இந்தியர்களுக்குக் கனடாவில் நீண்ட பாரம்பரியம் உண்டு. நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பஞ்சாபியர்கள் கனடாவின் மேற்கு மாநிலங்களுக்குக் குடியேறி தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள். பொதுவில் வந்தாரின் அடையாளத்தை மதிக்கும் கனடாவில் தலைமுறைகள் சில ஆனாலும் அடையாளங்கள் தொலைவதில்லை. (மாறாக அண்டையிலுள்ள அமெரிக்காவில் வந்தோர் அடையாளங்களை விட்டுவிட்டு அமெரிக்கா என்னும் கொதிக்கும் குழம்பில் ஐக்கியமாகி உருகி ஒன்று சேரவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்). இங்கே இந்தியரும், சீனரும், லாத்தினரும் தங்கள் அடையாளங்களை முழுவதுமாகத் தக்கவைத்துக் கொள்கிறார்கள். ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் இந்தியப் பாரம்பரியத்தை இங்கே கேலிக்குள்ளாக்கி வருகின்றன. இது இரண்டு இந்திய வம்சாவளி அரசியல்வாதிகளைக் குறித்தது. ஒருவர் கனடாவின் நிதியமைச்சர் சுகாதார அமைச்சர் உஜ்ஜல் தோஸாஞ் (Ujjal Dosanjh) (ஆளும் லிபரல் கட்சி) மற்றவர் குர்மந்த் க்ரேவால் (Gurmant Grewal) (எதிர்தரப்பு கன்ஸர்வேட்டிவ் கட்சி). கடந்த இரண்டு வாரங்களாகக் கனேடிய ஊடகங்களில் முதலிடத்தைப் பெற்றுவருவது இந்தச் செய்திதான்.

கடந்த பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி சிறுபான்மை அரசாங்கம் அமைத்தது. அதற்கு வெளியிலிருந்து புது ஜனநாயகக் கட்சி ஆதரவளித்தது. (முழு ஆதரவில்லை, தனித்தனி பிரச்சனைகளில் ஆதரிப்பது குறித்து அவ்வப்பொழுத் பு.ஜ.க முடிவெடுக்கிறது). எதிர்க்கட்சியான கன்ஸர்வேட்டிவ் கட்சியும் க்யூபெக் மாநிலத்தின் பிரிவினைவாத ப்ளாக் க்யூபெக்வாவும் பொதுவில் இணைந்து (கொள்கை ஒற்றுமையெல்லாம் கிடையாது; இரண்டுக்கும் பொதுவான ஒரே கொள்கை லிபரலை எதிர்ப்பதுதான்) செயல்படுகின்றன. இடையில் முந்தைய அரசாங்கத்தில் (பிரதமர் ழான் க்ரெட்ச்யென், Jean Cretchien, லிபரல்) க்யூபெக் பிரிவினைவாதத்தைக் கட்டுப்படுத்த அரசாங்க சார்பில் பல விளம்பரங்களை மேற்கொள்ள லிபரல் தொடர்புள்ள விளம்பர நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தற்பொழுதைய பிரதமர் பால் மார்ட்டின் (இவர் க்ரெட்ச்யெனால் ஒடுக்கப்பட்டவர்) சுதந்திர விசாரனைக் கமிஷன் ஒன்றை அமைத்தார். இதில் லிபரல் குறித்து பல மோசமான தகவல்கள் வந்தன (கன்ஸர்வேட்டிவ்கள் ஒன்றும் இளைத்தவர்கள் அல்லர், இதற்கு முன்னால் அவர்கள் இதைவிடப் பத்துமடங்கு பெரிய ஊழல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். உலகமெங்கும் அரசியல்வாதிகள் ஒன்றுதானே).

இந்தக் குற்றச்சாட்டுகளை முன்னிருத்தி கன்ஸர்வேட்டிவ்களும்-ப்ளாக் க்யூபெக்வாவும் அரசைக் கவிழ்க்கப் பிரம்மப்பிரயத்தனம் செய்கின்றன. இடையில் மார்ட்டின் புது ஜனநாயகக் கட்சியின் நிதிக் கொள்கைகளுக்கு அடிபணிந்து இந்த வருட பட்ஜெட்டைத் திருத்தி அவர்களைத் தன் பக்கம் உறுதியாக்கிக் கொண்டார். ஆக இருப்பு நிலவரத்தில் ஆளும் கட்சி (லிபரல், பு.ஜ.க ஆதரவு) – எதிரணி (கன்ஸர்வேட்டிவ்-ப்ளாக் க்யூபெக்வா) சம எண்ணிக்கை பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்தனர். மூன்று சுயேச்சை உறுப்பினர்கள். இப்படியாகக் குதிரை வியாபாரச் சந்தை சூடுபிடித்தது. இந்த நிலையில் சற்றும் எதிர்பாராமல் சென்ற தேர்தலில் கன்ஸர்வேட்டிவின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பெலிண்டா ஸ்ட்ரோனாக் (Belinda Stronach) ஆளும் லிபரலுக்குத் தாவினார். அரசு கவிழ்ப்பு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தற்பொழுதைய கண்ஸர்வேட்டிவ் தலைமையின் மீது தனக்கு நம்பிக்கையில்லை என்றும், பிரிவினைவாத ப்ளாக் க்யூபெக்வாவுடன் சேருவது கனடாவின் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும் என்றும் தான் நம்புவதால் கட்சி மாறியதாகச் சொன்னார். லிபரல் தரப்பில் இதற்குப் பரிசாக சக்திமிக்க மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. (இவர் மேக்னா (Magna International) என்ற ஆட்டொமொபைல் பாகத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக இருந்தவர், இவருடைய சம்பளம் ஃபோர்ட், ஜி.எம். க்ரைஸ்லர் இவர்களின் தலைவர்களைவிட அதிகம். மேக்னா ஒரு மாபெரும் நிறுவனம். கனடாவின் தலைப்பத்து நிறுவனங்களுள் ஒன்று. மிகச் சிறியவயதில் இவர் தன் தந்தையிடமிருந்து இதன் தலைவர் பதவியைப் பெற்று திறமையாக நிர்வகித்தவர்).

வாக்கெடுப்பில் சுயேச்சைகளில் இருவர் லிபரலுக்கு ஓட்டுப்போட சமநிலையில் முடிந்ததை, சபாநாயகர் வாக்கு மூலம் (இவர் ஆளும் லிபரல் கட்சி) தீர்மானித்து பால் மார்ட்டினின் லிபரல் அரசு தப்பியது. இது முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு பிரிட்டிஷ் கொலம்பியா மாநில கன்ஸர்வேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர் க்ரேவால் (இவரது மனைவியும் கண்ஸர்வேட்டிவ் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்) தனக்கும் தன் மனைவிக்கும் அரசில் உயர்பதவிகள் தர லிபரல் ஆசை காட்டியதாகவும், தனக்கு இந்தியாவின் தூதர் பதவி (இப்பொழுதைய கனேடிய அரசுக் கணிப்பில் இது மிக முக்கியமான பதவி) தன் மனைவிக்கு அரசுக்குழுக்களில் உயரிடம் என்று ஆசை காட்டியதாகவும் தெரிவித்தார். இந்தப் பேரங்களை முன்னின்று நடத்தியது நிதியமைச்சர் சுகாதார அமைச்சர் உஜ்ஜல் தோஸாஞ் என்றும் பத்திரிக்கைகளில் பரபரப்பை உண்டாக்கினார். உஜ்ஜால் இதை முழுவதுமாக மறுத்தார். தான் முயலவில்லை என்றும் க்ரேவாலே தன்னைத் தொடர்புகொண்டதாகவும் சொன்னார். தனக்கு இப்பதவிகளைத் தந்தால் தானும் தன் மனைவியும் கட்சி மாறுவதாகவும் இது தொடர்பாக கறாரான பேரங்களை க்ரேவால் செய்தார் என்றும் எதிர்த்தார். அவருடைய ஆசைகளுக்கு இணங்க மறுத்ததால் இப்பொழுது தன்னைப் பழிவாங்குவதாகச் சொன்னார். க்ரேவால் முழு உரையாடலையும் தான் இரகசியமாகப் பதிவு செய்திருப்பதாகவும் அதை விரைவில் வெளியிடுவேன் என்றும் பயமுறுத்தினார்.

நேற்று முன்தினம் தன் தரப்பு நியாயத்தை வெளிப்படுத்த க்ரேவால் தன் இணைய தளம் வழியே உரையாடல் பதிவை வெளியிட்டார். பெரும்பாலும் பஞ்சாபி மொழியிலும் அவ்வப்பொழுது ஆங்கிலத்திலும் வரும் இந்த உரையாடலில் இருப்பது தோஸஞ் குரல்தான் என்று உறுதிசெய்ப்பட்டது (தோஸாஞ் தான் பேசியதை ஒருபோதும் மறுக்கவில்லை). ஆனால் விரைவில் இந்த உரையாடலை ஆராய்ந்த குற்றவியல் துறை ஒலியியல் நுட்பர்கள் இது மோசடி என்றும் பல இடங்களில் உரையாடல் வெட்டி ஒட்டப்பட்டிருக்கிறது என்றும் (இதன் பிண்ணனியில் வரும் இரைச்சல்கள் இடத்திற்கிடம் மாறுவதாகத் துல்லியமாக, சந்தேகத்திற்கிடமின்றி நேற்று தொலைக்காட்சியில் காட்டினார்கள்). இதேபோல பத்திரிக்கையாளர் குழுமத்தால் நியமனம் செய்யப்பட்ட நிபுணரும் இதை உறுதி செய்கிறார். இதில் இன்னும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. குற்றம்சாட்டியபின் ஒலிநாடாவை வெளியிட இவ்வளவு நாட்கள் ஏன் ஆயின? ஏன் முழு உரையாடலும் வெளியிடப்படாமல் ஒரு சில பகுதிகள் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கின்றன? இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன. கன்ஸர்வேட்டிவ் தலைவர் ஸ்டீபன் ஹார்ப்பர் தான் க்ரேவாலை நம்புவதாகவும் அவருக்கு தன் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்றும் சொல்ல, உஜ்ஜல் தோஸாஞ்க்குப் பின் லிபரல்கள் அணிதிரண்டு நிற்கின்றனர். ஊடகங்கள் வாண வேடிக்கை நடத்துகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களில் கன்ஸர்வேட்டிவ் குர்மந்த் க்ரேவாலின் மீதுதான் சந்தேகங்கள் திரும்பியிருக்கின்றன. அவரது தொகுதி மக்களே அவரை நம்பவில்லை என்று க்ரேவாலின் காரியதரிசி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இவர் மனைவி பாராளுமன்றத்திற்குத் தெரிந்தெடுக்கப்பட்ட பின் ஒன்றுமே செய்யவில்லை என்று அவரது தொகுதியில் அதிருப்தி இருக்கிறது. க்ரேவால் பொய் சொன்னார் என்று நிரூபிக்கப்பட்டால் கன்ஸர்வேட்டிவ் ஆட்சிக்கு வருவதைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.

விவகாரம் சூடுபிடித்திருக்கிறது. எது எப்படியோ, யார் வென்றாலும் தோற்றாலும் ஒரு இந்திய வம்சாவளி அரசியல்வாதி மோசடிக்காரர் என்று நிருபிக்கப்படும் என்பதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது.