கொடும்பாவி எரித்து அந்த ஜோதியில் ஜொலிப்பது. இவர்களுள் முந்தைய ஒண்டாரியோ மாநில முதல்வர் மைக் ஹாரிஸ் (கன்ஸர்வேட்டிவ்), அப்போதைய அல்பர்ட்டா முதல்வர் யாரோ அவர், (இது தவறாமல் நடக்கிறது), அல்லது க்யூபெக்கின் முதலிடப் பிரிவினைத்துவத் தலைவர். இந்த வருடம் நான் கணக்குப் போட்டு வைத்திருக்கும் வில்லன்கள் இருவர் – ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டீவன் ஹார்ப்பர் மற்றது அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ். ஹார்ப்பர் = புஷ் என்ற சமன்பாட்டை எவ்வளவு நன்றாக விற்கிறார்களோ அதில்தான் லிபரலின் வெற்றி தோல்வி அடங்கியிருப்பதாகக் கருதுகிறேன். இதற்கான முதல் காய்கள் நகர்த்தப்பட்டிருக்கின்றன. (விரிவாக அடுத்த பதிவில்).

பலவீனம்: மாற்றத்தை விரும்பும் மக்கள். 12 வருடங்களாக ஆட்சியில் இருந்ததால் போதுமான காழ்ப்புணர்வைச் சம்பாதிப்பது எளிது.

பலம்: தலைவர் பால் மார்ட்டின். நல்ல நிர்வாகியாக அடையாளம் காணப்படுகிறார். இவருக்கு மனித முகம் இருக்கிறது. சிலர் நிதியமைச்சராக இருந்தபொழுது இவர் ஜொலித்ததைப் போலப் பிரதமராக வெற்றிபெறவில்லை என்று சொன்னாலும் நான் மக்கள் பொதுவில் இவரது நிர்வாகத் திறனை மதிப்பதாகவே அளவிடுகிறேன்.

பலம்: அமெரிக்காவுடன் இணைந்து போருக்குச் செல்லாதது. அமெரிக்காவின் எதிரிடையான கனேடிய விருப்பங்களுக்கு முகமாக இருப்பது (போர் எதிர்ப்பு, தற்பால் திருமணம், புஷ்-பாணி கட்டுப்பெட்டித்தனம் – கருக்கலைப்பு எதிர்ப்பு, அரசியலிலும் பள்ளிகளிலும் மத ஆதிக்கம்,…). அண்டை நாட்டில் ஆட்சியில் இருந்தும் தற்பொழுதைய அமெரிக்காவின் கோர முகங்களுடன் தொடர்பில்லாதமை.

கன்ஸர்வேட்டிவ

பலம்: லிபரல்களின் மீதான அதிருப்தி. மாற்றத்தின் மீதான ஆர்வம்.

பலவீனம்: லிபரல்களின் மீதான அதிருப்தி (சரியாக விற்பனை ஆகாவிட்டால்). இவர்களிடம் நேரிடையாக விரும்பத் தகுந்த குணங்கள் இருப்பதாகப் பலரும் நினைப்பதில்லை. லிபரல்களுக்கு மாற்று என்பது மட்டுமே இவர்களது முதல் தகுதியாக அடையாளம் காணப்படுகிறது. இந்தப் பலத்தைப் பலவீனமாக்க லிபரல்களின் அதிசக்தி பிரச்சார பீரங்கி முயற்சிக்கும்.

பலம்: ஸ்டீவன் ஹார்ப்பரின் நிர்வாகத் திறமை பற்றி அதிகம் தெரியாது.

பலவீனம்: ஸ்டீவன் ஹார்ப்பர் மனித முகமற்ற இயந்திரமாக அறியப்படுவது. இதைப் போக்க இவர்கள் படாத பாடுபடுவது வேடிக்கையாக இருக்கிறது. ஹார்ப்பர் கோட்-டை-க்குப் பதிலாக டி-ஷர்ட் அணிந்து மேடைக்கு அழைத்து வரப்படுகிறார். இத்தகைய மேல்பூச்சுகள் சிரிப்பை வரவழைக்கின்றன. இது ஒரு நூலிழையில் நடத்தப்படும் கழைக்கூத்தாட்டம். இதன் அபத்தத்தை லிபரல்கள் அம்பலமாக்க முயல்வார்கள்.

பலவீனம்: மேற்கு மாநிலங்களின் பிரதிநிதிகளாக மாத்திரமே அறியப்படுதல். ஸ்டீவன் ஹார்ப்பருக்கு முழு கனடாவையும் தெரியாது என்று பலரும் நம்புகிறார்கள்.

பலம்: பணபலம். உலகின் இரண்டாவது பெரிய எண்ணைக் கேந்திரமான மேற்கு கனடா மாநிலங்களின் செல்வாக்கு இவர்களுக்கு அபரிமித பணபலத்தைத் தருகிறது. இது பிரச்சாரத்தில் நீராக ஓடும்.

பலவீனம்: பல கனேடிய விழுமியங்களில் முக்கியமானவையாகக் கருதப்படும் அரவணைப்பு, ஆதரவு, பன்முகத்துவம் இவற்றுக்கு எதிரான அடிப்படைவாதங்கள்.

பலம்: மாற்றத்தை விரும்பும் மக்கள்.

இப்படிக் கணக்கிட்டுப் பார்த்தால் இருவருக்கும் சமமான நிலைதான் இருக்கிறது. வருகின்ற நாட்களின் பிரச்சாரத்தில் லிபரலின் ஊழலைப் பெரிதும் முன்னிருத்த கன்ஸர்வேட்டிவ் முயலும் .மாறாக பழைய கன்ஸர்வேட்டிவ் ஊழல்களை (இவர்களும் சளைக்காதவர்கள்தாம்) லிபரல் கிளறிக்கொண்டிருக்காமல் ஹார்ப்பரை திறமையற்றவர், கருணையற்றவர், புஷ்ஷின் நண்பர், கன்ஸர்வேட்டிவ்கள் வருவது க்யூபெக்கின் பிரிவினைக்கு அடிகோலிடும் என்பதைப் போன்ற எதிர்பிரச்சாரங்களில் ஈடுபடுவார்கள் (இயன்றவரை ஊழலைப் பற்றிய பேச்சை எடுக்காமல் இருப்பதே லிபரலுக்கு நல்லது. திருவாளர் பொதுஜனத்திற்கு ஊழல் போன்ற விவகாரங்களில் எப்பொழுதுமே குறுகிய கால ஞாபகசக்திதான். இன்றைய ஊழல் நேற்றைய ஊழலைக் காட்டிலும் முக்கியமானது, அதன் அளவு சிறியதாக இருந்தாலும்). அதைப் போலவே புஷ் அராஜகங்களை ஆரம்பத்திலிருந்து எதிர்த்தது, நாட்டின் ஒரே தேசிய வாதக் கட்சி, ஸ்திரமான பொருளாதாரம் போன்றவற்றை லிபரல்கள் தூக்கிப் பிடிப்பார்கள்.

கணக்குப் போட்டுப் பார்த்தால் கன்ஸர்வேட்டிவ்களிடம் நேரிடையாகச் சொல்லிக் கொள்ள எந்தப் பெருமைகளும் இல்லாததைப் போலத்தான் தோன்றுகிறது. எதிர்மறைப் பிரச்சாரத்தில் கனேடிய மக்கள் அலுத்துப் போகக் கூடும். அந்த நிலையில் லிபரல்களின் கை ஓங்கும். இதுதான் என் முதல்கட்டக் கணிப்பு.

ஒன்றுமட்டும் உறுதி; லிபரல்களுக்கோ கன்ஸர்வேட்டிவ்களுக்கோ தனிப்பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது சிறுபான்மையாகத்தான் இருக்கும்.

(தொடர்ந்து கருத்துக்களை எழுத உத்தேசம்)