faust_solarcar.png நான் வேலைசெய்யும் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் சூரியசக்தி காரில் பயணித்துக் கொண்டிருந்த மாணவன் நெடுஞ்சாலை விபத்தில் நேற்று இறந்திருக்கிறான்.

உலகின் பல முன்னணி பல்கலைக்கழகங்களைப் போலவே டொராண்டோவிலும் பல சிறிய அறிவியல்/தொழில்நுட்ப விசேட ஆர்வமுள்ளவர்களின் குழுக்கள் இருக்கின்றன. புகைப்படக் கலை, சலனப்படம், ஒலிப்பதிவு, இரத்ததானம்,… இவற்றில் டொராண்டோ பல்கலையைப் பொருத்தவரை மிகவும் பிரபலமானது ப்ளூஸ்கை சோலார் கார் போட்டிக் குழு (Blue Sky Solar Racing Team). சென்ற வருடம் வடஅமெரிக்க சூரியக்கார் பந்தயத்தில் பாதுகாப்புக்கான விசேட விருதைப் பெற்றது எங்கள் குழு. பல சமயங்களில் இது குழுவினரால் மதிய உணவு இடைவேளைகளில் என்னுடைய ஆய்வகத்திற்கு முன்னால் பெருமையாக ஓட்டிச் செல்லப்படும். அந்த சமயங்களில் சக மாணவர்கள்/மாணவியர் முகங்களில் பெருமிதமும் மகிழ்ச்சியும் தெறிப்பதைக் கண்டிருக்கிறேன். நேற்று அந்த இளைஞர்களுள் ஒருவன் விபத்தில் இறந்துபோயிருக்கிறான். ஒன்டாரியோ, க்யூபெக் மாநிலப் பல்கலைக்கழகஙக்ளின் சூரியக்கார் குழுவினர் பொதுமக்களிடைய சுற்றாடல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இரண்டு மாநிலங்களிலும் பல இடங்களில் ஊர்வலமாகச் சென்றிருக்கிறார்கள். அதில் டொராண்டோ குழு வடமேற்கே வாட்டர்லூ என்ற இடத்திற்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபொழுது இந்த சோகம் நிகழ்ந்திருக்கிறது.

ஓட்டிவந்த மாணவன் ஆண்ட்ரூ ப்ரா (Andrew Frow) நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்திருக்கிறான். எதிர்திசை ஒழுங்கைக்குள் சென்று பிறகு தன்னுடைய ஒழுங்கைக்குச் திரும்பியிருக்கிறான். அப்பொழுது தடுப்புச் சுவரில் மோதி வந்துகொண்டிருந்த மினிவேன் ஒன்றில் பொருதியிருக்கிறான். சோலார்கார் தூக்கியெறிப்பட்டு ஆண்ட்ரூ மூர்ச்சையாகியிருக்கிறான். இதுபோன்ற சோதனையோட்டங்களை நடத்தும்பொழுது பாதுகாப்புக்காக முன்னும் பின்னும் சாதாரண கார்களில் துணைக்கு நண்பர்கள் வருவார்கள்; நேற்றும் வந்திருக்கிறார்கள். அவர்களது முயற்சிகளுக்கு எந்தப் பலனுமின்றி ஆண்ட்ரூ இறந்துபோயிருக்கிறான் .

faust_crash.pngகட்டாயமாக இந்த நிகழ்வில் தவறு யார் மீதும் இல்லை. காவல்துறையினர் அளவுக்கு அதிகமாக வீசிக்கொண்டிருந்த காற்றைச் சொல்லுகிறார்கள். அளவில் மிகச் சிறியதாகவும் பரப்பில் பெரியதுமாக இருக்கும் இந்தக் கார் காற்றால் அலைக்கழிக்கப்படல் சாத்தியமே. அந்த நிலையில்தான் ஆண்ட்ரூவின் கட்டுப்பாட்டை மீறி கார் எதிர் ஒழுங்கைக்குச் சென்றிருக்கிறது.

இது ப்ளூஸ்கை நண்பர்களுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. அவர்களில் பலர் அதே இடத்தில் அமர்ந்து கதறியழுதிருக்கிறார்கள். இன்றைக்கு பல்கலைக்கழகம் முழுவதுமே சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது. ஆண்ட்ரூ, பாஸ்ட் (Faust) என்று பெயரிடப்பட்ட அந்த சூரியக்காரின் பொறியமைப்புகளை வடிவமைக்கும் குழுவின் தலைவன்.

ப்ளூஸ்கை குழுவினர் தாங்கள் வசிக்கும் உலகை உன்னதமாக மாற்றவேண்டும் என்று கனவுகாணும் இளைஞர்கள். இவர்களில் பலர் அற்புதமான பொறியியல் வல்லுநர்கள். என்ன சொல்வதென்று தெரியவில்லை. அந்த இளைஞர்களுக்கு என் அனுதாபங்கள். நாளை மலரவிருந்த ஒரு மொட்டு காற்றில் அலைக்கழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப ஆர்வம் என்ற தீயில் அந்தப் பிஞ்சு ஆகுதியாக வெந்திருக்கிறது. அவனுடைய பெற்றோர்களின் சோகம் எனக்குப் புரிகிறது.

மீண்டும் ப்ளூஸ்கை திரும்ப வரவேண்டும் – வருவார்கள். தான் வாழும் உலகைத் தூய்மையாக்க வேண்டும் என்ற ஆண்ட்ரூவின் கனவை நிகழ்த்திக் காட்டவேண்டியது அவர்கள் கடமை. அவர்கள் சாதனைகள் பல படைக்க வாழ்த்துவோம்.