ரவீந்திரன்? யார்?? என்று பலரும் இங்கே புருவம் உயர்த்தக்கூடும். மலையாளத்தில் நானூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் திரு ரவீந்திரன். மலையாளத் திரையுலகில் ரவீந்திரனைப்போலொரு கந்தர்வ நட்சத்திரம் அபூர்வமாகத்தான் உதிக்கிறது. கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கு மேலாக அங்கே கொடிகட்டிப் பறந்தவர் அவர். ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, பரதம், நக்ஷ்த்ர தீபங்கள், ஆரம் தம்புரான் போன்ற அருமையான படங்களுக்கு இசையமைத்தவர். இவரது பரதம் படப்பாடல்கள் தேசிய விருதைப் பெற்றவை. அப்துல்லாவின் ப்ரமதவனம் பாடல் கேரளத்தின் மூலைமுடுக்குகள் எல்லாவற்றையும் தட்டியெழுப்பியது. அந்தப் படத்திற்குப் பிறகு ரவீந்திரனால் மலையாளத்தில் பெயர் சொல்லும், தனித்தன்மை நிறைந்த பாடல்கள் கிடைக்கத் தொடங்கின.

பாடல் அறிமுகம்: மோஹன்லால்
பாடல்: ப்ரமதவனம்
படம்: ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா (மலையாளம்)
பாடியவர்: கே.ஜே. யேசுதாஸ்
இசை: ரவீந்திரன்

ரவீந்திரனின் தனிச்சிறப்பு அற்புதமான கர்நாடக ராகங்களின் அடிப்படையில் பாடல்களை அமைப்பது. அதிலும் பாடலை வெறும் ஸ்வரஸ் பிரஸ்தாரங்களாக இல்லாமல் அற்புதமான வாத்தியக் கலவைகளுடன் இணைத்து எல்லாவிதமான இரசிகர்களுக்கும் விருப்பம்தரும்படியாக அமைப்பது. இங்கே பிரமதவனம் பாடலிலும் அந்த அற்புதமான வாத்தியக் கலவைகளைக் கேட்கமுடியும். குறிப்பாக இழையோடும் வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் என்று முதல் இடையீட்டில் பாடல் நம்மைக் கட்டிபோடும். ரவீந்திரனை முன்னுக்குக் கொண்டுவந்ததில் இரண்டுபேருக்கு முக்கிய பங்கு உண்டு; ஒன்று கே.ஜே. யேசுதாஸ், ரவீந்திரனின் அற்புதமான பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர் யேசுதாஸ். மறுபக்கத்தில் யேசுதாஸின் குரலினிமையை முழுவதும் வெளிப்படுத்தும் பாடல்கள் ரவீந்திரனால் மீட்டப்பட்டவை. இன்னொருவர் நடிகர் மோஹன்லால். தன்னுடைய ப்ரணவம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து ரவீந்திரனை அவற்றுக்கு இசையமைக்கச் செய்தவர் லால். இந்த மூவருக்கும் இடையே அற்புத ஒத்திசைவு இருந்தது. ஹிஸ் ஹைனஸ் அப்துல்லாவை யாரல் மறக்கமுடியும். ஒரு சந்தர்ப்பத்தில் லாலின் கம்பீரக் குரலில் அப்துல்லா படத்திற்கான அறிமுகத்தை உங்களுக்குத் தருவதாக இருந்தேன்; அது இந்தத் துயரமிக்க தருணமாக அமையப்போகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

என்னுடைய இசைத் தெரிவுகள் வரிசையில் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ரவீந்திரனின் இசையமைப்பில் வெளியான கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதை (கண்னீரும் குருதியும் காத்திருப்பும் இசைத் தொகுப்பில் உள்ளது) புலரும் வேளையில் என்ற வாணி ஜெயராம் பாடலைப்பற்றி எழுதியிருந்தேன். இவ்வளவு விரைவில் இந்த அருமையான இசைக்கலைஞரை இழக்கப் போகிறோம் என்று யாருக்குத் தெரியும்.

பாடல் : ஏழிசை கீதமே
பாடியவர்: கே.ஜே. யேசுதாஸ்
இசை: ரவீந்திரன்
படம்: ரசிகன் ஒரு ரசிகை

ரசிகன் ஒரு ரசிகை ரவீந்திரனின் இசையமைப்பில் வெளியான ஒரே தமிழ்படம். பாடியழைத்தேன், காற்றினிலே வரும் கீதம், போன்ற அற்புதமான பாடல்களைக் கொண்டது. தொடர்ந்து இவர் தமிழில் இசையமைக்காதுபோனது நம் இழப்புதான்.

மலையாளத் திரையுலகம் ஒரு அற்புதமான இசைக்கலைஞனை இழந்திருக்கிறது.