தன்னிடம் அணுகுண்டு இருப்பதாக வடகொரியா வாக்குமூலம் தந்திருக்கிறது. அமெரிக்காவிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவே அணு ஆயுதத்தைத் தயாரித்திருப்பதாகச் சொல்லுகிறது. இன்னும் சிலகாலங்களுக்கு இதுகுறித்து யாருடனும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லை என்றும் அறிவித்திருக்கிறது. ஐக்கிய நாடுகளின் அணு ஆயுத சோதனையாளர்களை தங்கள் நாட்டைவிட்டு 2002ல் வெளியேற்றிவிட்டார்கள். அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்ததிலிருந்து 2003ஆம் ஆண்டு வெளியேறினார்கள். இப்பொழுது முதன் முறையாக அதிகார்வபூர்வமாக தங்களிடம் அணு ஆயுதம் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

மிகவும் முக்கியமான அறிவிப்பு இது. பலருக்கும் வெளியில் தெரியாது, ஆனால், வட கொரியா, தென்கொரியா, சீனா, தைவான், ஜப்பான், இந்த ஐந்து நாடுகளும் வரலாற்று/பொருளாதார ரீதியாக ஒன்றை ஒன்று தீவிரமாக வெறுக்கின்றன. ஆனால், ஜப்பான், வடகொரியா, தென்கொரியா தைவான் நாடுகள் அரசியல்வாதிகளால் நடத்தப்படுவதில்லை, அவற்றின் வெளிவிவகாரக் கொள்கைகள் பன்னாட்டு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் உன் சிண்டு என் கையில் என்று சதுரங்கக் காய்களை நகர்த்துவதைப்போல நகர்த்திக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் வடகொரியாவின் இந்தமுறை சதுரங்கத்தில் காயை நகர்த்தின் “செக்” என்று அறிவித்திருக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் ஆரம்பத்தில் தன்னுடைய இராணுவ ஆக்கிரமிப்பால் அமெரிக்கா விளையாட்டின் அடுத்த கட்டங்களைத் தீர்மானித்து வந்தது. பின்னர், ஜப்பான், தென்கொரியா, தைவான் நாடுகளுடன் அமெரிக்கப் பொருளாதாரம் பிணைந்துபோயிற்று. சமீபகாலங்களில் இந்தப் பட்டியலில் சீனாவும் மிக மூக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. எனவே, இங்கு நடக்கும் எந்த செயலும் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கும்.

இதுவரை வடகொரியா எந்த அணு ஆயுதச் சோதனைகளையும் நடத்தவில்லை. ஆனால் மறு உபயோகப்படுத்தவல்ல புளுட்டானியம் குச்சிகளை வைத்துக் கொண்டு அணுகுண்டு தயாரித்திருப்பதாகத் தெரிகிறது. (அணு ஆயுதம் தயாரிக்கும் தொழில்நுட்பம் இப்பொழுது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை, பல இடங்களில் கிடைக்கின்றன). வடகொரியாவின் இந்த அணு ஆயுத நுட்பத்தை வழங்கியதில் முக்கியமான நாடு பாக்கிஸ்தான். இவர்களைத் தவிர்த்து, இரான், லிபியா போன்ற நாடுகளுக்கும் பாக்கிஸ்தானின் நுட்பம் விற்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

ஒருபுறத்தில் கொடுங்கோலர் சதாம் பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதாகச் சொல்லி அமெரிக்கா ஈராக் நாட்டு குடிசைகளின் மீது குண்டுகளைப் போட்டு அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் அங்கிருக்கும் எண்ணைய் வயல்கள் அமெரிக்காவின் பாதுகாப்பில் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கின்றன. பேரழிவு ஆயுதம், ஜனநாயக எதிரி, கொடுங்கோல் என்றெல்லாம் வருணித்து ஈராக்கில் புகுந்தது அமெரிக்கா. இப்பொழுது அதன் கவனம் இரான் மீதும் திரும்பியிருக்கிறது. ஆனால், தீர்மானமாக இந்த தகுதிகள் அனைத்தும் இருந்தாலும் வடகொரிய மக்களை கொடுங்கோலரிடமிருந்து காப்பாற்றி அங்கு தேர்தல் நடத்த பேரரசர் புஷ் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

அங்கென்ன இரான்/ஈராக் போல் எண்ணை ஊற்றெடுக்கிறதா?

வடகொரியாவின் இந்த அணுகுண்டுக்கு அமெரிக்காதான் முழுப் பொறுப்பு. தானும் அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டு பிறரையும் தன் எதிர்செயல்கள் மூலமாக அமெரிக்கா தூண்டியிருக்கிறது. நேரடியாகத் தன்னிடம் அணுவாயுதம் இருக்கிறது என்று சொல்லியிருப்பதன் மூலம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் எந்த மிரட்டலும், இராணுவத் தாக்குதலும் தன்னிடம் பலிக்காது என்பதை வடகொரியா தீர்மானமாகத் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்கா முற்றிலுமாக இதிலிருந்து விலகிக் கொண்டு ஏதாவது ஒரு ஸ்காண்டிநேவிய நாட்டின் (அல்லது அவைபோன்ற அதிகம் பிரச்சனையில்லாத நாட்டின்) தலைமையில் வடகொரியாவை பேச்சுக்கு அழைப்பதே ஒரேவழி.

(ஆமாம், எத்தனை தடவை கேட்பது, சதாம் ஐயா இப்ப எங்க இருக்கார்? ஓஸமா பின் லேடன்? முல்லா முஹம்மது ஓமார்?… பாவம், ஈராக்கின் சராசரி ஏழையும், புஷ்ஷின் தேசப்பற்று பேச்சில் மயங்கிப்போன (ஏழை) அமெரிக்க இராணுவவீரர்களும்தான் அடித்துக் கொண்டு சாகிறார்கள்)