ரஜினி திரணகம தனது முப்பத்தைந்தாவது வயதில் 1989ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அப்பொழுது அவர் யாழ் பல்கலையின் உள்ளுடலியல் (anatomy) துறையின் பேராசிரியையாக இருந்தார். அவருக்கு இரண்டு பெண்குழந்தைகள். இவரைக் குறித்த No More Tears Sister ஆவணப் படம் National Film Board of Canada வால் தயாரிக்கப்பட்டு டொராண்டோவில் தற்பொழுது நடைபெறும் HotDocs என்ற ஆவணப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

சராசரி தமிழ்க் குடும்பத்தில் பிறந்த ரஜினி, மருத்துவம் படிக்கும்பொழுது தன்னுடைய சக மாணவரான தயபால திரணகம-வை மணந்தார். தயபால தீவிர இடதுசாரி சிந்தைனைகளின்பால் ஈர்க்கப்பட்ட சிங்களர். இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு இவர்களிடையே மனவேற்றுமை தொடங்கி மணமுறிவு ஏற்பட்டது. ரஜினியின் சகோதரி நிர்மலா விடுதலைப் புலிகளுடன் இணைந்து போராடியவர். இவரை இலங்கையரசு சிறையிலடைத்தது. 1983ல் காமன்வெல்த் மானியத்துடன் பிரிட்டனில் பட்டமேற்படிப்புக்காக வந்த ரஜினி தன்னுடைய சகோதரியின் நிலையை மேற்கத்திய ஊடகங்கள் மூலம் பிரச்சாரப்படுத்தினார். தொடர்ந்து அங்கிருக்கும்பொழுது விடுதலைப் புலிகளின் அரசியல் குழுவுடன் நெருக்கம் ஏற்பட்டது.

எல்லோரும் நாட்டைவிட்டு ஓடிக்கொண்டிருந்த காலத்தில் ரஜினி இலங்கை திரும்பி பல்கலைக்கழகத்தில் உள்ளுடலியல் துறையை மறுவுருவாக்க முனைந்தார். விடுதலைப் புலிகளுடன் நெருக்கம் ஏற்பட, அவர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்த அதிருப்தியே அவருக்கு அதிகரித்தது. யாழ் பல்கலையில் தன்னுடைய சக ஆசிரியர்களுடன் இணைந்து மக்களிடம் நேரடியாகப் பெற்ற வாக்குமூலங்களின் அடிப்படையில் The Broken Palmyra என்ற நூலை எழுதினார். இலங்கையின் பலதரப்பினரது உரிமை மீறல்களையும் குறித்த ஆவணப்படுத்தலான இந்தப் புத்தகம் வெளிவருவதற்கு முன்னதாக ஒரு நாள் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ரஜினி சுட்டுக் கொல்லப்பட்டார்.

* * *

இனியும் அழவேண்டாம் சகோதரி என்ற ஆவணப்படத்தை இயக்கியிருப்பவர் ஹெலீன் க்ளோடாவ்ஸ்கி (Helene (Klodawsky), இந்தப் படம் க்யூபெக்கின் ‘பெண் கொரில்லாக்கள்’ (Femmes et la guerre) என்ற வானொலித் தொடரின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கிறாது. இதே ஆவணப்பட விழாவில் “பெண்களும் போரும்” என்ற கருத்தில் இன்னொரு படமாக Soraida, A Woman of Palestine, Tahani Rached இயக்கத்தில் வெளியிடப்படுகிறது.

ரஜினி குறித்த இந்தப் படத்தை எடுக்க அவரது சகோதரி நிர்மலா ராஜசிங்கம் பெரிதும் உதவியிருக்கிறார். இந்தப் படத்தின் தயாரிப்பு குறித்த தகவல்களை மிகவும் ரகசியமாக வைத்திருந்ததாக இயக்குநர் க்ளோடாவிஸ்கி கூறியிருக்கிறார். இலங்கையில் இருக்கும் பலருக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்துச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால் முகத்தைக் காட்டிப் பேசுவதற்குப் பயமாக இருக்கிறது. “எங்களைச் சுற்றி முள்வேலி இருக்கிறது, இது கண்ணுக்குத் தெரியாமல் மூளையைக் கட்டிப்போடுகிறது” என்று படப்பிடிப்பில் உதவிய ஒருவர் இயக்குநரிடம் சொல்லியிருக்கிறார். “இந்த நிலையில் முற்றிலும் வெளியாளான மூன்றாவது மனிதர் ஒருவரால்தான் இது சாத்தியம், இது இலங்கை மக்களுக்குச் செய்யும் முக்கிய உதவி என்று கருதுகிறேன்” என்று இயக்குநர் சொல்லியிருக்கிறார்.

* * *

இரண்டு அமர்வுகளில் இன்றும் நாளையும் இப்படம் திரையிடப்படுகிறது. எனக்கு இதற்கான டிக்கெட் கிடைக்கவில்லை. இது கனேடிய திரைப்படக் கழகத்தினால் தயாரிக்கப்பட்டது என்பதால் விரைவிலேயே சிபிசி தொலைக்காட்சியில் காட்டப்படும் (அல்லது இதன் டிவிடி வெளியாகலாம்).

வேறு யாராவது பார்த்துவிட்டு எழுதினால் நல்லது.

* * *

தொடர்புள்ள தகவல்கள்:

No More Tears Sister – இணைய தளம்

இந்தத் திரைப்படம் குறித்து இன்றைக்கு The Globe and Mail நாளிதழில் வந்த கட்டுரை A Human Face on Tiger Tragedy

HotDocs ஆவணப் படவிழா

The Broken Palmyra – The Tamil Crisis in Sri Lanka: An Inside Account By Rajan Hoole, Daya Somasundaram, K.Sritharan and Rajani Thiranagama. Published by The Sri Lanka Studies Institute, Claremont, CA; April 1990 , pages 481. Library of Congress Catalog Card No. 90 – 61314