invasionofbodysnatchers.png நோபல் பரிசு விஞ்ஞானி பேராசிரியர் பிரான்ஸிஸ் கிரிக்-ன் அஞ்சலியில் அவருக்கு உயிரின் தோற்றம் குறித்த செலுத்தப்பட்ட பெருவிதைப்பு என்ற கருத்தில் இருந்த நம்பிக்கையைப் பற்றி எழுதினேன். இதைத் தொடர்ந்து வந்த மெய்யப்பனுடனான கருத்துப்பரிமாற்றத்தில் Invasion of the body snatchers என்ற திரைப்படத்தைப் பற்றியும் எழுதினேன். இந்தப் படத்தை நான் முதல்தடவை பார்த்து கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டன. எனவே இன்னொரு முறை பார்க்கலாமே என்ற எண்ணம் வந்தது. அதிருஷ்டவசமாக என்னுடைய பல்கலைக்கழக நூலகத்திலேயே டிவிடி கிடைத்தது. நேற்று இரவு இதைப் பார்த்தேன்.

* * *

Invasion of the body snatchers மிகவும் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய அறிவியல் புதினங்களுள் ஒன்று. இதன் மூலக்கதை ஜாக் பின்னி (Jack Finney) என்பவருடையது. இது மூன்று முறை (1956, 1978, 1993) திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது. இவற்றினுள்ளே பிலிப் கௌவ்ப்மன் (Philip Kaufman) இயக்கிய 1978 ஆம் வருடப் பதிப்பு மிக நல்ல விமர்சனங்களைப் பெற்றது. சான்பிரான்ஸிஸ்கோ நகரில் தீடீரென மக்கள் விநோதமாக நடந்துகொள்ளத் தொடங்குகிறார்கள். எந்தவிதமான உணர்ச்சிகளும் இல்லாதவர்களாக, ஏதோ ஒரு வகையில் செலுத்தப்பட்டவர்களைப்போல இயங்குகிறார்கள். இவர்கள் மீது அரசாங்கத்தின் உடல்நலத்துறையில் வேலைசெய்யும் மாத்யூ (டொனால்ட் ஸதர்லாண்ட், Donald Sutherland), எலிஸபெத் (ப்ரூக் ஆடம்ஸ், Brooke Adams) இருவருக்கும் சந்தேகம் வருகிறது. எலிஸபெத்தின் ஆண் நண்பன் மாறிப்போகிறான். இதே சமயத்தில் நகரின் பல இடங்களிலும் விசித்திரமான, கவர்ச்சிகரமான பூ மலரத்தொடங்குகிறது. விரைவிலேயே மாத்யூ, எலிஸபெத் மற்றும் அவர்களின் நண்பர்கள் இருவருக்கும் இதன் இரகசியம் புலப்படத் தொடங்குகிறது. வேற்று கிரகத்திலிருந்து வந்த உயிரிகள் பூலோகவாசிகளின் உடலைக் கவர்ந்து அவர்களை நகலெடுக்கிறார்கள், பின்னர் இயற்கையான உடல் அழிக்கப்படுகிறது. மாற்றப்பட்டவர்களுக்கு எந்தவிதமான உணர்ச்சிகளும் கிடையாது, அவர்கள் வேறுவகையான உயிரிகளாக மாறிப்போகிறார்கள் – அந்த உலகில் வலி, துக்கம், சந்தோஷம், ஆச்சரியம் போன்ற எந்தவிதமான உணர்வுகளுக்கும் இடமில்லை. அவர்களின் ஒரே இலக்கு பிற மனிதர்களையும் மாற்றுவது. இதற்காக அவர்கள் பூக்களைக் கடத்துகிறார்கள். அந்தப் பூக்களிலிருந்து கிட்டத்தட்ட கூட்டுப்புழுவாக வெளிவரும் உயிரி, தூங்கும் மனிதர்களின் உடலில் இழைகளாகப் படர்ந்து அவர்களைக் கவர்ந்துகொண்டு உருமாறுகிறது. மாறிய உடல், பிறரையும் மாற்றத் தலைப்பட – மனிதர்கள் வேகமாகக் கவரப்படுகிறார்கள். விபரமறிந்தவர்கள் இன்னும் மாறாத பிறரால் எள்ளப்படுகிறார்கள். அவர்களது வார்த்தைகளைச் செவிமடுக்க யாரும் இல்லை.

இதை எதிர்த்துப் போராட நால்வரும் முடிவு செய்கிறார்கள். இதற்காக, காவல்துறை, அரசாங்கம், இராணுவம் என்று இவர்கள் நாடிச் செல்லும்பொழுது அங்கிருப்பவர்கள் ஏற்கனவே மாற்றப்பட்டிருக்கிறார்கள். இனி இவர்களுக்கான ஒரே வழி தாமும் உணர்ச்சியற்றவர்களாக மாறி கூட்டத்தில் கலந்துகொள்வதுதான். அந்த நிலையில் நாய் உட்பட மிருகங்கள் மாற்றப்பட்டிருப்பதைக் கண்டு அடிப்படை பயம் தலையெடுக்க அபயக் குரலெடுக்கிறார்கள். அதுவே அவர்களைக் காட்டிக்கொடுக்க, துரத்தப்பட்டுகிறார்கள். இதன் உச்சகட்ட அதிர்ச்சி மிகவும் அற்புதமாகப் படமாக்கப்படிருக்கிறது.

* * *
எழுபதுகளில் பல திறமையான அறிவியல் புதினங்கள் திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றன. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜார்ஜ் லூகாஸ், ஸ்டான்லி கூப்ரிக் போன்றவர்கள் மிகவும் பிரபலமானார்கள். திறமையான பிலிப் கௌவ்ப்மான் அதிகம் புகழ் பெறவில்லை (இண்டியானா ஜேன்ஸ் திரைப்படத்தின் திரைக்கதையமைப்பில் கௌவ்ப்மானுக்குப் பெரும் பங்குண்டு என்று சொல்வார்கள்). இவர் இயக்கிய இன்னொருபடமான மிலன் குந்தராவின் The Unbearable Lightness of Being பற்றிய என்னுடைய விமர்சனம் இங்கே). இன்வேஷன் படம் விறுவிறுப்பு குறையாமல் இயக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் நுணுக்கமான காட்சிக் கோணங்களும் சம்பவ அமைப்புகளும் இருக்கின்றன. உதாரணமாக, படம் முழுவதும் மாற்றப்பட்டவர்கள் கையில் பூவோடு மற்றவர்களை மாற்றுவதற்காக அலைகிறார்கள், அல்லது அழிக்கப்பட்ட உடல்களை குப்பைவண்டியில் போடுகிறார்கள். ஒரு இடத்தில் ஒருவர் மாற்றப்பட்டிருக்கிறார் என்பதை குறிப்பால் உணர்த்த அவர் குப்பைத் தொட்டியின் மீது சாய்ந்து நிற்பது காட்டப்படுகிறது. அதேபோல் படத்தின் நடுவில் பூக்களின் இரகசியம் கதாநாயகனுக்குப் புரிந்துபோனவுடன் தன்னையும்பிறரையும் காப்பாற்ற ஓடுகிறான், அப்பொழுது கூட்டத்தில் இருப்பவர்கள் எல்லோரும் அவனுக்கு எதிர்திசையில் பயணிக்கிறார்கள், ஏற்கனவே நிலைமை கட்டுக்கு மீறியிருக்கிறது என்பது மிகவும் அழகாகக் காட்டப்படுகிறது.

படத்தின் முக்கிய பலம், இதன் பிண்ணனி இசை. கடிகாரத் துடிப்புகள், அலறும் தொலைபேசி மணி, மேற்கத்திய சாஸ்திரீய இசை, ஜாஸ் இசை என்று படம் நெடுகிலும் திகிலை அதிகரிக்க எல்லாவகையான ஒலிகளும் துணைபோகின்றன.

* * *
திகிலும் பரபரப்பும் மாத்திரம்தான் இந்தப் படம் என்றில்லை. நம்மில் எப்பொழுதுமே (நாம் X அவர்கள்) என்ற பிரித்து வைக்கும் மனப்பாங்கு ஓங்கி நிற்கிறது. இது பனிப்போர் காலங்களில் அமெரிக்காவில் கம்யூனிஸ்ட்கள் மீதான் பயமாக இருந்தது. படத்தில் வரும் வேற்று கிரகவாசிகள் கம்யூனிஸ்ட்களுக்குப் படிமமாகிறார்கள். சித்தாந்தத்தில் கவரப்பட்டவர்கள் மற்றவர்களையும் தம்பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அரசிடமிருந்து எந்தவிதமான உதவியும் இல்லை. தனி மனிதன் தன்னைத்தானே காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான். கம்யூனிஸத்தைப் போலவே மாற்றப்பட்ட உயிரிகளிடையே தனிமனித உணர்வுகளுக்கு எந்த மதிப்புமில்லை. (ஒருவிதத்தில் கதாசிரியர் கம்யூனிஸ்ட்களை, சித்தாந்த ரீதியாக உயர்ந்தவர்களாகவும், அவர்களை எதிர்த்து கம்யூனிஸ்ட்கள் அல்லாதவர்கள் செய்ய ஒன்றுமேயில்லை என்பதைப்போலவும் சித்தரிப்பதாகத் தோன்றுகிறது).

மறுபுறத்தில் அமெரிக்காவில் எழுபதுகளுக்கு முன்னர் தலையெடுத்தாடிய மெக்கார்த்தித்தனம். பல ஹாலிவுட் கலைஞர்கள் கலகக்காரர்களாக மெக்கார்த்திகளால் முத்திரை குத்தப்பட்டு ஒழிக்கப்பட்டார்கள். மாற்றுக்கருத்துக்காரர்கள் எதிரிகள், ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற போக்கின் மீதான் விமர்சனமாகவும் படம் அமைகிறது.

* * *
இந்தக் கதையின் திரையாக்கத்தின் மூன்று வடிவங்களில் பிலிப் கௌவ்ப்மானின் 1978தான் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஐம்பதுகளில் வந்த முதல்வடிவம் ஒரு கிராமத்தில் நிகழ்வதாகக் காட்டுகிறது. ஆனால் 1978ன் சான்பிரான்ஸிஸ்கோ நகரம் இதற்கு மேலும் நன்றாகப் பொருந்துகிறது. நகரின் நெருக்கடி, ஒருவருக்கொருவர் காட்டும் அசிரத்தை போன்றவை படத்தின் கதைப் போக்கிற்கு நன்றாகவே உதவுகின்றன. தொன்னூறுகளின் வடிவம் மிகவும் மோசமானது என்று சொல்கிறார்கள்.

இப்பொழுது இதே கதையை மீண்டும் திரைப்படமாக்கும் முயற்சிகள் இருப்பதாகத் தெரிகிறது. இந்தக் காலத்தின் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் கதைக்கு மேலும் மெருகூட்டும் என்பது என் நம்பிக்கை. எத்தனை வருடங்களானாலும் இந்தக் கதை சமகாலத்தின் போக்குகளுக்குப் படிமமாக இருக்கும் என்பது நிச்சயம். (நாம் X அவர்கள்) பிரிவு மதவாதமும், ஏழ்மையும், அரசியல் வெறிகளும் மலிந்துவிட்ட இந்தக் காலத்தில் இன்னும் அதிகமாக்கிறது. எனவே மீண்டும் திரைப்படமாக வந்தாலும் நம்மால் எளிதில் இனங்காணமுடியும்.

பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகச் சொல்லி இராக்கின்மீது போர் தொடுக்கும் முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் இளையர் இப்படிச் சொன்னார். “ஒவ்வொரு தேசமும் இப்பொழுது முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது, நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள், அல்லாவிடில் தீவிரவாதிகளுடன் இருக்கிறீர்கள்”

அடிமைப்படுத்த வேற்று கிரகவாசிகள் நமக்குத் தேவையில்லை. சித்தாந்த ரீதியாக பலவழிகளிலும் நாமே பெரும்பாண்மைக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறோம்.