2005 ஆம் ஆண்டு இயற்பியல் ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது. இதையட்டி உலகெங்கும் இயற்பியல் குறித்த விழிப்புணர்வைப் பெருக்க உரைகள், செயல்விளக்கங்கள், மாணவர் நிகழ்வுகள் போன்றவை ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்றன. எனக்குத் தெரிந்தவகையில் தமிழில் இதற்கான ஏற்பாடுகள் எதுவும் இந்தியாவிலோ இலங்கையிலோ மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து இரண்டு நாட்களுக்கு முன்னர் என் வலைப்பதிவில் எழுதியிருந்தேன்.

இதில் என்னாலானதைச் செய்ய நான் iyarpiyal.org என்ற தளத்தை உருவாக்கியிருக்கிறேன். இத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். இதன் துவக்க வேலைகளை நான் செய்திருந்தாலும் இதை ஒரு பொதுத்தளமாகத்தான் உண்டாக்கியிருக்கிறேன். இதில் ஆர்வமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் பங்கெடுக்க முடியும். இதுவரை தளப்பதிவு, அமைப்பு வேலைகள்தான் செய்யப்பட்டிருக்கின்றன. உள்ளடக்கம் என்று எதுவும் பெரிதாக இல்லை.

வலைப்பதிவு

தளத்தின் மையமாக வலைப்பதிவு இருக்கும். இங்கே தினசரி இயற்பியல் குறித்த செய்திகள், விளக்கங்கள் உள்ளிடப்படும். இது ஒரு குழுப்பதிவு என்று சொல்லத்தேவையில்லை.

Blog:CMS, a NucleusCMS derivative runs this blog.

மன்றம்

ஊடாடல் மையமாக மன்றம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் முக்கிய அம்சமாக கேள்வி-பதில் பகுதி இடம் பெறும். இயற்பியல் குறித்த சந்தேகங்களை யார் வேண்டுமானாலும் கேட்கலாம். விளக்கம் சொல்லவும் யார் வேண்டுமானாலும் முன்வரலாம். இதைத் தவிர இந்தத் தள அமைப்பு, கல்விக்கருவிகள் போன்றவற்றைப் பற்றியும் உரையாடலாம்.

PunBB integrated with Blog:CMS

படத்தொகுப்புகள்

சுவாரசியமான படங்கள் இங்கே தொகுக்கப்படும். வரலாற்று ரீதியாக இயற்பியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞானிகள் குறித்த படங்கள் உள்ளிடப்படும். (தளத்தின் இடவசதி கருதி, சில படங்கள் மாத்திரமே உள்ளிடப்படும்.

தற்சமயம் ஆல்பர் ஐன்ஸ்டைனின் சில சுவாரசியமான படங்கள் இடப்பட்டுள்ளன.

Singapore Gallery integrated with Blog:CMS

விக்கி

இயற்பியல்.ஆர்க் தளத்தின் இன்னொரு முக்கிய பகுதி பலர்கூடி ஆவணங்களை உருவாக்க உதவும் விக்கி. சற்று பெரிய கட்டுரைகளை எழுதுபவர்கள் விக்கியைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள்.

இயற்பியல்::2005 கொண்டாட்டங்களை அறிமுகப்படுத்தவும், இந்தத் தளத்தின் நோக்கங்களை வரையறுக்கவும் முதல் பக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

DokuWiki integrated with Blog:CMS

செய்திகள்

அன்றாடம் உலக அளவில் என்னென்ன முன்னேற்றங்கள் நடக்கின்றன என்பதைத் தெரிவிக்க பல முன்னணி இயற்பியலாளர் கழகங்களிலிருந்து செய்தியோடைகள் திரட்டப்படுகின்றன.

Physics Web, Institute of Physics (UK), Physics Today (American Institute of Physics), Optics.org (Optical Society of America), Nanotechweb.org போன்றவற்றின் செய்தியோடைகள் தற்சமயம் திரட்டப்படுகின்றன.

தொடர்புக்கு

தள நிர்வாகியைத் தொடர்பு கொள்ள நேரடி மின்னஞ்சல் வசதி செய்யப்பட்டிருக்கிறது. எரிதங்களைத் தவிர்க்க இது உதவும் என்று நம்புகிறேம்.

இந்தத் தளத்தின் முக்கிய நோக்கம் அறிவுப் பரவலாக்கம். அந்த வகையில் இதை மாணவர்களிடம் எடுத்துச் செல்வது மிகவும் முக்கியம். இதைத் தமிழகம் மற்றும் இலங்கைப் பள்ளிகளில் அறிமுகப்படுத்த யோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

ஆர்வமுள்ள குழுமங்கள் மன்றங்கள், தனிநபர்களுக்கு இந்த அறிவிப்பை முற்செலுத்த வேண்டுகிறேன்.

தளத்தின் உள்ளடங்களை விரிவுபடுத்த அனைவரையும் வரவேற்கிறேன்.

அன்புடன்
வெங்கட்ரமணன்
டொராண்டோ