தமிழ் லினக்ஸ் தொடர்பாக நான் எழுதியிருந்தவைகளைப் பற்றி திரு. டைனோ என்பவர் ராயர் காபி கிளப்பில் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அந்தக் கேள்விகளும் என் விளக்கங்களும்.

Here is the reference for Dyno’s posting :

http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/5500 அன்புள்ள டைனோ,


சுஜாதா ஒரு சாதாரண ஊடக எழுத்தாளர். அவர் கூறியுள்ளதை கவனிக்கையில் அவர் ‘தமிழ் பி சி’ திட்டத்தில் மேற்பார்வையாளராகவே ஈடுபட்டுள்ளார். தாங்களும் தைச்சார்ந்த /அதைப்போலுள்ள ஒரு திட்டத்தில் முயன்று வென்றிருக்கிறீர். ஆனால் சுஜாதா என்ற ஒரு தனிநபரின் அங்கீகாரத்தை நீங்கள் எதிர்பார்பதேன்?

திரு சுஜாதா தமிழிணையப் பல்கலைக் கழகத்தின் மானியம் பெற்ற ஒரு திட்டத்தை முன்னின்று
நடத்துகிறார். பல்கலைக்கழக மானியம் (அது எவ்வளவு சிறியதாக வேண்டுமானாலும் இருக்கலாம்), பெற்ற ஆராய்ச்சி நெறிமுறைகளின்படி நடத்தியாக வேண்டும். அத்தகைய நெறிமுறைகளில் முக்கியமான ஒன்று முன்னோடி ஆராய்ச்சிகளை உரிய முறையில் சுட்டிக்காட்டி அதை எப்படி முன்னெடுத்துச் செல்ல உத்தேசித்திருக்கிறோம் என்று மொழியவேண்டியது. இந்த இடத்தில் சுஜாதா என்ற தனிநபரின் அங்கீகாரத்தை நாடி நிற்கவில்லை, ஒரு தொழில்நுட்ப திட்டத்தை முன்னின்று நடத்துபவர் என்ற ரீதியில் நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டுகிறேன்.

இந்த விவாதத்தை மிக எளிதாக “சுஜாதா என்ற தனிமனிதரின் மீது பொறாமை” என்ற ரீதியில்
ஒதுக்கித் தள்ள முயன்றிருக்கிறீர்கள். அதே போல அழுகுழந்தைகளாக (cry babies) எங்களையும்
சித்தரிக்க. தயவு செய்து இதை ஒரு தொழில்நுட்ப திட்டம் என்ற கண்ணோட்டத்தில் பாருங்கள்.


சுஜாதா தமிழ் மென்பொருளுக்கு சட்டாம்பிள்ளையா? குறிப்பாக அவரை மட்டுமே அடிக்கோடிடுவது எதனால்? ஒரு எழுத்தாளர் எதை எழுதவேண்டும் என்பதை உந்துவது
சரியாகப்படவில்லை.

மன்னிக்கவும், இங்கு எழுத்துரிமை, எழுத்தாளனின் அடிமடியில் கைவைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர் எழுதுவது தொழில்நுட்பத்தைப் பற்றி, இங்கு எழுத்தாளருக்குத் தனியுரிமை இல்லை. நானும் அறிவியல் தொழில்நுட்ப விஷயங்களை எழுதுபவன் என்பதால் இதை என்னால் வரையறுக்க முடியும்.

சுஜாதா மென்பொருளுக்குச் சட்டாம்பிள்ளையா – இந்தக் கேள்விக்கு விடையளிப்பது மிகவும் கடினம். ஆனால் எவ்வளவு எளிதாக அவரால் லினக்ஸைப் பற்றியும் அதுவரை நடந்த தமிழாக்க முயற்சிகளைப் பொதுஜன ஊடகத்தில் கேவலப்படுத்திக் கொண்டும், லினக்ஸ் பற்றிய குறைந்த அறிவுடனும், பல்கலைக்கழக மானியம் (மானியத்தைப் பற்றி அடிக்கடி எழுதுவதற்கு மன்னிக்கவும், பல்கலைக்கழக அங்கீகாரம் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்) பெறமுடிகிறது என்ற உண்மையை வைத்துக்கொண்டு இதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.


[1] சுஜாதா உங்கள் சுழலை (environment/product) ஆங்கீகரிக்க
தேவை என்ன?

அது முன்னோடித்திட்டங்களை சொல்வது/மறைப்பது என்பவற்றில் ஒருவர்/குழுவினர் அளிக்கும் மரியாதையைப் பொறுத்தது. மேலும் இந்தக் கேள்விக்கு என்னுடைய எழுத்துகளில் பொதுப்படையாக விடையிருக்கிறது.


[2] நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப்போல் சுஜாதா வெகுஜன ஊடகத்தில் உங்கள் products பற்றி எழுதினால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்களா? அது இப்பிரச்சனைகளை முடித்துவைக்குமா?

மன்னிக்கவும், நான் முன்னே எழுதியதைப் போல அழுகுழந்தைகளாக எங்களை எளிதில்
கேவலப்படுத்திவிடலாம். உங்கள் கேள்வி அந்த ரீதியில்தான் கேட்கப்பட்டிருக்கிறது. இது செய்யப்பட வேண்டும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியென்றால் இந்தக் கேள்வியை முதலில் அவரிடத்தில் எடுத்துச் செல்லுங்கள்.


[3] Open Source என்றாலும் அதற்கும் சில பிரத்யேக லைசன்சுகள் (like
GPL) உண்டென்பதை நானறிவேன். நீங்கள் ‘தமிழ் பி சி’ வரையறைகளை மீறியிருந்தால்,
நீதித்துறையின் உதவியை நாடலாமே?

ஐயா, நாங்கள் ஆய்வகத்திலும், அலுவலகத்திலும், கல்லூரியிலும் வேலைசெய்த நேரம்போக மீத நேரத்தை எங்கள் மனசாட்சிப்படி எங்கள் சமூகத்தவர்களுக்குப் பலன் தரும் என்று நம்பும் காரியத்தில் ஈடுபட்டிருக்கிறோம். இதற்காக எங்கள் நேரத்தைச் செலவழிக்கிறோம், பல சந்தர்ப்பங்களில் கைக்காசைச் செலவழித்திருக்கிறோம். இந்த அளவிற்கு எங்களைக் கேவலப்படுத்த வேண்டாம்.

நாங்கள் ஆதாயங்களை எதிர்பார்த்துச் செயல்படுபவர்களாக இருந்தால் நீங்கள் சொல்லும் முயற்சிகள் எங்கள் மனதிற்குத் தோன்றியிருக்கும். அந்த ரீதியில் எங்களால் சிந்திக்க முடியவில்லை.

மறுபுறத்தில் திறந்த ஆணைமூலம்/ தளையறு மென்கலன் இவற்றில் ஈடுபடுபவர்களுக்குச் சமூக ஊக்கமும், சக நுட்பர்களின் அங்கீகாரமும் தேவை (Social encouragement and Peer recognition). இந்த இடத்தில் சமூக ரீதியாகத் திரு சுஜாதாவின் இடத்தையும் அவரது கருத்துக்களுக்கு இருக்கும் மதிப்பையும், அவரை ஒருவகையில் பிதாமகராக நம் சமூகம் ஏற்றுக்கொண்டிருப்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.


[4] நீங்கள் குறிப்பிட்டுள்ள ‘உலகத் தொழில்நுட்ப மன்றத்தில்’ இதைப்பற்றிய விவாதத்தை துவங்கி
யுள்ளீர்களா?

உலகத் தமிழ்த் தொழில்நுட்ப மன்றம் ஒரு பன்னாட்டுக் கூட்டமைப்பு. இதற்கு எந்த நீதியுரிமையும்
கிடையாது, யாரையும் கட்டுப்படுத்தும் அதிகாரமும் கிடையாது. என்றாலும் இந்த நடப்புகள் நேரடியாக அவர்களுக்குத் தெரியும்.


[5] தமிழ் பி சி இணையதளத்தின் FAQ பகுதியில் அத்திட்டம் ‘பிளத்தல்’ அல்ல என்பதை தெளிவாக அளித்திருக்கிறார்களே?

பிளத்தல் அல்ல என்று ஒற்றை வார்த்தையில் சொல்லியிருக்கிறார்கள். ஏன் பிளத்தல் அல்ல என்று
அவர்களால் தெளிவுபடுத்த முடியாது. ஏன் பிளத்தல் என்று நாம் நம்புவது இந்தக் காரணங்களால்,

1. தஸ்கி, யுனிகோட் என்றும் தமிழ்நெட்99, அஞ்சல் என்றும் பலவடிவங்களில் லினக்ஸ்க்கு
விசைப்பலகைகள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. இவற்றை மீண்டும் செய்ய முற்படுவது

2. அண்ணா பல்கலைக்கழகம், உத்தமம் என்று அமைப்பு ரீதியில் பல மொழியறிஞர்களைக் கொண்டு விவாதிக்கப்பட்டு உருவான மொழியாக்க அகராதிகள் இருக்கையில் இன்னொரு அகராதியை உருவாக்குவது (அவற்றில் இருக்கும் பிழைகளைக் களைய முற்பட்டு அந்த முயற்சியில் தோல்வியடைந்திருந்தால் அதைப் பகிரங்கப்படுத்திச் சொல்லலாமே?)

3. அதிகார்வபூர்வமாக மோஸிலா, ஒப்பன் ஆபீஸ் போன்றவை மொழியாக்கம் செய்யப்பட்டுக் கிடைக்க அவற்றைத் தாங்கள் செய்வதாகச் சொல்வது.

4. ஐந்து வருடங்களாகப் பலர் ஒரு நிறுவனம் சார்ந்த அகராதியை வைத்துக்கொண்டு மொழியாக்கம்
செய்துகொண்டிருக்கும் பொழுது இன்னொரு குழு வேறு ஒரு அகராதியை வைத்துக்கொண்டு மொழியாக்கம் செய்ய முற்படுவது.

இவற்றுக்கான நேரடி விளக்கம் பிளத்தல் அல்ல என்ற ஒற்றை வார்த்தையில் கிடையாது.


ஒரு திட்டத்தைப்பற்றி விளக்கும்போது அதன் முன்மாதிரிகளைப் பற்றி விவரிப்பது அவரவரின் நேர்மையையும், மேன்மையையும் (question of ethics and honesty) சார்ந்ததுதானே தவிர
சட்டம் இல்லையே? அதை (honesty/ethics) ஏன் ஒரு தனிமனிதனின் மேல்
திணிக்க எத்தனிக்கிறீர்கள்.

நீங்கள் நிஜமாகவேதான் இந்தக் கேள்விகளைக் கேட்கிறீர்களா? நம்பமுடியவில்லை.
பொதுக்காரியத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது நேர்மையை எதிர்பார்க்க வேண்டாம் என்பதுதான் உங்கள் கருத்தா என்று புரியவில்லை. அல்லது சம்பந்தப்பட்ட தனிநபர் அந்தக் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

நேர்மையையும், நெறிமுறைகளையும் யாருக்கும் எடுத்துச் சொல்லக்கூடாது என்பதுதான் உங்கள் நிலையா? இதை எந்த ரீதியில் திணிப்பு என்று கேவலப்படுத்துகிறீர்கள்?


‘அறிவுத்திருட்டு’ என்றால் உங்கள் productன் கட்டுமானத்தையோ
(Architecture) மென்பொருள் வரி களையோ (source code) உங்கள் அனுமதியின்றி உபயோகித்திருக்க ண்டுமல்லவா? இந்த வார்த்தை கொஞ்சம் harsh and rude என்பது என் கருத்து.

நன்றி, நானே தயங்கித் தயங்கித்தான் இந்த வார்த்தையை உபயோகப்படுத்தினேன். இதை வேறு எப்படி அழைக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?

நிற்க. தமிழ்பிசி குழுவினருக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கும் அகராதியை அம்பலம் இணையத்தில் இப்படி விளம்பரப்படுத்துகிறார்கள்

Click here to Download Open Office Glossary (translated by Writer
Sujatha)

இணையத்தில் அண்ணா பல்கலைக்கழகம், இலங்கைப் பல்கலைக்கழக அறிஞர்களின் தொகுப்பு என்று பல அகராதிகள் கிடைக்கின்றன. இவற்றில் இருக்கும் பல சொல்லாக்கங்கள் பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில், அவற்றில் பிழைகள் என்று ஒருவர் கருதுவதில் மாற்றங்கள் செய்தும், இன்னும் சில வார்த்தைகளைச் சேர்த்தும் தன்னுடைய பெயரில் (எந்த சுட்டிகளையும் காட்டாமல்) அழைப்பதற்கு ஒரு பெயர் சொல்லுங்களேன்.

ஐந்தாறு வருட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதைப்பற்றி எழுதும்பொழுது திரு சுஜாதா
பயன்படுத்தியிருக்கும் வார்த்தைப் பிரயோகம் (எங்கள் திட்டம், எங்கள் குழுவினர்) பற்றிக் கொஞ்சம் சிந்தித்தீர்களா?


>The above are my personal opinion and am in no way related to ‘Tamil
P C’ nor am I an appointed defender for writer sujatha.

நன்றி,

இனி தொடர்பான என்னுடைய எண்ணங்கள் சிலவற்றுக்குப் பதிலளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

1. நீங்கள் திரு சுஜாதா தமிழில் கணினி கொண்டுவரும் திட்டங்களைக் கேவலப்படுத்தி 2000 சூலை விகடனில் எழுதியதைப் படித்திருக்கிறீர்களா?

2. 2001ல் முதன் முதல் அதிகார்வபூர்வ தமிழ் லினக்ஸ் வெளியீடு வந்தபொழுது இதைச் செய்தவர்கள் வேலைவெட்டியில்லாத வெளிநாட்டில் வசிக்கும் இளைஞர்கள் என்று பொருள்பட அதே விகடனில் எழுதியதைப் படித்திருக்கிறீர்களா?

3. இவற்றின் பின்புலத்தில் இந்த நிகழ்வுகளைப் பொருத்திப் பார்த்தீர்களா?

4. எழுத்தாளரின் (அது படைப்பிலக்கியமாகவே இருக்கட்டும்) படைப்புரிமை அவரது நேர்மையைவிட உயர்ந்ததாக மதிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

5. நான் பிளத்தல் அல்ல என்று சொல்வதை விரிவாக மறுதலிக்க முற்பட்டிருக்கிறேன். இதைப்பற்றிய உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

6. ழ-கணினி திட்டத்தில் முன்னோடி நடவடிக்கைகளை ஒரு இடத்தில் தவறவிட்டிருக்கலாம், அல்லது சுட்டிக் காட்டியபின் அதைச் சரிசெய்ய முற்பட்டிருக்கலாம் (இல்லையென்றால் ஏன் தேவையில்லை என்று அறிவிக்கலாம்). இப்படியிருக்க அவர்களுக்கு என்ன நோக்கங்கள் இருக்க முடியும் என்று நம்புகிறீர்கள்?

7. என்னிடம் கேட்டதுபோல், இந்த விவகாரத்தில் திரு சுஜாதா, மற்றும் ழ-கணினி குழுவினரின்
நடவடிக்கைகளில் ஏதாவது ஒன்றில் உங்களுக்கு ஐயமிருந்தால் அதையும் பொதுமைப்படுத்தி இங்கு எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கலாமா? (நீங்கள் ழ-கணினி சார்பற்றவர் என்று சொல்லியிருப்பதால்தான் இந்தக் கேள்வி)

8. பொதுவிவாதத்தில் ஈடுபட உங்களை நேரடியான பெயர் அறிமுகத்துடன் முன்வர அழைக்கிறேன். இதன் அவசியத்தை உணர்ந்து உங்களைப் பற்றி கொஞ்சம் தெரிவிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
வெங்கட்