இன்றைக்கு கூகிள் தன்னுடைய மேசைத்தளத் தேடலை அதிகார்வபூர்வமாக வெளியிட்டிருக்கிறது. இது சோதனை முறை மென்கலனாக வெளியிடப்பட்டபொழுது இதைப் பற்றி நான் விரிவாக எழுதியிருந்தேன்.

அகத்தேடல் கூகிள் வழி – பாகம் 1
அகத்தேடல் கூகிள் வழி – பாகம் 2
அகத்தேடல் கூகிள் வழி – பாகம் 3

அப்பொழுது அதன் முக்கிய குறைபாடாக அது மைக்ரோஸாப்ட் ஆபீஸ், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தவிர்த்த கோப்புகளில் அதிகம் பயனுள்ளதாக இல்லை என்று சொல்லியிருந்தேன். இன்றைக்கு வெளியாகியிருக்கும் வடிவத்தில் இந்தக் குறைகள் களையப்பட்டு பல கோப்பு வடிவங்களுக்கும் இது நீட்டிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக,

மோஸிலா/தண்டர்பேர்ட் மின்னஞ்சல்கள்
மோஸிலா/பயர்பாக்ஸ் கிடங்குகள்
பலவிதமான படக் கோப்புகள்
இசைக் கோப்புகள்

இவற்றைத் தவிர பிற ஆர்வலர்கள் தயாரிக்கும் பொருத்திகளும் பயனுள்ளதாக இருக்கின்றன. உதாரணமாக ஓப்பன் ஆபீஸ் கோப்புகள். குறிப்பாகச் சொல்லப்போனால், தண்டர்பேர், பயர்பாக்ஸ், ஓப்பன் ஆபீஸ், இசைக் கோப்பு இவை வந்தவுடன்தான் உண்மையிலேயே எனக்குப் பயன் அதிகரித்திருக்கிறது.

அதிகார்வபூர்வமான இந்த வடிவத்துடன் மேசைத்தளத்தில் போட்டுக்கொள்ள ஒரு சிறிய தேடல் பெட்டியும் கிடைக்கிறது. இதில் தேடவேண்டிய விஷயத்தை உள்ளிடுவதன் மூலம் கணினியில் இருக்கும் கோப்புகளைத் திறக்க அடைவுகளுக்குள்ளே அலைய வேண்டியதில்லை.

மைக்ரோஸா·ப்ட், யாகூ உள்ளிட்ட பிறரும் விரைவிலேயே மேசைத்தளத்தில் தேடல் வசதிகளைத் தரப்போகிறார்கள். ஆனால் தன்னுடைய அடிப்படை தொழில்நுட்பத் திறனை முன்வைத்து கூகிள் முதல் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

தாரளமாகப் பரிந்துரைக்கிறேன்; இறக்கிப் போட்டுப் பாருங்கள்.