viruthu 2005

டொராண்டோ பல்கலைக்கழகத்தின் டிரினிடி காலேஜ் வளாகத்தில் நேற்று மாலை திரு பத்மநாப ஐயருக்கு தமிழ் இலக்கியத்திற்கான ஆயுட்கால சேவைக்காக இயல்விருது வழங்கப்பட்டது. ஆண்டு தோறும் டொராண்டோ தமிழ் இலக்கியத் தோட்டமும் டொராண்டோ பல்கலைக்கழகத் தெற்காசிய மையமும் இணைந்து வழங்கும் இந்த விருது சுந்தர ராமசாமி, கே.கனேஷ், வெங்கட் சாமிநாதன் ஆகியோர்களைத் தொடர்ந்து இந்த வருடம் இங்கிலாந்தில் வசிக்கும் பத்மநாப ஐயருக்கு வழங்கப்படுகிறது.

ஜூன் 12, 2005 ஞாயிறுக்கிழமையன்று பல்கலைக்கழகத்தின் பாரம்பரியம் மிக்க சீலி ஹால் அரங்கில் விழா நடந்தது. விழாவுக்கு வந்திருந்தோரை வரவேற்ற பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியர் செல்வா கனகநாயகம் இயல்விருது வழங்கப்படுவதன் நோக்கம் குறித்தும் இந்த வருட விருதைப் பெறும் ஐயரைக் குறித்தும் அறிமுகம் செய்துவைத்தார். தொடர்ந்து தமிழ் மாணவர்கள் அமைப்பு சார்பில் அஸ்வின் பாலமோகன் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பித்தலுக்கான முயற்சிகள் குறித்து பேசினார். அவருடைய உரையுடன் கூட பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பிக்கப்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்களின் ஆர்வத்தை விளக்கும் சிறு சலனப்படம் காட்டப்பட்டது. அரசியல் துறை (Political Science), அமைதி-போர் ஆராய்ச்சித் துறை (Conflict and Peace Studies) போன்றவற்றின் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிற்றுவிக்கப்படுவதன் நன்மைகளை விளக்கினார்கள். 2002 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை மாணவர்கள் அமைப்பு சார்பில் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அஸ்வின் விளக்கினார்.

டேவிட் க்ளான்ஃபீல்ட்
தொடர்ந்த டாம் சிவதாசன் ஐயரின் பங்களிப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்தார். தமிழுக்காக தன் உயிரையும் பணயம் வைக்கத் துணிந்தவர் திரு ஐயர் என்றார். இலங்கையில் இருக்கும் போர்ச்சூழலில் இலக்கியம் குறித்த ஐயரின் முன்னெடுப்புகளின் முக்கியத்துவத்தைச் சொன்ன சிவதாசன் குழுக்களைக் கடந்து இலக்கியம் ஒன்றையே நோக்காகக் கொண்ட திரு. ஐயரின் செயல்பாடுகள் குறித்தும் தீக்கிரையான யாழ் பல்கலைக்கழகத்தின் சீரமைப்புப் பணிகளில் ஐயர் காட்டிய தீவிரத்தையும் சொன்னார். விழாவின் பிரதம விருந்தினரான பல்கலைக் கழக பிரெஞ்சுப் பேராசிரியர் டேவிட் க்ளான்·பீல்ட் (David Clandfield) மொழிகள் பாதுகாப்படவேண்டியதன் அவசியத்தைச் சொன்னார். ஒருகாலத்தில் ஆங்கில் மொழி அப்படியொரு நிலையில் இருந்தது என்ற சுவாரசியமான தகவலைத் தந்தார். பேராசிரியர் க்ளான்·பீல்ட் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிற்றுவித்தல் 2006 ஆம் ஆண்டுமுதல் தொடங்க இருப்பதாக அதிகார்வபூர்வமாக அறிவித்தார். இதன் மூலம கனடாவில் தமிழ் பயிற்றுவிக்கும் முதல் பல்கலைக்கழகம் என்ற பெருமை டொராண்டோவிற்குக் கிடைக்கிறது.

Padmanaba Iyer
பத்மநாப ஐயர்பற்றி லண்டன் தீபம் தொலைக்காட்சி சார்பாக நித்யானந்தன் அவர்கள் தயாரித்திருந்த ஒரு ஆவணப்படமும் திரையிடப்பட்டது. தொடர்ந்து பத்மநாப ஐயருக்கு இயல் விருது பேராசிரியரால் வழங்கப்பட்டது. முன்னறிவிப்புகள் இல்லாமல் அடுத்தபடியாக அமெரிக்க எழுத்தாளர்கள் சங்கம் (இதன் பெயர் எனக்குச் சரியாகப் புரியவில்லை) பேராசிரியர் ஸ்ரீதரன் அவர்களால் பத்மநாப ஐயருக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. பரிசைப் பெற்றுக்கொண்ட ஐயர் தனது ஏற்புரையில் மொழிபெயர்ப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். ஐரோப்பாவிலிருக்கும் புலம்பெயர் தமிழர்களால் பல ஈழத்து இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டு ஜெர்மன், பிரெஞ்சு, நார்வீஜிய மொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதைச் சொன்னார். புலம்பெயர் சூழ்நிலையில் வருங்கால சந்ததியினரிடம் நம் பாரம்பரிய இலக்கியங்களையும் நவீன படைப்புகளையும் எடுத்துச் செல்ல மொழிபெயர்ப்பு இன்றியமையாததாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார். ஐயரின் முழு ஏற்புரையும் மதி கந்தசாமியின் வலைப்பதிவில் இடப்பட்டுள்ளது.

காலம் பத்திரிக்கையாசிரியர் செல்வம் அருளானந்தத்தின் நன்றியுரையுடன் விழா முடிவடைந்தது.