கடந்த வார இறுதியில் இங்கு நடந்த மொழிபெயர்ப்புப் பட்டறையில் நான் Translating Science and Science Fiction என்ற தலைப்பில் பேசினேன். அந்த உரையின் காட்டிகளை (Open Office Presenter Slide) PDF கோப்புவடிவில் இங்கே தந்திருக்கிறேன்.

இந்தப் பட்டறையில் நான் பேச வேண்டும் என்று அமைப்பாளர்கள் சொன்னபோது முதலில் மறுத்தேன். நான் இதுவரையில் பெரிதாக மொழிபெயர்ப்பு என்று எதையும் செய்ததில்லை. அதைத் தவிர பிற பேச்சாளர்கள்/பயிற்றுநர்களை ஒப்பிட (மற்றவர்கள் மொழியியல் துறையைச் சேர்ந்தவர்கள்) எனக்கு அங்கே இருக்கும் தகுதி கிடையாது என்று சொல்லிப் பார்த்தேன். இதைத்தவிர எதைப்பற்றி பேசுவது என்றும் எனக்குத் தெரியவில்லை. வேறுவழியில்லாமல் கடைசியில் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். என்னாலானது, மற்றவர்கள் சொல்லப்போவதையே திரும்பத் திரும்பச் சொல்லாமல் புதிதாக எதாவது செய்யலாம் என்று தோன்றியது. இந்தப் பட்டறையில் எல்லோரும் தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பதைப் பற்றியே பேசப்போகிறார்கள் என்று தெரியும். ஆனால் மொழிபெயர்ப்பு என்பது எப்பொழுது இருவழிப்பாதை என்பதால் இந்தத் தலைப்பையே தக்கவைத்துக் கொண்டேன்.

உதாரணத்திற்கு ஸ்டானிஸ்லா லெம்-மின் சிறுகதை ஒன்றை எடுத்துக் கொண்டேன். இது பல வருடங்களுக்கு முன் நான் படித்தது. மொழிபெயர்த்தால் ப்ரையன் ஆல்டிஸ், ஸ்டானிஸ்லா லெம், ஊர்ஸுலா லெ க்வின், ரே ப்ராட்பரி, இவர்களில் ஒருவருடைய கதையை, என்று மனதில் கொண்டு தேடியபொழுது ஸ்டானிஸ்லா லெம்மின் இணையதளத்தில் Tale of the computer that fought a dragon என்ற கதை கிடைத்தது. மூலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க விரும்புபவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று இதை எடுத்துக் கொண்டேன். இந்தக்கதை லெம்மின் Mortal Engines என்ற சிறுகதைத் தொகுப்பில் இருக்கிறது. பல அறிவியல் புதினச் சிறுகதைத் தொகுப்புகளிலும் இது இடம்பெற்றிருக்கிறது.

மிகச் சிறிய கதை இது. நேரொழுகு நடையைக் கொண்டது. நாவல்களைப் போல அல்லாமல் சிறுகதைகளில் லெம் மிகவும் ஜாலியாக, மெல்லிய நகைச்சுவையுடன் எழுதியிருப்பார். இதுதான் இந்தக் கதையை மொழிபெயர்ப்பதில் இருக்கும் பெரிய சவால். சுருக்கமாக,

The king asks the computer that is capable of doing anything in moon to do an electrosault. Faulty telegraphic transmission results in an order to become an electrosaur. It does and morphs itself to an ominus dragon. The king engages his best computer to solve this. It dictates a series of mathematical operations to the dragon and in the process eliminates it, only to turn its own attention to overthrow the king. This time the command to become an electrosaur gets muddled as electrosauce – saving the king.

இந்தக் கதையின் மையமே இதில் வரும் வார்த்தை விளையாட்டுதான். இதை மூலத்துக்கு அருகில், சுவாரசியம் கெடாமல் எப்படி மொழிபெயர்ப்பது என்பதுதான் என் உரையின் சாரம்சம். இதைத் தவிர இந்தக் கதையின் கடைசி பாரா சொதப்பல். அது இல்லாமலேயெ இருந்திருக்கலாம். ஆனால் ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு அந்த முடிவெடுக்கும் உரிமை கிடையாது. இதுபோன்ற மொழிபெயர்ப்பின் சில அடிப்படை விஷயங்களைப் புரியவைக்க முயற்சித்தேன்.

இவற்றைத் தவிர தமிழில் பேச்சுவழக்கு எழுத்துவழக்கு இரண்டையும் மொழிபெயர்ர்பில் கவனமாகக் கையாள வேண்டியதன் அவசியத்தைச் சொல்லவும் இந்தக் கதை பயன்பட்டது. பெரிதும் கவிதைகளை மொழிபெயர்ப்பதைப் பற்றியே எல்லோரும் பேசிக்கொண்டிருந்ததாலோ என்னமோ தெரியவில்லை, என்னைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை

நன்றாகச் செய்ததாக சக உரையாளர்கள் சொன்னர்கள். ஆனால் பட்டறை மாணவர்களின் மதிப்பீட்டைக் கேட்க முடியவில்லை. நம் வலைப்பதிவு நண்பர்களில் பாலாஜி-பாரி (பட்டையில் பங்கெடுத்துக் கொண்டார்) மதி (வெறும் பார்வையாளராக) இருந்தனர். இவர்களிடமாவது கேட்க வேண்டும்.