us air missile

அமெரிக்கா விரைவில் தன்னுடைய பயணிகள் விமானங்களுக்கு தற்காப்பு ஏவுகணைகளைப் பொருத்தப் போகிறது. இதற்கான மொத்த செலவு பத்து பில்லியன் டாலர்கள். (இதன்மூலம் அமெரிக்க இராணுவ வியாபாரிகள் சம்பாதிக்கப்போவது பத்து பில்லியன் என்று படிக்கவும்). வெறிபிடித்து அலையும் தற்போதைய அமெரிக்க அரசாங்கத்தின் இன்னொரு அபத்த நடவடிக்கை இது.

அமெரிக்கர்களின் கணிப்புப்படி உலகெங்கிலும் மூன்றரை இலட்சம் தோளிலிருந்து ஏவக்கூடிய விமானத்தாக்கு ஏவுகணைகள் இருக்கின்றனவாம். இவற்றில் சில ஆயிரம் கணக்கில் வராமல் காணாமல் போயிருக்கின்றனவாம். இந்த ஆயிரத்தில் சிலவற்றை யாராவது திருடிக்கொண்டுவந்து அமெரிக்க விமானங்களைச் சுட்டுவிடுவார்களாம். எனவே இதிலிருந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்கு அமெரிக்க பயணிகள் விமானங்களில் ஏவுகணைகள் பொருத்தப்படுமாம். பயவெறியின் (paranoia) உச்சம் இது.

இப்படி இதற்கு முன் அமெரிக்க பயணிகள் விமானத்தின்மீது ஏவுகணை எறியப்பட்டதற்கான அல்லது முயற்சிக்கப்பட்ட வரலாறு ஒன்றும் கிடையாது. நாளதுவரை அமெரிக்க விமானங்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டது இராணுவ நடவடிக்கைகளின்போதுதான். ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற இடங்களில் இப்படி நடக்கிறது. ஆனால் அவையெல்லாம் வரையறுக்கப்பட்ட போர்ப் பிரதேசங்கள். பயணிகள் விமானங்கள் ஒருபோதும் போர்ப்பிரதேசங்களில் பறப்பதில்லை.

முதலில் காணாமல் போன விமானந்தாக்கு ஏவுகணைகள் யாராவது அமெரிக்க எதிரியின் கையில் கிடைத்திருக்க வேண்டும் (இதற்கான சாத்தியங்கள் குறைவு, இவை தமிழீழம், கஷ்மீர் உட்பட பல்வேறு ஆயுதப் போராட்டங்களில் உள்நாட்டுப் போர்களைத்தான் பெரிதும் சென்றடைகின்றன). இரண்டாவதாக, அமெரிக்க விமானங்கள் பெரும்பாலும் அவர்களது நிலப்பரப்புக்கு மேலாகத்தான் பறக்கின்றன. இவற்றைத் தரையிலிருந்து காப்பாற்ற முடியாதவர்களால் வானத்திலிருந்து காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இல்லை. அதற்கும் மேலாக எல்லோராலும் இந்த ஏவுகணைகளை இயக்கமுடியாது. முறையான பயிற்சி தேவை. அப்படியான பயிற்சி தருபவர்கள் அமெரிக்க நாட்டின் உள்ளேயே பள்ளிக்கூடம் நடத்துவார்களேயானால் ஆகாயத்தில் இருக்கும் எந்தக் கடவுளாலும் அமெரிக்காவைக் காப்பாற்ற முடியாது.

மிக முக்கியமாக, பயணிகள் விமானங்களையெல்லாம் ஆயுதம் தாங்கிகளாக மாற்றுவது கொடுமை. இதுபோன்ற ஒரு கொடிய செயலை அமெரிக்காவைத் தவிர வேறெந்த நாடும் இப்பொழுதெல்லாம் கற்பனை செய்துகூடப் பார்ப்பதில்லை. இராணுவங்களில் இருக்கும் ஆயுதங்கள் போதாது என்று பயணிகள் போக்குவரத்திலும் ஆயுதங்களை நுழைக்கிறார்கள். இன்னும் கொடுமை, பயணி விமான ஓட்டிகளுக்கு ஏவுகணை ஏவுவதில் பயிற்சிகள் பெரும்பாலும் இருக்காது. இப்படிப் பயிற்சியில்லாதவர்களின் காலில் இதற்கான விசையைப் பொருத்திவிட்டு நாளை வேறெங்காவது வெடித்து மனிதர்கள் சாவதற்கான சாத்தியம், ஏவுகணை தாக்கி அமெரிக்க விமானம் வெடிக்கும் சாத்தியத்தைவிட ஆயிரம் மடங்கு அதிகமிருக்கலாம். இதில் பல விமானிகள் டாம் குரூஸின் டாப் கன் படம் பார்த்திருப்பார்கள். தங்களையும் அப்படியான ஒரு ஹிரோவாகக் கற்பனை செய்துகொண்டு இவர்கள் வேண்டுமென்றே வெடிப்பதும் சாத்தியம்தான். (இப்படியாக வெறிகொண்டு அமெரிக்க ஆயுதம் தாங்கிகள் நடந்துகொள்வதற்கு நிறையவே உதாரணங்கள் இருக்கின்றன).

பேரழிவுக்குத் தயாராகும் ஒரு வல்லரசின் எல்லாவிதமான நடவடிக்கைகளும் அமெரிக்காவிடம் இப்பொழுது தென்படுகின்றன. அமெரிக்க ஆயுத வியாபாரிகளிடமிருந்து அமெரிக்க மக்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.