இன்றைய வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையின்படி அமெரிக்க அதிபருக்கு ‘சந்தேகத்தின் பேரில், அமெரிக்காவின் மீது நடக்கவிருக்கும் பேரழிவைத் தடுக்க அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தும் உரிமை’ வழங்கப்படவிருக்கிறதாம்.

எரிச்சலூட்டுகிறது. யோசித்துப் பாருங்கள் இதேபோன்ற உரிமை நான்கு வருடங்களுக்கு முன்பு இருந்திருந்தால் சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்று சொல்லி அந்தப் பாலைவனத்தின் ஏழைகளின் தலையில் ஒரு அணுகுண்டைப் போட்டிருப்பார் புஷ். (மாட்டார் என்று சொல்லும் அமெரிக்க வழிபாட்டாளர்களுக்கு – அப்படியென்றால் ஏன் இப்படி ஒரு உரிமை அவருக்குத் தேவை என்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை, கொஞ்சம் தெருட்டுங்கள். நன்றியுடையவனான இருப்பேன்).

ரொம்ப வசதி பாருங்கள். மூன்று வருடங்களாகப் பாலைவனத்தில் சல்லடைபோட்டுத் தேடியும் அவர்கள் சொன்ன ‘பேரழிவு ஆயுதம்’ இன்னும் கண்ணில் படவில்லை. இப்பொழுது நிறையபேர் ஏன் போருக்குப் போனீர்கள் என்று கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள் (அதுவும் உள்ளூரில் ஏழைகள் வெள்ளத்தில் சாகச் சாக இந்தக் கேள்வி உரத்துக் கேட்கப்படுகிறது). இந்தக் கேள்விக்கெல்லாம் இடமில்லாமல் ‘இங்கேதான் இருந்தது, நாங்கள் நேற்று இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு விமானத்தில் ஏறி ஒரு அணுகுண்டை அந்த இடத்தில் போட்டோம்’ என்று மார்தட்டிக்கொள்ளலாம்.

தெரியும் – அமெரிக்காவின் (இன்றைய அமெரிக்கத் தலைமையின் என்பதுதான் சரி) ஒவ்வொரு நடவடிக்கையையும் நான் விமர்சித்தால் பொங்கி எழச் சிலர் தயாராக இருப்பார்கள். அமெரிக்காவின் உரிமைகளைக் காப்பாற்றுமுன் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்,’இதேபோன்ற உரிமையை ஏன் வடகொரியாவுக்கு, பாக்கிஸ்தானுக்கு, சீனாவுக்கு, இஸ்ரேலுக்கு, இந்தியாவுக்கு, பிரான்ஸ்க்கு’ அமெரிக்கா மறுக்க வேண்டும்?.