இளையராஜாவின் திருவாசகத்தின் மீதான விவாதம் அருளின் பதிவில் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. கடந்த நான்கு நாட்களாக எக்கச்சக்கமான வேலை இருந்ததால் விவாதங்களில் ஆரம்பம் முதலிருந்தே கலந்துகொள்ள முடியவில்லை. இப்பொழுது நிறையபேர் நிறைய விஷயங்களை எழுதியிருப்பதால் என்னுடைய எண்ணங்களைத் தொகுத்து எழுதுகிறேன். (எச்சரிக்கை :இது நீளமாகப் போய் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவாகலாம்). இது அருளின் பதிவில் வந்தவை மாத்திரமல்லாமல் பொதுவில் திருவாசகம் இசைத் தொகுப்பு பற்றிய விமர்சனங்கள், அனுபவப் பகிர்வுகள், இசையைக் கேட்காமலேயே மொழியப்பட்ட தீர்ப்புகள் போன்றவற்றின்மீது ஒட்டுமொத்தமாக என்னுடைய பார்வை.

1. கேட்கத்துவங்கி சில நாட்களாகிவிட்டன. குறைதது ஒரு நாளைக்கு ஒருதடவையாவது கேட்டிருப்பேன். சில சமயங்களில் ஒரே பாடலைத் திரும்பத் திரும்பவும் கூட. இதில் முதலாவதாக எனக்கு அதிசயமாகப்பட்ட விஷயம் – இதை எப்படிக் கேட்கவேண்டும் என்று பலரும் பரிந்துரை செய்வது. “காலை அலம்பிக்குங்கோ, பூணுல வடமா போட்டுக்கோங்கோ, அக்னிய ஈசன மூலைல வச்சுடுங்கோ, ஆத்துக்காரி தர்ப்பத்தால முதுகத் தொடனும். தீர்த்தத்தை எடது கைல எடுத்துக்குங்கோ. பவித்ரத்தக் கழட்டி வலது காதுல போட்டுக்கோங்கோ, ஆசமனம் பண்ணுங்கோ” -ரீதியாக பலரும் இதை நல்ல சவுண்ட் சிஸ்டத்துல கேளுங்கள். அமைதியாக உட்கார்ந்து கேளூங்கள், அதிகாலை நாலரையிலிருந்து ஐந்தரைக்குள்ளும் இரவு பத்தரைக்கு மேலும் கேட்கலாம் என்று மானாவாரியாகப் பரிந்துரைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த வைதீகத்தை நானறிந்தவகையில் முதலில் துவங்கிவைத்தவர் பெரியவர் சுஜாதா. இப்பொழுது இது ஜாம் ஜாமென்று நடந்துகொண்டிருக்கிறது. யாராவது இசையையோ குரலையோ குறை சொன்னால் – “யோவ் நீ மொதல்ல நல்ல சவுண்ட் சிஸ்டத்துல கேட்டியா? இல்லன்னா, அப்புறம் என்னய்யா பேச்சு” ரீதியில் ஒடுக்குமுறையைக் கையாளுகிறார்கள். தமாசாக இருக்கிறது.

நான் கணினிக்கு முன்னால் உட்கார்ந்து கேட்டேன். வீட்டுக் கொல்லையில் உட்கார்ந்து கேட்டேன். லாப்டாப்பில் ஹெட்போன் போட்டுக் கேட்டேன். என்னுடைய ஐபாடில் டொராண்டோவின் நடுநகர் இரைச்சலுக்கு நடுவில் நடக்கும்பொழுது கேட்டேன், டொராண்டோவின் பூதாகார டபுள்டெக்கர் இரயிலில் ( Go Transit) உட்கார்ந்து கேட்டேன். எல்லா சமயங்களிலும் என்னால் இந்த இசையை இரசிக்க முடிந்தது. ஒவ்வொரு முறையும் புதிதாக ஒன்று பிடிபட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு சமயம் பளிச் சென்று வரும் ஷண்முகப்ரியா, அட இது கும்மில வர்ற மெட்டுன்னா, பரவாயில்ல இந்த எடத்துல பவதாரிணி நல்லதான் பாடியிருக்கா, ஆஹா… டெனொர் எப்பிடி கும்முன்னு எழும்புது என்று ஒவ்வொரு தடவையும் ஒரு புதிய உணர்வு தோன்றுகிறது. இது எந்தப் புறச்சூழலிலும் சாத்திமாகிறது. இசையை இப்படித்தான் இரசிக்க வேண்டும் என்று சொல்பவர்களைக் கண்டால் வியப்பாகத்தான் இருக்கிற்து. இது நம்மூருக்குச் சற்றும் பொருந்தாதது. மேட்டிமைத்தனமும் இளையராஜாவின் இசையும்?… அடப்போய்யா என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

கும்மோணத்தில் தியாகராஜ உற்சவம் நடக்கும். பந்தடிமேடையில் பாலமுரளிகிருஷ்ணாவிலிருந்து, குன்னக்குடி, மதுரை சோமு, எல்லோரும் பாடுவார்கள். ஜனங்கள் உட்கார்ந்துகொண்டு கேட்கும், நின்று கொண்டு கேட்கும். ரோட்டில் சோழன் பஸ் (சோழன் என்றால் திருச்சி போகும் புத்தம்புது ராஜாராஜா சோழன் இல்லை, சாலியமங்கலம் வழியாக வடுவூர் போகும் ஓட்டை பராந்தகசோழன் கரகரவென்ற சத்தத்துடன் இரைந்துகொண்டு போகுமே அந்தப் பிற்காலச் சோழன்). ஆனால் இசையில் மூழ்கிக் கிடக்கும் ஜனங்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டல்ல. “எந்த பாக்யமூ மாபால” என்று பாடும்பொழுது சந்தையில் காய்கறி விற்க வருபவர் தலைச்சுமையை இறக்கிவைத்துவிட்டு மெய்மறந்து நின்று கேட்பார். பாட்டு முடிந்தபின் சும்மாடைச் சுருட்டிக்கொண்டு நடையைக் கட்டுவார். மறுநாள் காலையில் உஞ்சவிருத்தியில் திருச்சூர் ராமச்சந்திரன் பாட பின்னால் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் மிருதங்கம் அடித்துக்கொண்டே நடப்பார். இசையைக் கேட்க காலம்பிவிட்டுக் கண்மூடி உட்கார வேண்டும் என்பது அபத்தமாகப்படுகிறது.

நம்மூர் இசைதான் அப்படி. இளையராஜா போட்டது மேற்கத்திய இசை. இது சப்தம் புகாத சபையில் கணவான்களும் சீமாட்டிகளும் மேலங்கி நழுவி விழுந்தால் சூழல் கெட்டுவிடும் என்று தோளைக்குறுக்கி உட்கார்ந்து கேட்பது. இதில் சின்னச் சின்ன நெளிவு சுளிவுகள் உண்டு இதெல்லாம் அதியற்புத மராண்ட்ஸ் ஸ்பீக்கரில்தான் வெளிவரும் மற்றதிலெல்லாம் உள்ளேபோய் ஒளிந்துகொண்டுவிடும் என்று சொல்வது ஜல்லியடி. அதே மேற்கத்திய இசையை அதே கணவான்கள் டாட்ஜ் ராம் பிக்கப் ட்ரக்கில் உட்கார்ந்துகொண்டு ஹைவேயில் நூற்றுப்பத்து கிலோமிட்டர்/மணிக்கு வேகத்தில் சஞ்சாரிக்கும்பொழுது உள்ளூர் எஃப் எம்மில் கேட்டு இரசிப்பதையும், நவீன முடிதிருத்தகத்தில் தலையில் முடிதிருத்தாளினி சிகையெழுச்சிக் களிம்பைவைத்து அடித்துத் தேய்க்கும்பொழுது மெய்மறந்து கேட்பதையும் பார்த்திருக்கிறேன். இசைக்கு மேட்டிமை விலங்கு போடுவதைப் பார்த்தால் எரிச்சல்தான் வருகிறது. “Would those of you in the cheaper seats clap your hands? And the rest of you, if you’ll, just rattle your jewelry” என்று ஜான் லென்னன் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.

(மேலும் எழுத உத்தேசம்)