ழ கணினி நடவடிக்கைகளைப் பற்றி பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். தமிழில் திறந்த ஆணைமூல நிரலிகள் குறித்த விவாதம் இந்த அளவிற்கு நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி.

என்னால் இயன்ற அளவிற்கு கருத்துகளைத் தொகுத்தளிக்க விரும்புகிறேன். கிளைத்துப் போயிருக்கும் விவாதத்தை ஒரு முகப்படுத்தும் முயற்சி இது. (மீண்டும் கடந்த இரண்டு நாட்களாக உடல் நிலை சரியில்லை எனவே இதில் கோர்வையில்லாமல் இருந்தால் மன்னிக்கவும்). என்னுடைய அஞ்சு நாள் அஞ்ஞாத வாசம் பற்றிய டைனோவின் கே(லி)ள்விக்கு: கடைசியாக நாம் எழுதி நிறுத்தியபொழுது புரிதல் வந்துகொண்டிருக்கிறது என்று எழுதினேன். கூடவே, இனி இருப்பதெல்லாம் இந்தத் திட்டத்தில் சுஜாதாவின் தனிமனிதச் செயல்பாடுகளைப் பற்றியவைதான் என்று சொல்லி முடித்தேன். ஏனென்றால் இன்றுவரை அவர் இந்தத்திட்டத்தில் தான் என்ன செய்கிறேன் என்பதைப் பற்றி நேரடியாகக் கூறவில்லை. {நண்பன்_அசோக் என்னுடைய நிலைப்பாட்டை மிகச்சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறார். அவர் கேட்டிருக்கும் ஏழு கேள்விகளும் மிகச் சரியாகவே அமைந்திருக்கின்றன.}. அதே போல் டைனோவும் சுஜாதாவின் பெயர் முன்னிருத்தப்பட்டால் தானும் பொங்கியெழக்கூடும் என்று சொல்லியிருந்தாலே, ஆமாம், “யாம் உம்மைச் சோதனை செய்யவே மௌனம் காத்திருந்தோம்”.

திரு டைனோவுடன் இனியும் இதைத் தொடரவேண்டாம் என்றுதான் தோன்றுகிறது. அவர் முகம் காட்ட மறுப்பதில் இருக்கும் சங்கடத்தை நான் ஆரம்பத்திலேயே தெளிவாகச் சொல்லியிருந்தேன். இப்பொழுது, என்னுடைய நேரம் இதில் எழுபட்டுக்கொண்டே போவதைக் குறித்து கவலை வருகிறது. எனவே பொதுக்குழுக்களில் இனியும் இவருக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். என்னுடைய உடல்நிலை காரணமாக நான் எழுதவில்லை என்று சொல்லும்பொழுதும் அதை ‘உங்களுக்கு’ அவசியம் ஏற்படும்போது கையில் எடுப்பீர்கள், இல்லாதபோது கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, மறுபடியும் வந்து “குறையோமுறையோ”… என்று முகமுடி போட்டுக்கொண்டு கேலி பேசும் அவருக்கு இனிமேலும் பொறுமையாகச் சொல்லத் தேவையில்லை என்று தோன்றுகிறது.

என்னுடைய வலைப்பதிவில் நான் இந்தக் கருத்துக்களைத் தொடரக்கூடும். அங்கே அவர் கருத்துக்களை எழுதலாம், நான் இயன்றவரை பதிலளிக்க முயல்வேன். பொதுவிடத்தில் ஒருவர் முகமுடியுடனும் மற்றவர் தன்னுடைய நேர்மையைப் பணயம் வைத்து விவாதிப்பதற்கும் ஒரு எல்லையிருக்கிறது. அந்த எல்லையை நான் எப்பொழுதோ கடந்துவிட்டதாக என்னுடைய நண்பர்கள் கூறினாலும், இது நாள் வரை என்னால் தொடரமுடிந்தது. தொடர்ந்தேன்.

ழ குழுவுக்கு முற்றுப்புள்ளி என்றும் சுஜாதாவிற்கு அரைப்புள்ளி என்றும்தான் எழுதியிருந்தேன். இப்பொழுது ழ-தான் சுஜாதா, சுஜாதாதான் ழ என்று தெளிவாகக் காட்டியிருப்பதால் திரும்ப எழுதும்பொழுது இரண்டும் வருகிறது.

* * *

இந்த விஷயத்தில் நானும் முகுந்தும் சற்று காரம் காட்டுவதாக அசோக் சொல்லியிருந்தார். உண்மைதான் ஏனென்றால் இந்தத் திட்டத்தில் ஆரம்ப நாள்முதலாகவே கூட இருந்துவருபவன் நான். இதன் ஆதாரத் தூண்களான, வசீகரன், சிவராஜ், தினேஷ், சிவக்குமார் சண்முகசுந்தரம், போன்றவர்களையும், புயலாக வந்து மோஸிலாவையும், ஓப்பன் ஆபீஸையும் சாதித்துக் காட்டியிருக்கும் முகுந்தையும் புறக்கணிப்பதையும், இந்தத் திட்டங்கள் கவைத்துப்போவதைப் பொறுக்கமுடியாததாலும்தான் நானும் முகுந்தும் இதில் காட்டம் காட்டுகிறோம் என்பதையும் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். மீண்டும் இந்தக் காட்டங்களையெல்லாம் பொதுவில் காட்டுவதற்கு முன்னால் நான் தமிழ்பிசி குழுவழியாக திரு சுஜாதாவை அணுக மேற்கொண்ட முயற்சிகளையும் சொல்லியிருக்கிறேன். அதே போல் முகுந்த் மோஸிலா, ஒப்பன் ஆபீஸ் இரண்டின் செயல்பாடுகளையும் தமிழினிக்ஸில் சொல்லித்தான் வருகிறார். தொடர்ச்சியாக எங்களைப் புறக்கணித்தன் மூலம் எங்களை வார்த்தைகளில் கடுமை காட்ட வைத்திருக்கிறார்கள். மெதுவாகச் சொல்லி அலுத்துப்போய்தான் கத்துகிறோம். {தவிர என்ன இருந்தாலும் உடம்பில் கொஞ்சம் slashdot இரத்தம் ஓடுகிறது :)}

அசோக் கேட்டிருக்கும் கேள்விகளுடன் கூட இதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். குறைந்த செலவில் ஆங்கிலம் பேசத் தெரியாதவர்களுக்காகத் தமிழ்க்கணினி செய்வதாக à®´ சொல்கிறது – இதையேதான் குறிக்கோளாகக் கொண்டு ஐந்து வருடங்களாக தமிழ் லினக்ஸ் குழுவும் செயல்படுகிறது. எங்களுடைய முயற்சிகளுக்கும் பாமரர்கள்தான் இலக்கு, ஸ்டாண்·à®ªà¯‡à®°à¯à®Ÿà¯ பல்கலைக் கழகத்தில் படிக்கும் தமிழ் மாணவர்களுக்காக நாங்கள் உழைக்கவில்லை.

அசோக்: à®´-குழுவினர் பொறுமை காத்திருப்பது உண்மைதான். ஆனால் இது பாராட்டுக்குரிய விஷயமாகத் தோன்றவில்லை. பிளவு இல்லை, சேர்ந்து செய்ல்படுகிறோம். எல்லோருடைய பங்களிப்பையும் கௌரவிக்கிறோம், என்ற ரீதியிலேதான் திரும்பத்திரும்ப வளவளவென்று பேசிக்கொண்டிருக்கிறார்களேயழிய நாங்கள் இன்னின்ன காரணத்தால் மோஸிலாவைத் திரும்பச் செய்கிறோம், இதனால் ஒப்பன் ஆபீஸ் திரும்பச் செய்யப்படுகிறது, அண்ணா பல்கலைக்கழகத்தின் அகராதியில் இதெல்லாம் தவறு, 65% சதவீதம் தவறு இருப்பதால் திருத்துவதைவிடத் திரும்பச் செய்யலாம் என்று முடிவெடுத்தோம் ரீதியில் ஏதாவது பதில் சொல்கிறார்களா? இல்லை சுஜாதா-தான் தலைவர், கிடையாது ‘சுஜாதா குழுவினர்’ என்று போடுவது வேண்டாம்… இன்னின்ன காரணங்களால் தமிழ் லினக்ஸ் குழுக்களில் நம் நடவடிக்கைகளைச் சொல்லாமல் இரகசியமாக வைக்க முடிவெடுத்தோம் என்று சொல்கிறார்களா? விளக்கெண்ணெய் பதில் எழுதுவதற்குப் பொறுமை என்று பெயரில்லை. இது எதிர்ப்புகளை மழுங்கவைக்கும் சூழ்ச்சி.

* * *

இனி சில பொதுக்கருத்துக்கள்;

à®´ – இதை விற்கலாமா? தாராளமாக. திறந்த ஆணைமூலத்தை எடுத்து யார் வேண்டுமானாலும் விற்கலாம். ஆனால் அதற்கு முன் GNU General Public License பற்றி நிறையவே தெரிந்து கொள்ளவேண்டும்.

à®´- Branding செய்யலாமா? தாராளமாக, (முகுந்தின் கலக்கம் தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது). தனிப்பெயரும் இலச்சினையும் மிகவும் அவசியம். அதுவும் அவர்களுக்கு வர்த்தக ஆர்வம் இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கும் நேரத்தில் இது மிகவும் முக்கியம். பத்ரி சரியாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் சொல்லாத ஒன்று (அவருக்கு இதெல்லாம் பற்றி நன்றாகத் தெரியும் நான் சொல்லவேண்டியதில்லை, பிறருக்காக) – இங்கே குழப்பமெல்லாம் பல்கலைக்கழகத் திட்டம், தமிழுக்கு கணினி தந்து சேவை செய்வதாகச் சொல்வது, கணினிக்குத் தமிழ் தந்து உய்விப்பது, வர்த்தக ஆர்வம் இதெல்லாம் மோர்க்குழம்புத்தனமாக (I mean fuzzy not confusion). à®´-குழுவாலும், திரு சுஜாதாவின் க.பெ கட்டுரைகளிலும் வேண்டுமென்றே அமைக்கப்பட்டிருப்பதைப்பற்றித்தான்.

என்னைப் பொருத்தவரையில் தமிழில் வர்த்தக லினக்ஸ் முயற்கள் நடைபெறுவது தமிழ் திறந்த ஆணைமூலத் திட்டத்திற்கு நல்லது. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால் இன்றைக்கு லினக்ஸ் இருக்கும் இடத்திற்கு ஆரம்பத்தில் பொதித்து சிடிக்களை விற்ற ஸ்லாக்வேர் தொடங்கி யெல்லோடாக் லினக்ஸ் வரை எல்லாமே லினக்ஸை உந்தித் தள்ளியிருக்கின்றன.

திறந்த ஆணைமூலம் செய்பவர்கள் பலருக்கும் அருமையான அடையாளம் இருக்கிறது – உதாரணம் Samba, Apache,… அந்த ரீதியில் à®´-வின் தனி அடையாளமும், அவர்களது இலச்சினைகளையும் நான் வரவேற்கிறேன். நன்றாகவே செய்கிறார்கள். அவர்களது கிராபிக்ஸ் கலக்கல், பத்ரிக்கைச் செய்திகள், வருங்கால சந்ததிகளை இலக்குவைத்தல் (மாணவர்களை ஈடுபடுத்தல்) இலவச விளக்க சிடி விநியோகம் என்று பிராண்டிங் நன்றாகவே செய்யப்படுகிறது. அந்தப் பிராண்டிங்க் முயற்சியில் பொதுச் சேவை சரக்கு மேலே தூவி மறைப்பதுதான் சரியில்லை.

அப்படித் திறந்த ஆணைமூலம் விற்பவர்கள் பொதுச் சேவை செய்யக்கூடாதா? கட்டாயம் செய்யலாம், உதாரணமாக ரெட் ஹாட் தான் காசு கொடுத்து வேலைக்கு வைத்திருக்கும் ஆட்கள் எழுதும் நிரலிகளை எல்லாம் ஜிபிஎல் உரிமத்தில் திறந்து விடுகிறது. மறுபுறத்தில் ஊறிப்போன வர்த்தக முதலைகளான ஐபிஎம், ஹெச்பி, இதெல்லாம்கூட தங்கள் சமாச்சாரங்களைத் திறந்து விடுகின்றன. ஆனால் எங்கே திறந்த ஆணைமூலப் பங்களிப்பு முடிகிறது, எங்கே வர்த்தகம் ஆரம்பிக்கிறது என்பதில் கவனம் தேவை. இரண்டையும் தெளிவாகப் பிரித்துக் காட்டவேண்டும். ரெட் ஹாட்டிற்கே மாத்திரமான நிறுவு கருவிகளை எழுதுபவர்களுக்கு ரெட் ஹாட்டின் வர்த்தக நோக்கங்கள் நன்றாகத் தெரியும். லயோலா கல்லூரி மாணவர்கள்??

மாண்ட்ரேக்கும், சூசியும் ரெட் ஹாட்டை விண்டு எடுத்து தங்கள் டப்பாவில் அடைக்கிறார்கள். ஆனால் சுஸி லினக்ஸோ, மாண்ட்ரேக்கோ ரெட் ஹாட்டின் பொதி நிர்வாகச் செயலியை RPM Package Manager பொதிக்கும்பொழுது அதை மாண்ட்ரேக் பெயரிட்டு விற்பதில்லை. ஆர்பிஎம் என்றே அழைக்கிறார்கள். அந்த வகையில் திரு சுஜாதாவின் கூற்றுப்படியே 65% மொழியாக்கமும், மற்ற எல்லா தொழில்நுட்ப வேலைகளும் தமிழ் லினக்ஸ் குழுவால் செய்யப்பட்டிருக்கையில் அதை “ழகேடிஈ” என்று சொல்வது தவறு. (பத்ரி: ஆம் கேடிஈ-க்கு அவர்கள் இப்பொழுது செய்திருக்கும் வெறும் String Translation மாத்திரம் கூடச் செய்திருக்க அவசியமில்லை. ஆனால் சராசரி வாசகனிடம் விகடனில் 5000 வார்த்தைகளைத் தமிழ்ப்படுத்தினோம் என்று அறைகூவ இது தேவையல்லவா?)

பொதுச் சேவை செய்துகொண்டே திறந்த ஆணைமூலம் விற்க முயன்றபொழுது ரெட் ஹாட் என்ன செய்தது – முதலில் லினக்ஸ்க்குப் பங்களித்த முக்கிய நிரலர்களை அழைத்து உங்களுக்குப் பங்கு வேண்டுமா என்று கேட்டது. அதை நிறைவேற்றி முடிப்பதில் பல சிக்கல்கள் இருந்தாலும் ரெட் ஹாட்டின் நேர்மை பாராட்டப்பட்டது. பல நிரலர்களும் அதனாலேயே ரெட் ஹாட்டைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.

* * *
பல குழப்பங்களுக்கு முக்கிய காரணம் தங்கள் நிலையைத் தெளிவுபடுத்திக்கொள்ளாததுதான் என்று தோன்றுகிறது.

1. இது பல்கலைக்கழகத் திட்டமா? அந்த அளவில் பல்கலைக்கழகத்தின் தேவை எங்கே முடிவடைகிறது?
2. தனியார் நிறுவனத்திற்குப் (ரெட் ஹாட்) பங்களிக்கும் முயற்சியா? அப்படியென்றால் 90% மொழியாக்கம் செய்யப்பட்ட தமிழ் கேடிஈ ஏன் இன்னும் ரெட் ஹாட்டால் கோர்க்கப்படவில்லை?
3. பொதுவில் திறந்த ஆணைமூலச் சேவையா?
4. இல்லை தனிப்பட்ட வர்த்தகக் கருவாக்கமா? (Incubation)
5. இல்லை இது எல்லாம் என்றால் பங்களிக்கும் மாணவர்களுக்குத் தெளிவாக்கப்பட்டிருக்கிறதா?
6. மானியம் தரும் பல்கலைகழகத்திற்கு Conflict of Interest இல்லையா?
7. தலைவரின் பங்கென்ன? CEO, Godfather, Technical Manager, Linguistic Consultant, Open Source Evangelist, ழவின் கொ.ப.செ???
8. முதலில் தலைவர் யார்? (இன்றுவரை திரு சுஜாதா தலைவர் நானில்லை என்று தெளிவாகச் சொல்லவில்லை, “அவன் கண் விட்டவன் நான்” “பந்தி விசாரிப்புதான் என் பங்கு” என்றெல்லாம் சுற்றி வளைக்கிறாரேயழிய சிவக்குமார்தான் தலைவர், ஜெயராதாதான், இது எழுத்தாளர் சுஜாதா குழு என்று போடுவது தவறு என்று தெளிவுபடுத்தவில்லை. Why being fuzzy?
9. திறந்த ஆணைமூலத்திட்டத்தில் உள்வட்டம், வெளிவட்டம், ஒளிவட்டம், ஏன்?

* * *
இனி தமிழிணையப் பல்கலைக்கழகத்திற்குச் சில கேள்விகள்

1. த.இ.ப அகராதிப் பக்கங்களில் ஏன் தங்கள் மானியம் பெற்ற “சுஜாதா அகராதி” வைக்கப்படவில்லை? (வேறு அகராதிகள் இருக்கின்றன)
2. குறைந்தபட்சம் தகவல் நுட்ப அகராதிக் குழுவில் ஏன் சுஜாதா இடம்பெறவில்லை?
3. இதே போல த.இ.ப எத்தனை திட்டங்களுக்குப் பணவுதவி செய்கிறது?
4. அவற்றின் இன்றைய நிலை என்ன?
5. அதன் விளைவுகள் இலவசமாக இறக்கிக் கொள்ளவோ, த.இ.ப வைத்த விலைக்கு வாங்கவோ முடியுமா?
6. பல்கலைக்கழக ஆசிரியர் இல்லாதவர்களால் (திரு சுஜாதா/ஜெயராதா/சிவக்குமார்…) மானியம் பெற முடியுமென்றால் பிற பாமரர்கள் மானியம் பெற என்ன செய்ய வேண்டும்?
7. அண்ணா பல்கலைக்கழகம் ஒரு அகராதி தயாரித்து வெளியிட்டு விட்டது, பின் ஏன் த.இ.ப இன்னொரு அகராதி வெளியிட வேண்டும். அதிலுள்ள பிழைகளைக் களைய முயற்சி எடுக்கப்பட்டதா?

(இதுபோன்ற கேள்விகளைப் பிற பல்கலைக்கழகங்களின் முன் வைக்கமுடியாது, ஆனால் த.இ.பவின் செய்ற்பாடுகளெல்லம் தகவல் உயர்-நுட்பங்களைப் பயன்படுத்துவதாலும், இணையத்தின் அடிப்படையில் நடப்பதாலும்தான் இப்படிக் கேட்க முடிகிறது).
* * *
மீண்டும், பிராண்டிங் செய்வதில் தவறில்லை, வர்த்தகம் செய்வதில் தவறில்லை. நானே நாளைக்கு பிராண்டிங் செய்து விற்க முயலலாம் அல்லது என் நீண்ட கால சக நிரலர்கள் செய்யலாம். எதுவுமே தவறில்லை. ஆனால் ஓப்பன் சோர்ஸ் வர்த்தகம் என்பது நெருப்பு அதனுடன் விளையாடுவதற்கு நல்ல உத்தி தேவை. அதற்குத் திறந்த ஆணைமூலத்தில் ஊறியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஜாம்பவான்களான (உம் ரெட்ஹாட் இந்தியா) நாளை à®´ ஏப்பம்விடப்படும். திறந்த ஆணைமூலத்தில் மூடிவைக்க நிறைய இடமில்லை, தேவதைகள், நிரல்கள், செயற்பாடுகள் எல்லாம் இதில் அடக்கம். ஏப்பம் விடப்படாமல் இருக்க பங்களிப்பவர்களுக்குள்ளே ஒற்றுமை அவசியம். ஊர் ரெண்டுபட்டால் வர்த்தக முதலைகள் ஒருவர் ஒருவராக ஒதுக்கி விழுங்கிவிடும்.

அன்புடன்
வெங்கட்