சென்றவாரம் என் அலுவலில் எனக்குப் புது மடிக்கணினி கிடைத்தது. பெண்டியம் 3 (700 மெஹாஹெர்ட்ஸ்) கொண்ட பழைய சோனி வாயோ என் வேலைக்குப் போதவில்லை என்று அழுது அடம்பிடித்துப் புதிய வாயோவை வாங்கிக் கொண்டேன். இதனுடைய விபரங்கள் இங்கே. விலை வேண்டுமானால் இங்கே பார்த்துக் கொள்ளுங்கள்.

முக்கியமாக இது 13.5″ அகலத்திரை (16:9) கொண்டது. எடை, 1.90 கிலோ (பாட்டரி, டிவிடி எல்லாம் சேர்த்து). பழைய கணினியின் எடையில் கிட்டத்தட்ட பாதிதான். நான் வாயோ-க்காரன். இது நான் வாங்கும் மூன்றாவது சோனி வாயோ. என் முதல் மடிக்கணினி தொஷீபா, இடையில் ஒரு மாதத்திற்கு ஒரு டெல் மடிக்கணினியை வைத்திருந்தேன். அது பிடிக்காமல் போக, சகாவின் தலையில் கட்டிவிட்டு ஒரு மாதம் மேசைக்கணினியில் தேவுடுகாத்து இதற்கு முந்தைய பெண்டியம் 3 வாயோவை வாங்கினேன். வாயோவின் ஒலியும், ஒளியும் வேறு எதிலும் வராது என்பது என் அபிப்பிராயம். (சோனி அடிப்படையில் தொலைக்காட்சி, வாக்மென்காரர்கள்தானே). கணினியின் சில படங்கள், தோலுரிக்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பியின் திரையோவியங்களை இங்கே போட்டிருக்கிறேன்.

இந்தப் பதிவு இதையெல்லாம் சொல்லிக் கொள்வதற்காக இல்லை. இதில் லினக்ஸை நிறுவும் என் முயற்சி பற்றியது. பலருக்கும் அடிப்படையில் லினக்ஸ் சரியாக வேலை செய்யாது என்ற பயம் இருக்கிறது. இது ஓரளவுக்கு உண்மை(யாக இருந்தது). அதிலும் குறிப்பாக பல இரகசியங்களை உள்ளடக்கி வரும் மடிக்கணினிகளில் லினக்ஸை நிறுவி இயக்குவது எளிதான காரியமல்ல (என்றிருந்தது). வன்பொருள் தயாரிப்பாளர்கள் பொதுவில் திறமூல இயக்கிகளை எழுத தங்கள் தொழில் இரகசியங்களை அறியத்தருவதில்லை. இதற்கு உதவுவதற்காக, மடிக்கணினியில் லினக்ஸ் பயன்படுத்துபவர்கள் தங்கள் அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்வார்கள்; இந்தத் தளத்தைப் பார்க்கவும்.

நான் இந்த மடிக்கணினி வாங்கும் முன்பு, இணையம் எங்கும் தேடியும் இந்த Vaio S-series கணினிகளில் லினக்ஸ் அனுபவம் பற்றி எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், எஸ்-வரிசையின் விலை அதிகம். இது மாணவர்கள் கைக்கு எட்டாதது. எனவே, இதில் அறுவை சிகிச்சை செய்து பார்ப்பவர்கள் அதிகம் கிடையாது. பொதுவில் விலை அதிகமுள்ள எல்லா மடிக்கணினிகளுக்கும் லினக்ஸ் உதவி கிடைப்பது கஷ்டம். இதை வாங்கும்பொழுது இந்தத் தயக்கம் இருந்தது. தேர்ந்தெடுத்து இணையத்தில் ஆர்டர் கொடுத்துவிட்டு லினக்ஸ் உதவியைத் தேடியவனுக்குப் பெரிய ஏமாற்றம். ஆர்டர் அனுப்பிய மறுநாள் என் கடன் அட்டையில் ஏதோ பிரச்சனை என்று திரும்ப அழைத்தார்கள். ஆர்டர் கொடுத்து ஒரு வாரத்திற்குக் காத்திருக்கிறார்கள் என்று சொன்னார். அப்பொழுதுகூட இதை நிறுத்திவிடலாம் என்றுதான் எண்ணினேன். அப்படிச் சரியாக வரவில்லை என்றால் பழைய மடிக்கணினியை இன்னும் நான்கு மாதங்களுக்கு லினக்ஸ்க்காகத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று எண்ணினேன் (பொதுவில் வயசான கணினிகள் ஆய்வகத்தில் கருவிகளுடன் இணைக்க உள்ளே தள்ளப்படும்).

வந்த முதல்நாள் அலுவலில் எல்லோரும் விளையாடிப் பார்ப்பதில் போய்விட்டது. மறுநாள் திறந்து உள்ளே இருப்பவற்றைப் பார்க்க. மூன்றாம் நாள் எல்லாவற்றையும் சுத்தமாக அழித்துவிட்டு வேலையைத் துவங்கிவிட்டேன். அதிசயத்தில் அதிசயம், எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் கிட்டத்தட்ட எல்லா பாகங்களையும் லினக்ஸில் அற்புதமாகச் செயல்படவைக்க முடிந்தது. குறிப்பாக, புதுவகை LCD திரை, சென்ட்ரினோ வயர்லெஸ் எல்லாம் பிரச்சனை தரும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இரண்டு மணி நேரத்தில் எல்லாவற்றையும் அற்புதமாக இயக்க முடிந்தது. பிறருக்கு உதவுவதற்காக என் அனுபவங்களை இங்கே எழுதியிருக்கிறேன் .

ஆக, நாளுக்கு நாள் சாதாரண பயனர்களின் உபயோகத்திற்கு லினக்ஸ் எளிதாகி வருகிறது. இன்னும் தயக்கமிருப்பவர்கள் ஏதாவது ஒரு பழைய கணினியில் முயற்சித்துப் பாருங்கள். இன்னும் என் கணினியில் சரியாகச் செயல்படாமல் இருப்பது சோனியின் மெமரி ஸ்டிக் ரீடர்தான். பழைய கணினியில் மெமரிஸ்டிக்கைத் தனியாக நிறுவியிருக்கிறேன். எனவே, இதை எளிதில் சரிப்படுத்திவிடுவேன். கவனிக்கவும், காசு (அதிகம்) கொடுத்து வாங்கும் விண்டோஸையும் ஒருமுறை கழற்றிவிட்டு மடிக்கணினியில் திரும்பப் பூட்டிப் பாருங்கள், ஏதாவது ஒன்றிரண்டு பாகங்களைச் செயல்பட வைப்பது கஷ்டமாகத்தான் இருக்கும். இந்த நிலையில் எளிமைக்கு இரண்டுக்கும் இடையில் அதிகம் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டது.

* * *
மைக்ரோஸாப்ட் வரி கொடுத்து வாங்கிய இந்த கணினியில் சிறு அலுவலகங்களுக்கான ஆபீஸ் (வேர்ட், எக்ஸெல், பப்ளிஷர் மாத்திரம்தான் அக்ஸஸ் பவர்பாயிண்ட் கிடையாது) அறுபது நாள் சோதனை உரிமையுடன்தான் வந்திருக்கிறது. அதனுடன் கூடவே, மைக்ரோஸாப்ட் ஒர்க்ஸ் என்ற ஓட்டை ஆபீஸ் பொதியும் இருக்கிறது. (இதிலும் பவர்பாயிண்ட் கிடையாது). எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகத் துடைத்து எடுத்துவிட்டு ஓப்பன் ஆபீஸ், ·பயர்·பாக்ஸ், தண்டர்பேர்ட், சன்பேர்ட் போட்டிருக்கிறேன். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் என் பழைய ஆபீஸ் ஆவணங்கள் இயங்குகின்றன. லினக்ஸிலும் இதே பொதிகள் இருப்பதாலும் இரண்டுக்கும் பொதுவான (FAT32 Parition) பகுதியில் ஆவணங்களைச் சேமிப்பதாலும் இனி லினக்ஸில் செலவிடும் நேரம் அதிகரிக்கும்.

* * *
லினக்ஸ் நிறுவும் பொழுது தமிழும் தேவை என்ற ஒற்றைத் தெரிவின் மூலம் தமிழ் லினக்ஸ்ம் அற்புதமாக நிறுவப்பட்டிருக்கிறது. இதன் திரையோவியங்களை விரைவில் இடுகிறேன்.