Red Hat World Tour – Toronto
by வெங்கட் • March 31, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments
நேற்று மாலை ரெட் ஹாட் உலகப் பயணத்தின் டொராண்டோ நிகழ்வுகளில் கலந்துகொண்டேன். ரெட் ஹாட்டின் ஒரு குழு, கடந்த பதினைந்து நாட்களில் உலகை வலம் வந்திருக்கிறது. ஏழு நகரங்களில் இந்தக் குழு தங்கள் வாடிக்கையாளர்களையும், திறமூல ஆர்வலர்களையும் சந்தித்திருக்கிறது. வட கரோலினா, டர்ஹம் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட ரெட் ஹாட், நன்றாக வளர்ந்துவரும் ஒரு நிறுவனம். இதன் பங்குகள் சந்தையில் நல்ல விலைக்குப் போய்க்கொண்டிருக்கின்றன. லினக்ஸ் உலகில் ரெட் ஹாட் ஒரு முக்கியமான சின்னம். இணையத்தில் சிதறிக்கிடக்கும் லினக்ஸ் மற்றும் திறந்த ஆணைமூலங்களை ஒன்றாகத் திரட்டி ஒரு பொதியாக்கி விற்பதென தொடங்கப்பட்ட நிறுவனம் ரெட் ஹாட். இதில் என்ன விசேடம் என்கிறீர்களா? அந்த நாட்களில் (1995 வாக்கில்) லினக்ஸைப் பயன்படுத்திப் பார்த்திருந்தால் தெரியும். என்னுடைய முதல் கணினி 1995ல் நான் வாங்கிய பிரிட்டனில் வாங்கிய Gateway2000 (Pentium 75 MHz, 32 MB RAM, a whooping 640 MB hard disk). 1995 இறுதியில் அதன் ‘மாபெரும்’ 640 மெபை வட்டை இரண்டாகப் பிர்த்து, (500 மெபை – மைக்ரோஸாப்ட்டுக்கு, 140 மெ.பை லினக்ஸ்க்கு) முதன் முதலாக 1996ல் ஸ்லாக்வேர்(Slackware) லினக்ஸைப் பயன்படுத்த முயற்சித்தேன். அந்த நாட்களில் என்னுடைய கணினித் திரையைப் பார்த்து பலரும் மெய்சிலிர்த்திருக்கிறார்கள், அது 15 அங்குல முற்றிலும் தட்டையான சோனி ட்ரினிட்டான் திரை, (இன்றும் இந்தக் கணினி என் மாமா-மாமியால் பெங்களூரில் பயன்படுத்தப்படுகிறது). அந்த அற்புதமான திரையில் ஸ்லாக்வேரின் /usr/venkat# என்று அடைவைக் காட்டும் கருப்பு-வெளுப்பை நான் சிலாகித்துக் கொள்வதைப் பார்த்து எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்று பலரும் முடிவுகட்டினார்கள். ஆனால் எனக்கு யுனிக்ஸைப் போன்ற ஒரு சக்தி வாய்ந்த இயக்குதளத்தை என் இல்லத்தில் இயக்குவது ஒரு பெரிய சாதனையாக இருந்தது.
கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் போராடி, அந்த லினக்ஸில் எக்ஸ்விண்டோ-(Xwindow)வை இயக்கினேன். ஸ்லாக்வேரில் விண்டோவை வடிவமைக்க எந்தக் கருவியும் கிடையாது. பயந்துகொண்டே என்னுடைய திரையின் hsync, vertical refresh rate, போன்றவற்றின் பல எண்களைப் போட்டுப் பார்த்து, கிட்டத்தட்ட சோகையான எக்ஸ்விண்டோவைக் கண்ணால் கண்டது என் வாழ்க்கையில் பெரிய சாதனை (இதை யாருடைய உதவியும் இல்லாமல் மத்தியப் பிரதேசத்தின் குக்கிராமம் ஒன்றில் உட்கார்ந்து கொண்டு நான் செய்தது இன்றைக்கும் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. காரணம் நான் முறையாகக் கணினி பற்றி படிக்க ஒரு வகுப்பிலும் அமர்ந்ததில்லை). அந்த எக்ஸ் விண்டோவில் எனக்குக் கிடைத்த ஒரே நன்மை – என்னுடைய லேடெக் (LaTeX – Scientific Wordprocessor) ஆவணத்தை ஒரு சாரளத்தில் எழுதி, அதை இரண்டாம் சாரளத்தில் தொகுத்து, அதில் வரும் பிழைகளை மூன்றாம் சாரளத்தில் படிக்க முடிந்தது.
அதே நாட்களில் என்னுடைய கணினியின் இன்னொரு மைக்ரோஸாப்ட் பகுதியில் அற்புதமான வண்ணங்களில் பவர்பாயிண்ட் தொகுப்புகள் செய்யமுடிந்தது, ஜாலங்கள் காட்டும் திரைக்காப்புகளும், வண்ண விளையாட்டுகளும் அந்த நாட்களில் லினக்ஸில் கேள்விப்படாத விஷயங்கள்.
மைக்ரோஸாப்ட் விண்டோஸ் எவ்வளவு அழகாக இருந்தாலும், நான் கஷ்டப்பட்டு நிறுவி, நிலைப்படுத்திய லினக்ஸில் எனக்குத் தனிப்பெருமைதான்.
* * *
அடுத்த ஆறு மாதங்களில் பெங்களூர் சென்ற பொழுது ஐஐஎஸ்ஸியில் ரெட் ஹாட் லினக்ஸ் பற்றிக் கேள்விப்பட்டு, கஷ்டப்பட்டு நிறுவிய ஸ்லாக்வேரை நீக்கிவிட்டு ரெட் ஹாட் 2.0 வைப் போட்டேன். நிறுவும் பொழுதே XConfigurator கருவி மூலமாக கணினியில் எக்ஸ்விண்டோவை சேர்க்க முடிந்தது. இதைத் தவிர அச்சுப்பொறி, விசையெலி, வலையமைப்பு போன்றவற்றை நிர்வகிக்க எளிதான கருவிகளும் இருந்தன. அதுநாள்வரை, “சக்திவாய்ந்த” என்பது மாத்திரமே ஒரே அடைமொழியாக இருந்துவந்த லினக்ஸ் “எளிதான”, “அழகான” போன்ற அடைமொழிகளுக்கும் தயாராகத் தொடங்கியது.
இப்பொழுதெல்லாம் சராசரியாக ஆறு-எட்டு லினக்ஸ் கணினிகள் (வழங்கிகள், மேசைக்கணினிகள், மடிக்கணினி) என் பராமரிப்பில் இருக்கின்றன. இதுவை ஸ்லாக்வேர், ரெட் ஹார், டீபியன், மாண்ட்ரேக், சூஸி, ஜென்டூ, நாப்பிக்ஸ், மார்பிக்ஸ், பெடோரா என்று பலவகை லினக்ஸ்களையும் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை என்னுடைய ஏதாவது ஒரு கணினியில் ரெட்ஹாட்டிற்கு ஒரு நிரந்தர இடம் இருந்து கொண்டிருக்கிறது. 1993ல் தொடங்கப்பட்ட நிறுவனம் ரெட் ஹாட், 1996 முதல் அதன் பல வளர்நிலைகளை நெருக்கமாகக் கவனித்துக் கொண்டிருப்பவன் என்ற முறையில் ரெட் ஹாட்டை நிறுவிய பாப் யங்கை நேற்று சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.
தொடரும்…