அருள்செல்வனின் பதிவின் வழியே அசோகமித்ரனின் அவுட்லுக் கட்டுரையைப் பற்றி அறியக்கிடைத்தது. அவுட்லுக் தளத்திற்குச் சென்று பார்த்ததில் தளத்தில் இருப்பதே முழுமையானதாகவும் அச்சுப்பதிப்பில் இது சுருக்கப்பட்டிருபதாகவும் தெரியவந்தது. அருள் படித்தது சுருக்கப்பட்ட அபத்தமா அல்லது முழு அபத்தமா என்று தெரியவில்லை. ஏனென்றால் அருள் இதன் ஒரே ஒரு பகுதியைப் பற்றி, மிகவும் லேசாக எழுதியிருக்கிறார்.

அருளைப் போலவே எனக்கும் அசோகமித்ரன் மீது அளவு கடந்த மதிப்பு இருந்தது. டொராண்டோ இலக்கியச் சந்திப்புகளில் பூரணி மகாலிங்கம், அ. முத்துலிங்கம், செல்வம், செழியன் இவர்களிடம் அசோகமித்ரனைப் பற்றி மிக உயர்வாக விவாதித்திருக்கிறேன். இங்கே இவர்களுக்கு அசோகமித்ரன் பெரிய விஷயமில்லை. எனவே அதில் இவர்களுக்கு நிறைய வியப்பு இருந்தது. அசோகமித்ரனுக்கு நான் கொடுக்கும் இடம் தேவையற்ற அளவுக்கு அதிகம் என்று சிலர் சொன்னார்கள். சமீபத்தில் நடந்த அவரது பாராட்டுக் கூட்டத்தில் தன் எழுத்து யாருக்கும் மன அதிர்ச்சியையும் வருத்தத்தையும் கொடுக்காமல் இருக்க முயல்வதாகச் சொல்லியிருந்தார். அப்பொழுதே ஒரு உள்ளுணர்வில் இப்படியொரு சுயபிம்ய எழுச்சியில் இவர் ஏன் தேவையில்லாமல் ஈடுபடுகிறார் என்று தோன்றியது. தான் எழுப்பிய பிம்பத்தைத் தானே கலைத்துப் போடும் முயற்சியில் இப்பொழுது அசோகமித்ரன் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. இரண்டுமே தேவையில்லாத விஷயங்கள் என்பது வருத்ததிற்குரிய உண்மை.

அருள் மிகச் சாதாரணமாக,

சிலசமயம் இத்தகைய பேட்டிகளில் தொகுத்து எழுதும் போது சொல்லாத விடயங்களோ சொல்லியவை context மாறியோ மோசமான உச்சரிப்புகளாக தோன்றும் அபாயம் உண்டு. அப்படி நடந்திருக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் எனக்கு மேலே உள்ளதை அதிர்ச்சியில்லாமல் ஏற்க வேண்டியிருக்கிறது. உண்மையாகவே அதுதான் அவர் சொன்னது என்றால், what a jerk என்று கடந்து போகவேண்டியதுதான்.

என்று சொல்லியிருக்கிறார். நான் அப்படிக்கருதவில்லை. எனென்றால் தொகுக்கப்பட்ட இந்த உரையாடல் முழுவதுமே அபத்தங்கள் விரவிக்கிடக்கின்றன. பிராமணர்களை யூதர்களுடன் ஒப்பிடுவதிலிருந்து தொடங்கி, வேத மந்திரங்களின் இன்றைய அத்யாவசியத் தேவையை உயர்த்திப் பிடிப்பதுவரை எல்லாமே உச்சங்களாக இருக்கின்றன.

அவருக்குச் சற்றும் சம்பந்தமில்லாத அரசியல், அவரே சொல்வதைப் போல ஆழ்ந்த தொடர்பில்லாத மடங்கள் போன்றவற்றைப் பற்றிய அவரது கருத்துக்களைக் கூட ஒதுக்கிவிடலாம். ஆனால் அவர் முகிழ்ந்தெழுந்த சினிமா துறையை முன்வைத்துச் சொல்லவருவது மிகையான அபத்தம். இன்றைய தமிழ் சினிமாவில் பிராமணர்களுக்கு இடமில்லையாம். என்ன குடிமுழுகிப்போய்விடப்போகிறது? வெகுஜன கலையில் பெரும்பாண்மையைப் பிரதிபலிக்காமல் இருப்பதுதான் தவறு. பிராமணர்களுக்கு இடம் கொடுத்து சமூதாயத்திற்கு என்ன நல்லது நடந்துவிடப் போகிறது!

“Despite all these camouflages, even today 50 percent of the Brahmins stand out in a Dravidian setup. One can easily mark them out physically! They are so obvious!”

என்று சொல்வதன் மூலம் தெளிவாக வந்தேறிகள், வேறுபட்டவர்கள் என்ற அபத்தக் கருத்திற்கு அவரும் துணைபோகிறார். போதக்குறைக்கு சிலப்பதிகாரத்திலிருந்து பிராமணர்களைத் தனிப்படுத்திக் காப்பாற்ற வேண்டிய அவசியத்தை உணர்த்த ஒரு மேற்கோள் வேறு.

ஜெயேந்திர சரஸ்வதி மீது எப்பொழுதுமே மதிப்பிருந்ததில்லை; ஆனால் அவரைக் கைது செய்ததில் அதிர்ச்சி என்று சொல்கிறார். ஏன் அதிர்ச்சியடைய வேண்டும்? ஒருவகையில் இதை அசோகமித்ரன் எதிர்பார்த்திருக்க வேண்டுமல்லவா? அதையும் மீறி இது ஆச்சரியமளித்தால் ஒரு மடாதிபதி எந்த வகையில் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்?

வேதத்தைப் படிப்பதால் ஜீவிதத்திற்கு வழியில்லை என்று வருந்தும் அவரே தன் இறப்பிற்குப் பிறகு சடங்குகள் வேண்டாமென்று சொல்லிவிட்டாராம். மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்வதன் உயர்வைச் சொல்லும் அவரே அதைக் கடைப்பிடிக்க முடியாததன் நடப்பையும் சொல்கிறார். இப்படி முழுக்கட்டுரையும் அபத்தங்களாலும் முரண்களாலும் நிறைந்து கிடக்கிறது.

பிராமணர்களுக்குகந்த தலைமை இல்லை என்று வருந்துகிறார். இன்றைய தேவை இன்னொரு சாதித் தலைவனல்ல. பிறப்பால் உயர்வுதாழ்வு சொல்வதன் அறியாமையைப் போதிக்கும் ஆசிரியரே.

* * *

நானறிந்த வகையில் அசோகமித்ரனிடமிருந்து இப்படியொரு வெடிகுண்டை எப்படிப் புரிந்துகொள்வது? மிகச் சுலபமாகத் தென்படுவது அவருடைய வயது. அவர் வளர்ச்சிகாலத்தில் பிராமணர்களுக்கிருந்த உயர்நிலையைக் கண்டவர். இன்றைக்கிருக்கும் இடத்தைப் பார்க்கும்பொழுது அவருக்கு இழப்பாகத் தென்படுகிறது. கண்ணகி சொன்னாள் எனவே பிராமணர்களைக் காப்பாற்றுங்கள் என்று இன்றைக்கு யாரும் சொல்லத் துணியமாட்டார்கள்.

அசோகமித்ரன் பொதுவில் வார்த்தைகளை இறைப்பவரல்லர். அவர் புனைவுகளிலும் கட்டுரைகளிலும் வார்த்தைகள் தெரிந்தெடுத்துக் கோர்க்கப்பட்டிருக்கும். இன்றைய படைப்பாளிகளில் சொற்சிக்கனத்தைக் கையாள்பவர்களில் அசோகமித்ரனுக்குத்தான் முதலிடம். இந்தக் கட்டுரையிலும் வார்த்தைகள் இறைக்கப்படவில்லை. மிகத் தெளிவாக அவர் சொல்ல வேண்டியதைச் சொல்லியிருக்கிறார். ஆனால் சொன்னவையெல்லாம் காலத்துக்கு ஒவ்வாத அபத்தஙள் என்பதுதான் வருந்தற்குரிய விஷயம்.

வார்த்தைகளை விரயம் செய்யாமலிருப்பதே அவரைப் பல சர்ச்சைகளிலிருந்தும் இதுநாள்வரை விலக்கி வைத்திருந்தது. ஆனால் இந்தக் கட்டுரைக்கு அவர் நிறைய விளக்கங்களைச் சொல்லியாக வேண்டும். நமது சிறுபத்ரிக்கைகளுக்கு அரைவருடத்திற்கான தீனியைப் போட்டிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

* * *

பிம்பங்கள் கலைவது அவசியம். இந்தக் கட்டுரையின்மூலம் அசோகமித்ரன் என்ற சிலைக்கு நரம்புகளும் ரத்த ஓட்டமும் உண்டு என்று நிரூபணமாகியிருக்கிறது. கற்சிலையைவிட உயிருள்ள மனிதர்கள் சுவாரசியமானவர்கள்.