இந்த வருடம் (2005) தொடரில் முதன்முதலாகக் கலந்துகொள்ளும் இந்தியரான நாராய்ண் கார்த்திகேயன் முதல் தடவையாக ஃபார்முலா 1 புள்ளிகளைப் பெற்றிருக்கிறார். யு.எஸ் க்ரான் ஃப்ரீயில் நான்காம் இடத்தைப் பெற்று ஐந்து புள்ளிகளைப் பெற்றிருக்கிறார் நாராய்ண். இதே போட்டியில் சென்ற வருடத்தின் அசைக்க முடியாத சாம்பியனாக வந்த மிகைல் ஷுமாக்கர் முதல் முறையாக முதலிடத்தைப் பெற்றிருக்கிறார்.

ஆனால் இந்தப் போட்டி விநோதமான சூழ்நிலையில் நடந்தேறியிருக்கிறது. ஃபார்முலா 1 கார்களுக்கு மிகைலின் அல்லது ப்ரிட்ஜ்ஸ்டோன் டயர்கள் பொருத்தப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான கார்கள் மிகைலின் டயர்களைக் கொண்டவை. ஆனால் இண்டியானாபோலிஸ் மைதானத்தில் 13வது திருப்பத்தில் இந்த டயர்கள் ஆபத்தானவை என்றும் இதைக் கொண்ட கார்வீரர்கள் இந்த வளைவில் தங்கள் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்றும் ஃபார்முலா 1 குழுமம் விதித்தது. இதற்கு மிகைலின் ஒத்துக்கொள்ளவில்லை. எனவே போட்டியில் மூன்று குழுக்களைச் சேர்ந்த (ஃபெராரி, ஜோர்டான், மினார்டி-காஸ்வொர்த்) ஆறே ஆறு வீரர்கள்தான் பங்கேற்றார்கள் (மீதம் 14 பேர்கள் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்கள்). இந்தப் போட்டியில் நான்காவதாக வந்த கார்த்திக் தனது முதல் ஃபார்முலா 1 புள்ளிகளைப் பெற்றிருக்கிறார். (இவர் இன்னும் கொஞ்சம் முந்தியிருந்தால் மூன்றாமிடத்திற்கு வந்து வெற்றிமேடையில் ஏறியிருக்கக் கூடும்). அதிகப் போட்டியில்லாத நிலையில் முதல் புள்ளிகளைப் பெற்றது கார்த்திக்-க்கு சுவாரசியமாக இருக்காது.

ஆமாம், அதனாலென்ன ஆனாப்பட்ட சாம்பியன் ஷுமாக்கரே தன்னுடைய 2005 முதல் வெற்றியை இப்படித்தான் பெற்றிருக்கிறார். அவரும் மேடையில் சந்தோஷமாகத்தான் கொண்டாடினார். எனவே கார்த்திக்கின் துவக்கம் எனக்கு சந்தோஷத்தைத்தான் தருகிறது. முதல் முறையாக தவழும் குழந்தையைப் போலத்தானே இதுவும்.