London Bombing - National Post

இன்றைக்கு எல்லா நாளிதழ்களிலும் லண்டன் குண்டுவெடிப்பு பற்றிதான் தலைப்புச் செய்திகள். தவறேதுமில்லை. ஆனால் பத்திரிக்கைகள் ஒரேயடியாகத்தான் அழுகின்றன. உதாரணமாக கனடாவின் முக்கிய நாளேடுகளில் ஒன்றான The National Post இன்றைக்கு தன் முதல் பக்கத்தை கறுப்பு மையால் நிரப்பியிருக்கிறது. வழமையாக வரும் விளம்பரங்கள், உள்ளடக்க முன்னோட்டங்கள் எதுவுமில்லை. கூடவே செத்துப்போனவர்களைப் பற்றிய தகவலோ வருத்தமோ விடுத்து டோனி பிளேர் விடுக்கும் அறைகூவல் எச்சரிக்கை முன்னிலைப்படுத்தப்படுகிறது.

சில உயிர்கள் மற்றவற்றைவிட முக்கியமானவை அப்பொழுது மாத்திரம் பத்திரிக்கைகளுக்கு அவலம் பொங்கிவருகின்றது. 9/11-க்குப் பிறகு பல தீவிரவாத அபத்தங்கள் நடந்திருக்கின்றன;

1. அக்டோபர் 2002 – மாஸ்கோ – செச்சென் தீவிரவாதிகள் ரஷ்ய அரசு(த் தீவிரவாதிகள்) இருவருமாகச் சேர்ந்து 340 பேரைக் கொன்று குவித்தார்கள்.

2. செப்டம்பர் 2004 – 172 பள்ளிக் குழந்தைகள் உட்பட 331 பேர் ரஷ்யாவின் பெஸ்லானில் கொலைசெய்யப்பட்டார்கள்.

3. அக்டோபர் 2002 – இந்தோனேஷியாவின் பாலியில் 202 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டார்கள்.

4. மார்ச்சு 2004 – ஸ்பெயினின் மாட்ரிட் தொடர்வண்டிகளில் 191 பேர் கொலை செய்யப்பட்டார்கள்.

5. பெப்ருவரி 2004 – இராக்கில் குர்திஸ்தானில் 109 பேர் கொலைசெய்யப்பட்டார்கள்.

6. ஆகஸ்ட் 2004 – மாஸ்கோவிற்கருகில் இரட்டை விமான மோதலில் 90 பேர் சாவு.

7. டிசம்பர் 2002 – செச்னியாவில் தற்கொலைப்படையினரால் 72 பேர் கொலை.

8. மே 2002, ரஷ்யாவின் டாகெஸ்தானில் 42 பேர் கொலை

9. பெப்ருவரி 2004 – மாஸ்கோவில் தற்கொலைப்படையினரால் 41 பேர் கொலை.

10. ஆகஸ்ட் 2003 – மும்பையில் 40 பேர் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டார்கள்.

இதிலெல்லாம் முதல் பக்கம் கறுப்பு சாற்றப்படவில்லை. சொல்லப்போனால் சில செய்திகள் மூன்றாம் பக்கங்களில்தான் வந்தன. ஆனால் இப்பொழுது ‘அட்டைக்கரி’.

செத்தால் அமெரிக்கராகவோ பிரிட்டிஷ்காரராகவோ சாக வேண்டும்.