பொதுவில் தமிழ்த் திரையுலகில் ஒருவர் செய்ததை இன்னொருவர் தன் பாணியில் செய்துபார்க்க முயற்சிப்பதில்லை. இதுபோன்ற முயற்சிகள் சுவாரசியமானவை. உதாரணமாக, பாப் மார்லியின் பிரபலமான I shot the Sheriff பாடல் பிறகு எரிக் க்ளாப்டனால் பாடப்பட்டு மிகப் பிரபலமானது. பாப் டிலனின் Like a Rolling Stones பாடலுக்கு ஜிம்மி ஹென்ட்ரிக்ஸ் தனது அற்புதமான கிடார் இசையைச் சேர்த்தார். இன்னும், கிளாப்டனின் பாடலை பீட்டில்ஸ் பாடுவது, ஜான் லென்னானின் பாடலை மடோனா பாடுவது இதெல்லாம் சகஜம். எனக்குத் தெரிந்தவகையில் பாப் டிலனின் Knockin’ on Heaven’s Door பாடலை Eric Clapton, Greatful Dead, George Harrison, Bob Morley, U2, Guns N’ Roses என்று பலர் பாடுவதைக் கேட்டிருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒருவிதமாக இருக்கும். க்ளாப்டனின் ப்ளூஸ் கிட்டார் வடிவம், கண்ஸ் அண்ட் ரோஸஸின் ஹெவி மெட்டல் வடிவம் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை இதுவரைக் கேட்காதவர்கள்கூட கற்பனை செய்து பார்க்கமுடியும்.

[audio:20050626-OruNaalPothuma.mp3]
பாடல் : ஒரு நாள் போதுமா
படம் : திருவிளையாடல்
பாடியவர் : எம். பாலமுரளிகிருஷ்ணா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசை : கே.வி. மஹாதேவன்

மறுமுயற்சி : எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
[audio:20050626-orunaal_podhuma_spb.mp3]

ஆனால் நம்மூரில் பொதுவாக இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவது மிகவும் குறைவு. நம்மாட்கள் அநியாயத்திற்குச் சுருங்கிப் போகிறார்கள். ஒன்று மற்றவர் பாடலை நாம் பாடினார் அவருக்கு மரியாதை கொடுப்பதைப் போலாகிவிடும் (கொடுத்தால்தான் என்ன?) என்ற திமிர், மற்றது அவரையும் நம்மையும் ஒப்பிட்டுவிடுவார்களோ என்ற பயம். இதையெல்லாம் கடந்து முயற்சி செய்வதற்கு நிறைய திறமையும், பரந்த மனதும், தைரியமும் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைத்தனமான ஆர்வம் வேண்டும்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்திடம் இவை எல்லாமே நிறைய இருக்கின்றன. அதனால் 14 பாடல்களைப் பொறுக்கியெடுத்துப் பாடியிருக்கிறார். இதில் அந்தக் காலத்து திருச்சி லோகநாதனில் தொடங்கி இப்பொழுதைய ஹரிஹரன், ஏ.ஆர். ரகுமான் வரை அடக்கம். கவனிக்கவும் – பி.பி. ஸ்ரீனிவாஸ், ஜெயச்சந்திரன், யேசுதாஸ், ஹரிஹரன், போன்றவர்களின் குரல்களைப் பாடுவதில் எஸ்.பி.பிக்கு அவ்வளவாகப் பிரச்சனையில்லை. ஆனால் திருச்சி லோகநாதன், எம்.எஸ். விஸ்வநாதன் போன்றவர்களின் பாடல்களைப் பாடுவதில் நிறைய சிக்கல் இருக்கிறது. இதில் எஸ்.பி.பி நிறையவே வெற்றி கண்டிருக்கிறார். 14 பாடகர்கள், கிட்டத்தட்ட அறுபது வருட இடைவெளியில் வந்த பாடல்கள் – இவற்றை ஒரே பாடகரின் குரலில் கேட்பது சுவாரசியமனா விஷயம்தான். இன்னொரு முக்கியமான விஷயம் – இந்தப் பாடல்களை வெவ்வேறு பாடகர்கள் வெவ்வேறு வயதுகளில் பாடியிருக்கிறார்கள், உதாரணமாக இருபது வருடங்களுக்கு முன்வந்த கண்ணே கலைமானே பாடலை இப்பொழுது யேசுதாஸ் பாடினால் அதுவே மிகவும் வித்தியாசமாகத்தான் இருக்கும். அந்த நெளிவு சுளிவுகளைத் திரும்பக் கொண்டுவருவது அவருக்கே இயலாததாகத்தான் இருக்கும்.

மாதிரிக்கு இரண்டு பாடல்களையும் அவற்றின் முதல்வடிவங்களையும் இங்கே கொடுத்திருக்கிறேன். இரண்டுமே கடினமான பாடல்கள். ஒன்று கர்நாடக இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா தன்னுடைய சாஸ்திரிய இசைத் திறமையெல்லாம் பயன்படுத்திப் பாடுவது – குறிப்பாக பாடலின் இறுதிப்பகுதி. மற்றது தனித்தன்மை கொண்ட திருச்சி லோகநாதனின் அற்புதமான பாடலை எஸ்.பி.பி பாடுவது. இந்தப் பாடலில் பல இடங்களில் உச்சஸ்தாயியில் பாடவேண்டியிருக்கும். எஸ்.பி.பி நன்றாகவே செய்திருப்பதாகத்தான் தோன்றுகிறது.

பாடல் : ஆசையே அலைபோலே
[audio:aasaialai.mp3]
படம் : தை பிறந்தால் வழிபிறக்கும் (1966)
பாடியவர் : திருச்சி லோகநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசை : கே.வி. மஹாதேவன்

மறுமுயற்சி :
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
[audio:20050626-aasaiyae_spb.mp3]

இதே போன்ற சிறுமுயற்சிகள் அவ்வப்பொழுது வந்துகொண்டுதானிருக்கின்றன. உதாரணமாக சமீபத்தில் ஏ.ஆர். ரகுமான் தொட்டால் பூமலரும் பாடலுக்கு தன்னுடைய பாணியில் இசையமைத்தார். இதற்கு முன்னால், இளையராஜா உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் பாடலை டூயட்டாக்கினார். சொல்லப்போனால் பாடகர் அதே ட்யூனில் திரும்பப் பாடுவதைவிட இசையமைப்பாளர் வடிவத்தையே மாற்றுவதுதான் இன்னும் சுவாரசியமானது. ஆனால் இங்கே எப்பொழுதாவதுதான் அப்படி நடக்கிறது. சில சமயங்களில் பழைய பாடல் ஒன்றின் வரிகள் புதிய படத்தின் சூழலுக்கு அற்புதமாகப் பொருந்துவதைக் கண்டிருக்கிறேன். “ஆஹா, இந்த எடத்துல அந்தப் பாட்டு வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்” என்று தோன்றும்.

இந்த இசைத்தொகுப்பின் பிற பாடல்களை தூள்.காம் மூலம் கேட்க முடியும். பின்னர் தூள்.காம் பேட்டியில் எஸ்.பி.பி இது அரைகுறை முயற்சி என்றும் எந்தவிதமான பெரிய தயாரிப்புகளும் இல்லாமல் எதேச்சையாகப் பாடியது என்றும், இது அப்படியே வெளிவந்தது தனக்குக் கொஞ்சம் சங்கடமாக இருந்தது என்றும் சொல்லியிருக்கிறார். இன்னும் கொஞ்சம் சிரத்தையெடுத்து நன்றாகச் செய்திருக்கலாம் என்பது அவருடைய ஆசை. என்னைப் பொருத்தவரை இதில் எஸ்.பி.பிக்கு முழுத்தோல்வி சீர்காழி கோவிந்தராஜனின் பாடலில்தான். கொஞ்சமும் சரிவரவில்லை. ஆனால் இவற்றை மூலங்களுடன் வரிக்குவரி ஒப்பிட்டுப் பார்ப்பதைவிட மாபெரும் இசைக் கலைஞர்களுக்கு இன்னொரு இசைமேதை செலுத்தியிருக்கும் மரியாதை என்ற கண்ணோட்டத்துடன் கேட்டுப்பாருங்கள் – அற்புதமாக இரசிக்க முடியும்.