bob hunter
நான் டொராண்டோவில் குடியேறிய நாட்களில் அதிகாலை செய்திகளிடையே சிட்டிடிவி என்ற தொலைக்காட்சியில் ஒருவர் குடுமியுடனும், படுக்கையறை அங்கியுடனும் வந்து அன்றைய செய்தித்தாட்களிலிருந்து தான் வெட்டிய செய்திகளைப் பற்றிய விமர்சனங்களைச் சொல்லுவார். Papercuts என்று பெயரிடப்பட்ட அந்த நிகழ்ச்சியில் வருபவரின் பெயர் பாப் (ராபர்ட்) ஹன்டர். சில சமயங்களில் அவருடைய விமர்சனங்கள் எரிச்சலூட்டும், ஆனால் பொதுவில் அவருடைய ஒற்றைவரி எண்ணங்கள் பொருத்தமாகவும், புத்திசாலித்தனமாகவும் இருக்கும். படுக்கையிலிருந்து உடைகூட மாற்றாமல் வருபவர் என்பதைத் தவிர பெரிதும் அவரைப்பற்றி விசேடமாக நான் அவதானித்ததில்லை. கொஞ்சம் நாட்கள் கழித்து எனக்குத் தெரியவந்த விஷயம் இதே ஆள்தான் இன்றைக்கு மிகப் பிரபலமாக இருக்கும் க்ரீன்பீஸ் என்ற சூழழியல் தன்னார்வ அமைப்பைத் துவக்கியவர் என்று.

க்ரீன்பீஸ் குறித்து எனக்கு எப்பொழுதுமே இனிப்பும் கசப்புமான எண்ணங்கள் சம அளவில் இருக்கின்றன. ஒரு பக்கம் சூழல் குறித்த அக்கறை கொண்டவர்கள், அரசாங்கங்களுக்காகவும், அரசியல்வாதிகளுக்காகவும் காத்து நிற்காமல் காரியங்களைக் கையில் எடுத்துக்கொள்ளும் செயல்வீரர்கள் என்ற நல்ல மதிப்பீடுகள் இருந்தாலும், மறுபுறத்தில் சூழல் என்ற பெயரில் ஏழைநாடுகளின் உண்மைநிலையை அறிய முயற்சிக்காமல் மேலிருந்து தீர்வுகள் வழங்கும் மகான்கள் என்ற எரிச்சலும் அதிகம்.

1971 ஆம் ஆண்டு பனிப்போரின் உச்சத்தில் அமெரிக்கா தன்னுடைய பனிப்பிரதேச மாநிலமான அலாஸ்காவில் ஆம்சித்கா என்ற இடத்தில் அணுகுண்டுச் சோதனைகளுக்கான ஆயத்தங்களை மேற்கொண்டது. அந்த நேரத்தில் கனடாவில் பத்திரிக்கையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஹன்டர் இன்னும் சிலரின் துணையுடன் ஒரு பழைய மீன் பிடிக்கும் படகில் உலகின் வல்லரசான அமெரிக்காவின் அணுகுண்டுச் சோதனையைத் தடுத்து நிறுத்த குளிர்கடலில் பயணத்தை மேற்கொண்டார்கள். அவர்களது கணக்குத் தவறிப்போனது, ஹன்டரும் நண்பர்களும் வந்து சேரும் முன்னரே அமெரிக்கா அணுகுண்டை வெற்றிகரமாகச் சோதித்து முடித்துவிட்டது. ஆனால், உண்மையில் வெற்றி ஹண்டருக்குத்தான். உலக ஊடகங்கள் அமெரிக்காவின் அணுகுண்டைப் பற்றி பேசியதைவிட ‘Green’ ‘Peace’ என்ற தோரணங்கள் கட்டப்பட்டு கடலில் வந்த சிறிய படகைப் பற்றித்தான் அதிகம் பேசின. அந்த படகு உலகுக்குச் சொன்ன செய்தி, அமெரிக்காவின் சோதனையானல் அலாஸ்காவின் சூழல் கெடுகிறது. அலாஸ்காவின் உயிர்ப்பன்முகம் உலகிற்கு மிகவும் முக்கியமானது. அணுச் சோதனைகளின் கதிரியக்கங்கள் மூலம் அங்கே அழிவு தாண்டவமாடுகிறது. வேறு வழியில்லாமல் அமெரிக்காவும் இந்தச் செய்திகளுக்கு முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. ஒரே வருடத்தில் ஆம்சித்கா பாதுகாக்கப்பட்ட சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

அப்பொழுது தோன்றியதுதான் ‘க்ரீன்பீஸ்’ என்ற சூழியல் தன்னார்வ இயக்கம். இதன் முதன் உறுப்பினராகவும், முதல் தலைவராகவும் இருந்தவர் பாப் ஹன்டர். தொடர்ந்து தன்னுடைய பத்திரிக்கையாளர் வேலைகளிலிருந்து விலகி, எந்த ஊதியமும் இல்லாமல் க்ரீன்பீஸ் இயக்கத்திற்கு ஹன்டர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இதைப் போலவே பசிபிக்கில் பிரெஞ்சுக்காரர்கள் நடத்திய அணுச் சோதனைகளுக்கும் க்ரீன்பீஸ் எதிர்ப்புத் தெரிவித்தது. அந்த மறியலில் தன்னார்வலர் ஒருவர் பிரெஞ்சுப் படையினரால் தாக்கப்படுவதைப் படமாக்கி உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார்கள். மனக் குண்டுகள் (mind bomb) என்று பெயரிடப்பட்ட இந்த உத்தி க்ரீன்பீஸ்க்குப் பெரிதும் உதவியது. பல நேரங்களில் ராட்சத நீர்முழ்கிக் கப்பல்களுக்கு முன்னர் ஒரு சிறு படகு தள்ளாடுவதைப் போன்ற பிம்பங்கள் ஊடகத் துறையிலிருந்து வந்த ஹன்டரால் திறமையான பிரச்சார உத்திகளாகப் பயன்படுத்தப்பட்டன. பாப் ஹன்டர் சூழியல் தொடர்பாக தற்பொழுது ஆங்கிலத்தில் அதிகம் புழங்கிவரும் பல வார்த்தைகளை உருவாக்கியவர். Eco-Warrior, Mind-bomb, உட்பட பல சொற்கள் பாப் ஹன்டரின் கொடை.

சில காலங்களுக்குப் பிறகு க்ரீன்பீஸின் நோக்கம் ஆயுதக் குறைப்பா, அல்லது சூழியல் விழிப்புணர்வா என்ற கருத்து மோதல்கள் தலையெடுக்கத் தொடங்கின. 1970 களின் பிற்பகுதியில் ஹன்டரின் தலைமையில் கனடாவின் ந்யூபன்ட்லாண்ட் மாநிலத்தில் சீல்குட்டிகள் ஃபர் எனப்படும் அவற்றின் மிருதுவான தோல்களுக்காக வேட்டையாடுதலை எதிர்த்த பல போரட்டாங்களை மேற்க்கொண்டன. பாரிஸ், ஆம்ஸ்டெர்டாம், லண்டன் உட்பட ஐரோப்பாவின் பல நாகரீகச் சந்தைகளில் அப்பொழிது ஃபர்-க்குப் பெரிய மதிப்பு இருந்தது. இங்கெல்லாம் நடந்த ஆடை-அழகுப் போட்டிகளில் க்ரீன்பீஸின் போராளிகள் பலத்தக் கூச்சல்கள் எழுப்ப விரைவிலேயே கனடாவில் சீல்குட்டிகளின் வேட்டைக்குத் தடை விதிக்கப்பட்டது.

ஆனால், அந்த வேட்டையாடலையும், ஃபர் தயாரிப்பையும் மட்டுமே அறிந்திருந்திருந்த, குளிர் பிரதேங்களில் அதுமாத்திரமே சாத்தியமான கனடாவின் இன்னுயிட் பூர்வகுடிகள் வருமானமில்லமால் நசிந்துபோகத் தொடங்கினார்கள். பாரீஸில் ஃபர் அணிந்து மிடுக்காக நடப்பவர்களை மாத்திரமே கணக்கில் கொண்டு சீல் வேட்டையை எதிர்த்த க்ரீன்பீஸின் கணக்கில் அப்பாவி பூர்வகுடிகள் வரவேயில்லை. இது க்ரீன்பீஸின் கோரமுகமாக வடிவெடுத்தது. தொடர்ந்து உலகில் பல இடங்களில், முக்கியமாக ஏழைநாடுகளில் இவர்களுடைய நடவடிக்கையால் பூர்வகுடிகளும் படிப்பறிவில்லாத ஏழைகளும் தங்கள் பரம்பரை உரிமைகள், வாழ்முறைகள், பொருளாதராம் போன்றவை நசுக்கப்பட்டு அல்லறுருகிறார்கள்.

க்ரீன்பீஸில் தன்னுடைய புகழின் உச்சத்திலிருந்த பொழுது ஹன்டர் அதன் தலைமைப் பொறுப்பை விட்டு விலகினார். ஆனாலும் தொடர்ந்து அதன் கடைநிலை ஊழியராகவும், பிரச்சாரகராகவும் செயல்பட்டு வந்தார்.

* * *

பத்திரிக்கைத் துறையிலும் எழுத்துலகிலும் முத்திரை பதித்தவர் ஹன்டர். வின்னிபெக் ட்ரிப்யூன், வான்கூவர் சன், போன்ற பத்திரிக்கைகளில் வேலைசெய்தவர். 1970களில் எதிர்ப்புக் கலாச்சாரம் உருவெடுத்தபொழுது கனடாவில் அதன் திருவுருவாக இருந்தவர் ஹன்டர். வான்கூவர் சன் பத்திரிக்கை அலுவகலத்திற்கு (பொதுவில் கனடாவில்) ஜீன்ஸ் அணிந்து வேலைக்கு வந்த முதல் நபர் ஹன்டர் என்று சொல்வார்கள். பின்னாட்களில் டொராண்டோவின் சிட்டிடிவி மற்றும் அதன் இணை நிறுவனமாக சிபி24 போன்றவற்றில் செய்திகளுக்கு நடுவே விமர்சனம் செய்யும் வல்லுநராக வேலைபார்த்துவந்தார். 2001 ஆம் ஆண்டில் நடந்த கனடா பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளராக டொராண்டோவின் ஒரு தொகுதியில் போட்டியிட்டார். வெற்றி நிச்சயம் என்று எல்லோரும் சொல்லி வந்த நேரத்தில், இவருடைய பழைய நாவலான On the Sky: Zen and the Art of International Freeloading என்ற புத்தகம் குறித்த சர்ச்சைகள் தலையெடுத்தன. அந்தப் புத்தகத்தின் கதை சொல்லி பாத்திரம் கட்டுப்பாடற்ற பல்லிணைக் காமம், தாய்லாந்தில் சிறுமிகளுடனான காமம் போன்றவற்றின் விவரணைகள் ஹன்டரின் சுய அனுபவங்கள் என்று கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாயின. இது நாவலின் முழுமையான கற்பனை என்று ஹன்டர் வாதிட்டார். இருந்தபொழுதும் மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை. ஹன்டர் புதுஜனநாயகக் கட்சி வேட்பாளரிடம் பலத்த தோல்வியடைந்தார்.

தொடர்ந்து அவருக்கு சிறுநீர்ப்பையில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிட்டிடிவியின் பேப்பர்கட்ஸ் நிகழ்சியைத் தவிர அதிகம் பொதுவாழ்வில் பங்குபெறுவது குறைந்து போயிற்று. மே 2, 2005 ஹன்டர் தன்னுடைய அறுபத்துமூன்றாவது வயதில் காலமானார்.

* * *

இன்றைக்கு க்ரீன்பீஸின் செயல்பாடுகளும் வழிமுறைகளும் சிக்கலான்வையாகவும் சில சமயங்களில் கண்டிக்கத்தக்கனவாயும் மாறியிருக்கலாம். ஆனால் சூழல் பற்றிய விழிப்புணர்வு சற்றும் இல்லாத எழுபதுகளில் அதன் துவக்கத்திற்கு நம் தலைமுறையும், வருங்காலமும் ஹன்டருக்கு நன்றி சொல்லும். காலை அலுவலகம் செல்லும் அவரசத்தில் படுக்கையைறை உடையுடன், கலைந்த தலையுடன் பிறழும் குரலில் வரும் விமர்சனங்கள், இராட்சத அணுசக்தி நீர்மூழ்கியை எதிர்த்து நிற்கும் ஒற்றைப்படகு போன்றவைதான் ஹன்டரை நினைத்த மாத்திரத்தில் என் மனதில் உருவெடுக்கும் பிம்பங்கள்.

ஹன்டரின் மரணத்தில் ஒரு உண்மையான சூழியல் போராளியை நாம் இழந்திருக்கிறோம்.