கடந்த இரண்டு மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை. திடீரென மாறிவரும் தட்பவெப்பநிலை (எங்க வெப்பம், தட்பம்தான், -20 செல்சியஸிலிருந்து -2 செல்சியஸ்க்கு உயர்ந்து(!) மீண்டும் -10ல் ஆடிக்கொண்டிருக்கிறது) அதன் கூடவே, பனியும், குளிர்மழையுமாக மிகவும் மோசமாக இருக்கிறது.

மனது ஒருங்கி ஒரு காரியமும் செய்ய முடியவில்லை. இந்த நிலையைப் பயன்படுத்தி, தமிழ் லினக்ஸ் இணையதளத்தை முற்றிலும் புதியதாக வடிவமைத்திருக்கிறேன். பழைய தளம் சில நாட்களுக்கு முன்பு என்னுடைய கடினவட்டில் இருந்த பிழையினால் தரவுகள் குழம்பிப் போகக் கிட்டத்தட்ட பயனற்ற நிலைக்குப் போய்விட்டது. (என்னுடைய வலைப்பதிவின் தரவுவை மீட்டெடுக்க முடிந்தது). இந்த நிலையில் அதை அதிகம் நோண்டிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக முற்றிலும் புதிதாக ஆக்கலாம் என்று முடிவெடுத்து நேற்றும் இன்றுமாக நிறைய வேலை செய்து ஒரு நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறேன். அதிலேயே நேரம் போய்விட்டது. நண்பர் பா.ரா குமுதத்தில் வந்திருக்கும் ழ-கணினி திட்டத்தைப் பற்றிய செய்தியைச் சுட்டிக்காட்டினார். எந்த புண்ணியவான் தகவலை எழுதினாரோ தெரியவில்லை, லினஸ் டோர்வால்டை அமெரிக்க மாணவர் என்று எழுதியிருக்கிறார். “… இதனை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கான ஸாப்ட்வேர்களை உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கு ஓப்பன் சோர்ஸ் இயக்கம் என்று பெயர்” என்ற ரீதியில் திறந்த ஆணைமூலத்தை வரையறுத்திருக்கிறார். வசீகரனையும் அமெரிக்கராக ஆக்கிவிட்டார்கள் (நம்மூரில் இப்பொழுது அமெரிக்கா என்று சொல்லாவிட்டால் எதுவும் விலைபோகாது போல இருக்கிறது. சென்ற முறை ஊருக்குப் போயிருந்த பொழுது அமெரிக்கா உணவான பிரெஞ்ச் ப்ரை என்னும் உருளைக்கிழங்கு குச்சிப் பொரியலைத் தின்ன நேர்ந்தது).

மற்றபடி என்ன சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை. அதுதான் டைனோ எங்கிருந்தோ புயலென வந்து என்னைப் போட்டுக் கேள்வியால் துளைத்து எடுத்துவிட்டு, பின்னர் பரிமேல் கேட்ட கேள்வியை ழ-குழுவுக்கு முன் மொழிந்து சிவக்குமார் ஒரு வார்த்தை சொன்னதுமே. “போதும், உங்களை நான் வீனாக ரொம்ப சந்தேகப்பட்டுவிட்டேன். ழ-குழுவின் உன்னத நோக்கங்கள் புரிகின்றன. நீங்கள் திறந்த முறையில் செயல்படுவது எனக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது. அவர்களின் நோக்கமும் வழிமுறைகளும் என்னை புளகாங்கிதமடையச் செய்கின்றன” என்ற ரீதியில் அவர்களுக்கு நற்சான்றுப் பத்திரம் கொடுத்துவிட்டு “இதுதாண்டா ஓப்பன் சோர்ஸ்” என்று நெத்தியடியாகச் சொல்லிவிடு. “லோகச் சேமம்தான் எனக்கு வேண்டும், நாராயண, நாராயண” என்று விண்வழியாகப் புறப்படத் தயாராகிவிட்டாரே.

எனவே, மாதம் மும்மாரிப் பெய்ந்து நாட்டிலுள்ள நல்லவர்களெல்லாம் நலமாக இருக்கக் கடவது என்று நானும் போக்கொழிய வேண்டியதுதான்.