இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே. இன்றைக்கு வெளியான ஒரு நல்ல தகவலின்படி இந்திய அரசாங்கம் மென்கலன் காப்புரிமையை நீக்கியிருக்கிறது. இந்தியத் தளயறு மென்கலன் கழகத்திலிருந்து வெளியான செய்தியின்படி 1970 ஆண்டு இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் மீது மென்கலன் காப்புரிமைப் பிரிவைக் கொண்டுவருவதாக இருந்த சட்டத் திருத்ததை நிறுத்திக் கொண்டிருக்கிறது.

இந்தத் திருத்த விலக்கலுக்கு இடதுசாரிக் கட்சிகளின் பங்கு தளையறு மென்கலன் நிறுவனத்தால் பாராட்டப்பட்டிருக்கிறது. அது உண்மையாக இருந்தால் இந்தியாவில் நீநீண்ண்ட நாட்களுக்குப் பிறகு இடதுசாரிகள் செய்யும் ஒரு உருப்படியான காரியம் இது. என் பாராட்டுக்கள்.

காப்புரிமை என்பது மிகச் சிறிய கண்டுபிடிப்பாளர்களின் (தனி நபர்கள் என்றும் வாசிக்கலாம்) கண்டுபிடிப்புகளுக்கு மாபெரும் நிறுவனங்களிலிருந்து பாதுகாப்பு தருவதற்காக உருவான ஒரு அமைப்பு. உதாரணமாக, நீங்கள் உங்கள் வீட்டுப் புறக்கடையில் ஒரு சிறிய கருவியைக் கண்டுபிடிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம் (உதாரணமாக, நீங்கள் வீட்டுக்கு அருகில் வரும்பொழுது ஒரு காமெரா மூலம் உங்கள் முகத்தைக் கண்டு, உங்களை அடையாளம் கண்டுபிடித்துக் கதவைத் தானாகத் திறக்கும் வசதி) தனிநபராக நீங்கள் கண்டுபிடித்த அந்தப் பயனுள்ள கருவியை நீங்கள் சந்தைப்படுத்த முற்படுகிறீர்கள். இது உங்கள் உரிமை, உங்கள் கண்டுபிடிப்பை விற்று காசாக்கிக் கொள்வது உங்கள் திறமையும் உரிமையும். ஆனால் உங்களிடமிருந்து ஒரு கருவியை வாங்கும் ஒரு மாபெரும் நிறுவனம், உடனே தன்னுடைய வசதிகளைப் பயன்படுத்தி இந்தக் கருவியைத் தானே தயாரித்து பெரிய அளவில் சந்தைப் படுத்தத் துவங்கினால் உங்கள் கண்டுபிடிப்பால் உங்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. இந்த நிலை ஊக்கத்தைக் குறைக்க தனியார்களும் சிறு நிறுவனங்களும் கண்டுபிடிப்புகளைச் செய்ய முயற்சிக்க மாட்டார்கள். இந்த இடத்தில்தான் அரசாங்கம் தலையிட்டு உங்களுக்குக் காப்புரிமை தருவதன் மூலம் உங்கள் கண்டுபிடிப்பை வேறுயாரும் கையாடிப் பயனடைவதைத் தடுக்கிறது. தேவைப்பட்டால் பெரிய நிறுவனங்கள் உங்களுக்குத் தகுந்த மானியம் தந்து உங்கள் காப்புரிமைக்குத் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தும் உரிமைகளைப் பெறலாம். இன்னும் ஒருபடி மேலே போய் முழு காப்புரிமைக்கும் பிரத்தியேக உரிமையை விலை தந்து பெறலாம். (உங்களுக்குரிய பணம் கிடைத்துவிடுகிறதல்லவா)?

மாறாக நடப்பு நிலவரம் என்ன? இன்றைக்கு மென்கலன் துறையில் காப்புரிமை பெறுபவர்கள் பெரும்பாலும் மாபெரும் நிறுவனங்கள்தான். (ஒரு கண்டுபிடிப்பை உங்களுடையது என்று நிறுவிக் காப்புரிமை பெற நிறைய செலவாகும். எனவே நிச்சயம் ஆதாயம் இல்லாவிட்டால் தனியார்களும் சிறு நிறுவனங்களும் காப்புரிமை பெற முயற்சிக்க மாட்டார்கள்). பெரிய நிறுவனங்கள் தங்களுக்குச் ஒரு சிறிய பொறி கிடைத்தாலும் அதைச் சோதித்துப் பார்க்க வேண்டிய பொறுமையில்லாமல் உடனடியாக ஒரு காப்புரிமைக்கு விண்ணப்பிக்கிறார்கள். ஐபிஎம், மைக்ரோஸாப்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் இப்படிகாப்புரிமையைக் குவித்து வைத்திருக்கின்றன. இந்த நிலையில் ஒரு சாதாரணர் மிகச் சிறிய நிரலியை (உதாரணமாக ஒரு டெக்ஸ் எடிட்டர்) செய்ய முற்பட்டால் பல இராட்சத நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான காப்புரிமைகளை மீறக்கூடிய அபாயம் இருக்கிறது. உதாரணத்திற்கு Amazon’s famous One-Click e-Commerce patent. இப்படி ஒற்றை சொடுக்குக்குக் கூட காப்புரிமை பெறும் நிலையில் சாதாரணர் பெரும் நிறுவனங்களின் இராட்சத சட்டத்தரணிகளைச் சந்திக்க வேண்டிய அபாயம் இருக்கிறது. இது கண்டுபிடிப்புகளுக்கான ஊக்கத்தைக் குறைக்கிறது. எதற்காகக் காப்புரிமை உருவாக்கப்பட்டதோ அதற்கு நேரெதிர் திசையில் இப்பொழுது மென்கலன் காப்புரிமைகள் நகர்ந்துகொண்டிருக்கிறன. விசையெலிச் சொடுக்குகள், விசைப்பலகை சொடுக்குகள், செய்வழிகள் என்று பல சிறிய விஷயங்களைக் காப்புரிமையில் கட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பிற துறைகளுக்கும் மென்கலனுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இங்கே பெரிய கண்டுபிடிப்புகளாகக் கருதப்படுபவை பெரும்பாலும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் விஷயத்தின் நீட்டிப்புகளே. இதன் மேலும், பெரும் நிறுவனங்கள் தங்களுக்கு இருக்கும் பொருளாதார, சட்டப் பின்னணியைக் கொண்டு வெறும் ஐடியாக்களுக்குக் காப்புரிமை பெற்றுக் குவிக்கிறார்கள் (மாறாகப் பிற கண்டுபிடிப்புத் துறைகளில் நீங்கள் உரிமைகொள்ளும் கருவியை இயங்கும் வழியை நீங்கள் நிரூபித்தாக வேண்டும். என்னிடம் அறைகுறையாக எழுதப்பட்ட காப்புரிமைப் படிவங்கள் நான்கு கிடக்கின்றன. இவற்றைக் காசாக்கும் நிச்சயம் தெரியாததால் முயற்சிகள் நின்றுபோயிருக்கின்றன. பல்கலைக்கழகத்தில் காப்புரிமைக் கட்டணம் தரமாட்டார்கள். மாறாக நானே தனியார் நிறுனத்தில் இருந்தால் இந்த நான்கும் உடனடியாகக் காப்புரிமை பெற்றிருக்கும்).

இதைத் தவிர தகவல் நுட்பத்தில் இன்றைக்குத் தனக்கிருக்கும் முதலிடத்தைக் கொண்டு அமெரிக்கா வேறு யாரும் எந்த உரிமைகளையும் பெறவிடாமல் கட்டிப்போடுகிறது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது (இது பேரளவில் உண்மையானதே). இந்தியா போன்ற வளரும் நாடுகள் அமெரிக்கா போன்ற நாடுடன் ஒப்பிடும்பொழுது தனி நிரலர் – ஐபிஎம் என்ற நிலைதான் இருக்கிறது. எனவே, குறைந்த கால ஆதாயத்திற்காக இந்தியா இதில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

இந்த சட்டத் திருத்த விலக்கம் இந்தியாவில் தளையறு மென்கலன்கள், திறமூல நிரலிகள், தனியார் சிறு கருவிகள் போன்றவற்றை வளர்க்கப் பெரிதும் உதவும். கூடவே, நமக்கேயான உள்ளூர்மயமாக்கப்பட்ட மென்கலன்களும் இதனால் வளரும்.

* * *

உண்மையில் இதெல்லாம் தெரிந்துதான் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டிருக்கிறார்களா அல்லது இடதுசாரிகளைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ஒருக்கால் இந்தச் சிறிய மீனை இடதுசாரிகளுக்குப் போட்டு நாளை மருந்துப் பொருட்களுக்கான காப்புரிமை என்ற பெரிய மீனை காங்கிரஸ் எடுக்கக் கூடும்.

எது எப்படியோ, அந்த நிலை வரும்பொழுது பார்த்துக் கொள்ளலாம். இன்றைக்கு ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மனநிறைவாக இருக்கிறது.

காண்க: The Anatomy of a trivial patent, Richard Stallman
http://linuxtoday.com/news_story.php3?ltsn=2000-05-26-004-04-OP-LF&tbovrmode=1