Tamil in Tiger OS
விரைவில் வெளிவரவிருக்கும் டைகர் இயக்கு தளத்தில் தமிழ் வசதி சேர்க்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் அறிவித்திருக்கிறது. தமிழ் வசதி என்றால் முழுவதும் கணினியைத் தமிழிலேயே இயக்குவதற்கான இடைமுகம் இல்லை. இது தமிழ் பார்வையிடும், தமிழில் எழுதும் வசதி மாத்திரமே. இருந்தபொழுதும் இது ஒரு பெரிய முன்னேற்றம். இதற்கு முன்னால் ஆப்பிள் பயன்படுத்துபவர்கள் தமிழைப் படிக்க முடியாமால் திண்டாடினார்கள். இனி ஸஃபாரி உலாவியில் யுனிகோடு தமிழ் தெரியும். தமிழில் தட்டச்சு செய்யும் வசதி இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் எந்த முறையைப் பயன்படுத்தி உள்ளீடு செய்யலாம் என்று தெரியவில்லை (ரோமன் ஒலிவடிவமா, தமிழ் நெட் விசைப்பலகையா அல்லது பின்னடைந்த இன்ஸ்கிரிப்ட் உள்ளீட்டு முறையா என்று தெரியவில்லை). வெளியான பின்தான் தெரியவரும் என்று தோன்றுகிறது.

நானறிந்த வகையில் இந்திய மொழிகளிலேயே தமிழ்தான் ஆப்பிளில் முதல் முறையாக வருகிறது. சமீப காலத்தில் (திற மூல ஃபிரீ பிஎஸ்டி யுனிக்ஸின் அடிப்படையில் மாறிய பிறகு) ஆப்பிளின் இயக்குதளம் மிக நன்றாக இருக்கிறது. யுனிக்ஸின் தொழில்நுட்ப உறுதியும் ஆப்பிளுக்கே இயல்பான பளபள இடைமுகம், பயன் எளிமை என்று வெகுவாக முன்னேறியிருக்கிறது. இந்த நிலையில் இன்டெலினின் நுண்செயலிகளுக்கு ஆப்பிள் மாற்றியமைக்கப்பட்டால் மைக்ரோஸாப்ட்க்குப் பெரும் தலைவலியைத் தரக்கூடும்.

முற்று முழுமையாக தமிழிலேயே கணினியை இயக்க வேண்டுமென்றால் (ஆங்கிலம் தெரியாமல்) இப்போதைக்கு லினக்ஸில் மாத்திரம்தான் சாத்தியம்.