கடந்த வாரம் டொராண்டோவில் நடந்த மொழிபெயர்ப்புப் பட்டறையின் பொழுது தமிழ் எழுது/வாசிப்பு கருவிகளை அறிமுகம் செய்வதற்காக இலவசக் குறுந்தகடு ஒன்றை விநியோகித்தோம். நான் கடந்த இரண்டு வருடங்களாகவே இப்படி இலக்கிய/தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்வுகளுக்குச் செல்லும்பொழுது என்னாலானது பத்து பதினைந்து குறுவட்டுகளை இலவசமாகக் கொடுத்து வருகிறேன். இதற்கான என்னுடைய வழங்கியில் இவை தொகுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் எழுத்துருக்கள் (பெரும்பாலும் க்னூ பொது அனுமதியுடன் – இலவசமாகப் பயன்படுத்தலாம், விநியோகிக்கலாம், மாற்றங்கள் செய்யலாம், ஆனால் மாறிய பயன்பாடுகளும் இதே அனுமதியுரிமையுடன் தரப்படல் வேண்டும்), சுவடி, இ-கலப்பை உள்ளிட்ட சில தொகுப்பு நிரலிகள், தமிழ்ப்படுத்தப்பட்ட ஓப்பன் ஆபீஸ், ஃபயர்ஃபாக்ஸ் உலாவி, போன்றவை இதில் அடக்கம்.

இந்தக் குறுந்தகட்டிற்காக சி-டாக் சமீபத்தில் கொடுத்த குறுவட்டிலிருந்து சில நிரலிகளைச் சேர்த்திருக்கிறேன் (கூலும்பா மின்னஞ்சல்). பிறவற்றை அனுமதியுரிமை தெளிவின்மை கருதி சேர்க்க முடியவில்லை. இவற்றுடன் கூட காசியின் சில யுனிகோட் பற்றிய அறிமுகக் கட்டுரைகளையும் இணைத்தேன். மதி, சுரதாவின் சில நிரலிகளையும், உமரின் உலாவி வழியே யுனிகோட் எழுது கருவியையும் சேர்த்தார். இத்துடன் கூட இன்றுவரை மதுரைத்திட்டத்தில் வெளியாகியிருக்கும் அனைத்து மின்னூல்களையும் யுனிகோட் எழுத்துருவில் சேர்த்திருக்கிறேன்.

இவற்றை நேரடியாக என்னுடைய வழங்கியிலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.

ftp://abbe.optics.utoronto.ca/pub/venkat/tamil_cd/

இவற்றைத் தவிர வேறேதாவது பயனுள்ள கருவிகளைப் பற்றிய விபரம் தெரிந்தால் சொல்லவும். இந்தத் தளத்தில் அவ்வப்பொழுது வரும் புதிய நிரலிகளைத் (மறு விநியோகம் செய்யவல்ல) தொடர்ச்சியாகத் தொகுக்க உத்தேசம்.