ஐந்து இசையமைப்பாளர்கள் ஒரு படத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியாக இசையமைத்தது எனக்குத் தெரிந்த வகையில் தமிழ்த் திரையுலகில் இரண்டு முறைதான் நடந்திருக்கிறது. 2002 ஆம் ஆண்டு ‘ஹேய் நீ ரொம்ப அழகா இருக்கே’ என்று அபத்தமாகத் தலைப்பிடப்பட்டு ஒரு திரைப்படம் வந்தது. அதற்கு ஸ்ரீனிவாஸ், ராகவ்-ராஜா, முருகவேல், ரமேஷ் விநாயகம், அரவிந்த்-ஷங்கர் (அஞ்சா, இல்ல ஏழா?) ஒவ்வொருவரும் தனித்தனியே ஒரு பாடலுக்கு இசையமைத்தார்கள். கேளடி கண்மணி, ரிதம் போன்ற அற்புதமான பாடல்களைக் கொண்ட படங்களை இயக்கிய வஸந்துக்கு ஏன் இப்படி ஒரு அபத்தமான சிந்தனை வந்தது என்று தெரியவில்லை.

பாடல் –
நானொரு பொன்னோவியம் கண்டேன்
படம் – கண்ணில் தெரியும் கதைகள் (1980)
இசை – இளையராஜா
பாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா, எஸ்.ஜானகி
பாடலாசிரியர் – புலமைப்பித்தன்

இதற்கு முன்னால் 1980ல் திரைப்பட நடிகர் ஏ.எல்.ராகவன் ‘கண்ணில் தெரியும் கதைகள்’ என்று ஒரு படத்தைத் தயாரித்தார். சரத்பாபு, ஸ்ரீபிரியா, வடிவுக்கரசி நடித்த இந்தப் படத்திற்கு ஜி.கே. வெங்கடேஷ், டி.ஆர். பாப்பா, கே.வி.மஹாதேவன், சங்கர்-கனேஷ், இளையராஜா, என்று ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்திருந்தார்கள். இப்பொழுது என் மனதில் இரண்டு பாடல்கள்தான் நினைவிலிருக்கின்றன. சங்கர்-கனேஷ் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம், ஜிக்கி பாடிய “நான் ஒன்ன நெனச்சேன்” என்ற இனிமையான பாடல் இன்றைக்கும் தெவிட்டாதது.

ஆனால் படத்தில் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னால் வந்தது இளையராஜாவின் ‘நானொரு பொன்னோவியம் கண்டேன்’ பாடல்தான். தமிழ் திரையில் ஜானகியும், பி.சுசீலாவும் இணைந்து பாடிய ஒரே பாடல் இதுதான் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு தென்னிந்தியத் திரையுலகை ஆட்சி செலுத்திய இவர்களுடன் இன்னொரு ஜாம்பவானான எஸ்.பி.யும் இணையும் ஒரே பாடல் இது.

நடனத்திற்காக இசையமைக்கப்பட்ட அற்புதமான பாடல். மோஹன ராகத்தில் இளையராஜா பல (பலப்பலபல என்றுதான் சொல்லவேண்டும்) அற்புதமான பாடல்களைத் தந்திருக்கிறார். இன்றைக்கும் என்னை வியப்பில் ஆழ்த்துவது அக்னி நட்சத்திரத்தின் நின்னுக்கோரி வர்ணம் பாடல். இந்தப் பாடலும் மோஹனம்தான்.

அற்புதமான துவக்கம், சலங்கை குலுங்க நடனமாது நடந்துவருவதற்காக. தொடர்ந்து மிருதங்கம், வயலின், வீணை. எஸ்.பி.பியின் ஆரம்பமே கம்பீரமாக இருக்கும். இளையராஜாவின் முத்திரையான சேர்குரல்கள் பாடல் முழுவதும் அற்புதமாக… “பார்வை அழைப்பதும், பாவை தவிப்பதும் ஏனடி, ஏனடி பைங்கிளியே” என்ற வரியில் எஸ்.பி.பியின் குரல் நெளிவைக் கேட்டுப் பாருங்கள். இதேபோல பாடல் முடியும் வரிகளிலும்.

புலமைப்பித்தன் பல நல்ல பாடல்களை எழுதியிருக்கிறார். சில நாட்களுக்கு முன் நான் எழுதிய ராத்திரியில் பூத்திருக்கும் பாடலும் புலமைப்பித்தன் எழுதியதுதான். நீண்ட நாட்களுக்குப் பிறகு பாரதி திரைப்படத்தில் ‘எதிலும் இங்கும் இருப்பான்’ பாடலைப் இளையராஜாவின் இசைக்காக எழுதினார்.

இந்தப் பாடல் எப்படிப் படமாக்கப்பட்டது என்பது தெரியாது. கட்டாயம் சரத்பாபு ஆடுவதை என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. (ஒரு மூலையில் ஜிப்பா போட்டுக்கொண்டு பேஸ்த் அடிக்க நின்று கொண்டு பாடுவார் என்று நினைக்கிறேன்). அதேபோல வடிவுக்கரசி ஆடியிருக்கவும் முடியாது. ஸ்ரீபிரியா – பரவாயில்லை. யாருக்காவது நினைவிருக்கிறதா?

படம்.. வழக்கம்போல பெட்டிக்குள் போய் முடங்கி ஏ. எல் ராகவனை (எங்க கும்மோணத்துக்காரர்) தலையில் துண்டு போடவைத்தது. ஆனால் ஐந்து இசையமைப்பாளர்கள், இரண்டு பாடல்களில் அபூர்வ சேர்க்கை (எஸ்.பி.பி-வாணி ஜெயராம்-ஜிக்கி, எஸ்.பி.பி.-சுசீலா-ஜானகி) என்று தமிழ்த் திரையிசை உலகில் ஏ.எல்.ஆர் தனி இடத்தைப் பிடித்துக் கொண்டுவிட்டார்.