சுந்தர ராமசாமியை நான் முதலில் வாசித்தது க்ரியாவின் வெளியீடாக வந்த “சுந்தர ராமசாமி சிறுகதைகள்” புத்தகத்தின் வாயிலாகத்தான். அதற்கு முன் இந்தப் பெயரை கேள்விப்பட்டவனல்லன். எதேச்சையாகக் கையில் கிடைத்தது இந்த நூல். இதிலிருந்த சிறுகதைகள் பல வித்தியாசமாக இருந்தன. பெரிதான அலங்கார ஜோடனைகள் இல்லாத ஆனால் அதே சமயத்தில் அதி துல்லியமான எழுத்து நடை என்னைக் கவர்ந்திழுத்தது. அந்தக் காலங்களில் நான் பல முன்னணி அமெரிக்கக் கட்டுரையாளர்களைத் தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருந்தேன். இதுபோல பிசிறில்லாமல், செம்மையாக அதே சமயம் வெருட்டாத மொழிநடை கொண்ட தமிழ் எழுத்தாளர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி எனக்கிருந்த சமயத்தில் வாசித்ததாலோ என்னமோ சு.ரா-வின் மொழி நடைக்கு நான் அடிமையாகிப் போனேன்.

பின்னர் ஒரு நாள் வேற்று நாட்டில் அவரைச் சந்திக்கப்போகிறேன் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டேன். 2001 ஆம் ஆண்டு அது வாய்க்கப் பெற்றது. அப்பொழுது சு.ரா. எழுதிய எல்லாவற்றையும் கிட்டத்தட்ட வாசித்திருந்தேன். இயல் விருது பெறுவதற்காக டொராண்டோ வந்திருந்த சு.ரா-வை அன்று காலையில் தனித்து ஹோட்டலில் பேட்டி கண்டேன். நான் முதன் முறையாக ஒரு எழுத்தாளரை நேர்கண்டது அப்பொழுதுதான். என்னுடைய வாசிப்பு எல்லையை நன்றாக உணர்ந்தவன் எனவே எனக்குப் பலவிதத் தயக்கங்கள் இருந்தன. ஆனால் சந்தித்த ஐந்தாவது நிமிடத்திலேயே மிக சகஜமாக உரையாடத் தொடங்கிவிட்டோம். சென்றது அவரை பேட்டி எடுப்பதற்காக, ஆனால் நிர்ணயிக்கப்பட்டிருந்ததைவிட நீண்டுகொண்டே போன அந்தச் சந்திப்பில் என்னை அவர் கேள்விகள் கேட்டதுதான் அதிகமாக இருக்கும். (இதனாலேயே அந்த ஒலிப்பதிவை எழுத்தில் கொண்டுவர பல திருத்தங்கள் தேவைப்பட்டன). நாளதுவரை அவரை வாசித்து அறிந்திருந்ததைவிட வேறுவிதமான சு.ரா-தான் என் முன்னே தோன்றினார். பின்னரும் எங்கள் நட்பு தொடர்ந்தது. நான் எழுதும் ஒன்றும் அரையுமான கட்டுரைகளுக்கு அவரிடமிருந்து தொடர்ச்சியான ஊக்குவித்தல் இருந்தது. பின்னர் காலச்சுவடில் தொடர்ந்து அறிவியல் விஷயங்களை எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க இப்பொழுது எழுதி வருகிறேன்.

கடந்த இரண்டு வாரங்களாக அவர் தங்கியிருந்த கலிஃபோர்னியாவிலிருந்து வந்த தகவல்கள் வருத்தமூட்டுபவையாக இருந்தன. கடைசியில் அது நிகழ்ந்துவிட்டது.

* * *

சு.ரா எழுதிக் குவித்தவர் அல்லர். நீண்டகால அவரது எழுத்துப் பயணத்தில் முன்று நாவல்களும், சிறுகதைகளும் ஒரு தொகுப்பு கவிதைகளும் சில கட்டுரைத் தொகுதிகளும்தான் அவரது படைப்புகள். ஆனால் வெளிவந்த காலத்தின் உத்திகளை மீறி நின்று தடம் பதித்தவை அவரது படைப்புகள். பசுவய்யா என்ற கவிஞராகவும் கட்டுரையாசிரியர், விமர்சகர் என்றும் அவரது பங்களிப்புகள் அளவிடமுடியாதவை. காலச்சுவடு இதழாசிரியராக மாற்று சஞ்சிகையைப் பெரு வணிகக் கூச்சல்களுக்கு இடையில் சாதித்துக் காட்டியது மாபெரும் சாதனை என்றுதான் கூற வேண்டும். காலச்சுவடு என்ற இயக்கத்தின் மூலமாக பல அற்புதமான படைப்பாளிகளை அடையாளம் கண்டு முற்படுத்தியதும் அவரது சாதனைகளுள் ஒன்று.

அழிந்து கொண்டிருக்கும் விழுமியங்களுக்கும் சரிந்துகொண்டிருக்கும் மனித நேயத்திற்கும் இடைப்பட்ட நிராதரவான பாழ் வெளியில் நின்று இந்த அழிவுகளைப் பற்றிய தனது அக்கறையைத் தொடர்ந்து பறைசாற்றிக் கொண்டிருந்தது சு.ரா-வின் குரல். புனைவிலக்கியகர்த்தா, கட்டுரையாசிரியர், கவிஞர், விமர்சகர், என்று கவலைகளை முன்வைத்துக் கொண்டிருந்த காலத்திலும் உள்ளார்ந்த நம்பிக்கையைக் கைவிடாது நின்றவர் அவர். அவரது மறைவில் தமிழ் இலக்கிய உலகத்தின் இழப்பு அளவிடமுடியாதது.

பதிவுகள் அழியும் காலம்

பசுவய்யா

நான் பிறந்தபோது விட்ட முதல் மூச்சு
இந்தப் பெருவெளியில்
எங்கிருக்கும் என
என்னால் கூற இயலாது.

என் ஜனன கத்தலின் அலை ஒலிகள்
இந்தப் பிரபஞ்ச வெளியில்
எங்கு உறைந்தன என
என்னால் கூற இயலாது

போகப் போக
(துரதிருஷ்டம் என்றுதான் கூற வேண்டும்)
சிறுகச் சிறுக நான் என் மூளையி ல் ஒட்டி
சிறுகச் சிறுக பிறருடை மூளைகளிலும்
நான் ஒட்ட ஆரம்பித்தபோது
சீரழியத் தொடங்கினேன்.

என் முதல் மூச்சுப்போல்
என் முதல் அழுகைப்போல்
என் சகல மூளை ஓட்டல்களும்
இந்தப் பெருவெளியில்
கரையும் காலத்துக்காகக் காத்திருத்தலே
சிறிது ஆறுதலை
எனக்குத் தந்துகொண்டிருக்கிறது.