கடந்த சில நாட்களாக கனேடிய ஊடகங்களில் பெரும் பேச்சாக இருப்பது “அடுத்தது எங்கே குண்டு வெடிக்கும்”? இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னுடைய பதிவில் கருத்தெழுதிய கறுப்பியும் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார். அது குறித்த என் எண்ணங்களை விரிவாக எழுத வேண்டியிருந்ததால் உடனடியாக பதிலெழுதுவதைத் தவிர்த்தேன்.

கேள்வி மிகவும் பரபரப்பாகக் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அலுவலில் சக நண்பர்கள் கேட்கிறார்கள், அயலில் வசிப்பவர்கள் கேட்கிறார்கள். ரயில், பேரங்காடி, பூங்கா, மைதானம், ஏரிக்கரை என்று எல்லா இடங்களிலும் கவலையோடும், பயத்தோடும், சுவாரசியத்தோடும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். வானொலிகளும் தொலைக்காட்சிகளும் தெருவில் செல்பவர்களை நிறுத்திக் கேட்கிறார்கள் – அடுத்தது டொராண்டோவா? டொராண்டோ கனடாவின் ஆதார இதயம். இது தலைநகர் இல்லை ஆனால் வர்த்தக மையம். டொராண்டோவிற்கு ஏதாவது நடந்தால் கனடா மொத்தமுமே நிலைகுலைந்து போகக் கூடும். வர்த்தகம் மாத்திரமல்ல, டொராண்டோதான் கனடாவின் சக்தி மையம். பல விஷயங்கள் இங்கேதான் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே இவர்களின் கவலை நியாயமானது என்றுதான் கொள்ள வேண்டும். பிரதமர் அடிக்கடி தன்னுடைய ஆலோசகர்களை இதுகுறித்த விபரங்களைத் தனக்கு உடனடியாகத் தரச் சொல்லியிருக்கிறார். அதாவது ஒரு இரயில் பெட்டியில் காலிப்பையை யாராவது விட்டுச் சென்றால் அதுபற்றிய தகவல்கள் பிரதமரின் அலுவலகத்திற்குத் தரப்படுவதாகத் தெரிகிறது. இரயில் நிலையங்களில் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆனால் மறுபுறத்தில் இந்த மாநகரின்மீது இதுபோன்ற தாக்குதல் நடத்தப்படும் சாத்தியங்களைப் பார்த்தால் வெறுமைதான் மிஞ்சுகிறது. முதல் காரணம், கனடா “தீவிரவாதத்தின் மீதான போரில்” பங்குபெறவில்லை. ஜார்ஜ் புஷ் எவ்வளவோ கையை முறுக்கிப் பார்த்தும் கனடா மறுத்துவிட்டது. (இதன் காரணமாகப் பல பொருளாதார, அரசியல் கோபங்களைச் சம்பாதித்துக் கொண்டது உண்மை. உலகின் ஜனநாயகக் காவலனாகத் தன்னைப் பறைசாற்றிக் கொள்ளும் அமெரிக்கா தனது அண்டை நாட்டின் ஜனநாயக முடிவுக்குக் கொடுக்கும் மதிப்பைப் பார்த்தால் சிரிப்புதான் வரும்). இந்த வெடிகுண்டுகள் அமெரிக்கா முன்னின்று நடத்தும் போரில் பங்குபெறும் நாடுகளின் மீதுதான் நிகழ்ந்திருக்கிறது. மாட்ரிட், லண்டன் குண்டுகள் அந்த நாடுகளின் போர்க்கொள்கைகளின் மீது வைக்கப்பட்ட கோரமான விமர்சனம். இந்தோனேஷியாவில் வெடித்த குண்டுகள் அங்கு பெரும்பான்மையில் வரும் ஆஸ்திரேலியச் சுற்றுலாப்பயணிகளைக் குறிவைத்தவை. நேரடியாக ஆஸ்திரேலியாவில் போய்த் தாக்குவதைவிட பாலியில் இது எளிதாக முடிக்கப்பட்டது. இந்தக் கருத்தின் அடிப்படையில் பார்க்கப்பட்டால் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் இலக்காக கனடா மாறுவதற்கான சாத்தியங்கள் மிக, மிகக் குறைவு.

இன்னொரு முக்கியமான விஷயம், டொராண்டோவின் பன்முகத்தன்மை. உலகிலேயே டொரோண்டோவிற்கு இணையாக கலப்பு விகித மக்களமைப்பைக் கொண்ட நகரம் எதுவுமில்லை. இங்கு இருப்பவர்களில் சரிபாதியினர் வேற்று நாட்டில் பிறந்தவர்கள். இன்னும் சொல்லப்போனால மூன்றில் ஒருபகுதியினர் இனங்காணவல்ல சிறுபான்மையினர் (Visible Minorities). இன்னும் முக்கியமான விஷயம் இங்கே இனக்கலப்பு மிக நன்றாக நடந்திருக்கிறது; அதாவது எந்த ஒரு இடத்தையும் தனிப்படுத்தி ஒற்றை இனக்குழுவை முன்வைத்துத் தாக்குதல் நடத்துவது என்பது கஷ்டம். இந்த நிலையில் இலக்கின்றி (நியூயார்க், லண்டனில் நடந்ததைப்போல தற்கொலை குண்டு முயற்சிகள்) தாக்குதல் நடத்தினால் தம்மின மக்கள், தம்மை ஆதரிப்பவர்கள், புரிந்துணர்வு கொண்டவர்கள் என்று பலரையும் பலிவாங்க வேண்டியிருக்கும்.

உண்மைதான்; கனடாவிடம் அமெரிக்காவைப் போலவோ, பிரிட்டனைப் போலவோ படைபலம் கிடையாது. ஜி8 நாடுகளுக்குள்ளே இராணுவத்திற்கு மிகக் குறைவாகச் செலவிடுவது கனடாதான். முக்கிய காரணம் கனடாவிற்கு ஆதிக்கக் கனவுகள் கிடையாது. இராணுவத்தில் பிற நாடுகள் செலவிடும் சக்தியை கனடா பொதுநலத் திட்டங்களிலும், அகதிகள் மேம்பாட்டிற்கும் செலவிடுகிறது. பிறரை அழித்தொழிக்கும் எண்ணம் இல்லாதவரையில் தான் அழிவோம் என்ற கவலை தேவையில்லை.

புஷ்ஷின் அபத்தப் போரில் கனடா பங்குபெற மறுத்த சமயத்தில் அமெரிக்க ஊடகங்கள் கனடாவை பழித்து நிறைய சிரிப்பலைகளை அமெரிக்கர்களிடையே உண்டாக்கின. “பரவாயில்லை, நீங்கள் என்ன செய்வீர்கள். உங்களிடம் இராணுவம் என்று ஒன்று இருந்தால்தானே நீங்கள் எங்களுக்குத் துணை வரமுடியும்”, “கனடா தற்பாலர்களுக்கு, கஞ்சாப் பிரியர்களுக்கு, அகதிகள் என்ற பெயரில் தீவிரவாதிகளுக்கு சொர்க்கம்” என்ற ரீதியில் பின்னரவுகளில் ஜே லெனோ, லெட்டர்மான் போன்று பலரும் சிரிப்புடனும், பாலைவனம் தகர்க்கப்படும் என்ற மன நிம்மதியுடனும் அமெரிக்கர்களைப் படுக்கைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

காலம் காலமாக அமெரிக்கா தீவிரவாதத்தை வளர்த்துவிட்ட நாடுகள் எல்லாவற்றிலிருந்தும் அகதிகளாக வந்தேறியவர்கள் கனடாவில் நிறையபேர் இருக்கிறார்கள். அமெரிக்கா குண்டுகளை வீசிவிட்டுப் போகும் உடனே கனடாவின் இடங்கள் நிறையும். வியட்நாம் தொடங்கி, ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சிலி, க்யூபா என்று பல நாடுகளிலிருந்தும் வந்தவர்கள் இங்கு அதிகம். இவர்களுக்குத் தீவிரவாதத் தொடர்பிருக்கிறது, இவர்கள் வீட்டுப் புழக்கடைகளில் அமெரிக்காவைக் குறிவைத்து வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுகின்றன என்றெல்லாம் அமெரிக்கா பரப்பிக் கொண்டிருக்கிறது. இது தொடர்ச்சியான பயமுறுத்தல்களின் மூலம் நிலைசார்பற்ற கனேடியர்களிடம் தங்கள் போரை நியாயப் படுத்தும் முயற்சியைத் தவிர வேறேதுமில்லை என்றுதான் தோன்றுகிறது.

இதன் இன்னொரு பக்கம் தீவிரவாதிகளை எந்தவிதமான நியாயங்களும் இல்லாதவர்களாகச் சித்தரிப்பது. இது நியாயம்-அநியாயம், நல்லவன் – கெட்டவன் ரீதியான புஷ்ஷின் கறுப்பு வெளுப்பு பாகுப்பாட்டின் விளைவு. இலக்கின்றி அழித்தொழிக்க அவர்கள் ஒன்றும் மனம் பிறழ்ந்தவர்கள் அல்லர். என்ன, ஒருவகையில் அவர்களுக்கு அமெரிக்காவைப் போல வார்த்தைச் சிலம்பமாடி தங்கள் தரப்பை நியாயப்படுத்தி சந்தைப் படுத்தும் திறமை இல்லை. அதற்கான ஊடகக் கையிருப்பும் அவர்களிடம் இல்லை. எனவே கொலையை இருவரும் செய்துகொண்டிருக்கும் பொழுது ஒன்று நியாயமாகவும் மற்றது அநீதியாகவும் உரத்து ஓதப்படுகிறது.

இதெல்லாம் மீறி கனடாவிலும் குண்டு வெடிக்கும் நூலிழைச் சாத்தியம் இருப்பதை நான் அறிவேன். ஆனால் அமெரிக்கர்களைப் போல இதற்காக வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு உறக்கமின்றி திரியத் தேவையில்லை. நான் பயப்படுகிறேன், நீயும் பயப்படு என்று தங்கள் பயத்தைத் தொற்று வியாதியாகப் பரப்பிக் கொண்டிருக்கிறன அமெரிக்க ஊடகங்கள்.