• இந்தியாவும் ஆயுத ஏற்றுமதியும்

    by  • January 4, 2004 • அறிவியல்/நுட்பம் • 1 Comment

    இந்தியாவின் மீயொலி விமானச் சோதனை பற்றியும், அதன் சிறப்புகளைப் பற்றியும் கடந்த இரண்டு நாட்களாக எழுதினேன்.

    இந்தத் திட்டத்தையட்டியும், பொவில் இந்தியாவின் இராணுவத் தொழில்நுட்பத்தைத் திறம்படப் பயன்படுத்துவதைக் குறித்தும் எனது கருத்துக்கள்; சுதந்திர இந்தியாவின் ஆரம்ப நாட்களில் அது இரண்டேயிரண்டு தொழில்நுட்பங்களில் தன்னுடைய முழுத்திறமையையும் செலவிட்டது; அணுசக்தி மற்றும் விண்ணாராய்ச்சி. இவை இரண்டுமாக இந்தியாவின் மொத்த அறிவியல், தொழில்நுட்பச் செலவுத்திட்டத்தில் 65% எடுத்துக் கொள்கின்றன. இதற்குப் போகத்தான் மற்ற எல்லாமாக. அதனால் இந்தியா முக்கியமான பல தொழில்நுட்பங்களைத் தவறவிட்டது. இவற்றில் குறைகடத்தித் (semiconductor) தொழில்நுட்பம், மருத்துவம், வாகனத் தொழில்நுட்பம், கடல் நுட்பம் போன்றவை அடக்கம். அணுசக்தித் துறையின் பக்கவிளவாகவே இந்தியாவில் பொருளறிவியல் (Material Science) உருவாக்கப்பட்டது. பொருளறிவியல் மற்ற எல்லா தயாரிப்புத் துறைகளுக்கும் முக்கியமானது. அது முதன்மை கவனம் பெறாமல் போனதால் பிற தொழில்நுட்பங்கள் தேங்கிப் போய்விட்டன.

    இந்த இடத்தில் ஜப்பானின் நிலையையும் சற்று கவனிக்க வேண்டும். ஜப்பான் விண்ணாராய்ச்சி, அணுசக்தி, பாதுகாப்பு போன்ற துறைகளில் முதலில் கவனம் செலுத்தாமல் பொருளறிவியலில் தன்னுடைய திறனை அதிகரித்துக் கொண்டது. அதன் விளைவாக, உலோகவியல், பாலிமர், குறைகடத்தி, ஒளியியல் பொருள்கள் போன்ற பல உபதுறைகளில் கிட்டத்தட்ட முதன்மை பெற்றது. அதன் பின் விளைவாகவே, குறைகடத்தி மின் சாதனங்கள், கார் தயாரிப்பு, கட்டுமானம், போன்ற உற்பத்தித் துறைகளில் உலகத்தை அடக்கியாளும் திறனைப் பெற்றது. இந்தியா இதற்கு எதிர்மாறான நிலையில் இருக்கிறது. கர்னாடகத்தில் குதிரேமுக் சுரங்கத்தில் எடுக்கப்படும் இரும்புக் கணிமம் மிகவும் செழிப்பானது. இதில் பெரும்பங்கை இந்தியா நேரடியாக ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்கிறது. மறுபுறம் இந்தியாவில் பயன்படுத்தப்படும் எல்லா காகித ஊசிகளிலும் (Staplers) ஜப்பானின் மேக்ஸ்-10 என்ற ஊசிதான் பயன்படுத்தப்படுகிறது.

    இப்பொழுது அப்துல் கலாமின் தனிப்பட்ட கவனத்தாலும், பாரதீய ஜனதாவின் கொள்கைகளாலும், ஏவுகனைத் தொழில்நுட்பம் தனிக்கவனம் பெற்று வருகிறது. இந்த நிலையில் நாளைக்கு முக்கியமானதாக இருக்கப்போகிற நேனோடெக் (Nanotech), ஒளியணுவியல் (Photonics), மரபுத் தொழில்நுட்பம் (Genetic Technology), மரபு மாற்றப்பட்ட உணவுப் பொருட்கள் (Genetically modified foods), சூழியல் (Ecology) போன்ற பல துறைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இது இந்தியாவிற்கு நல்லதில்லை.

    இதற்கு எளிதான மாற்று மருந்து இருக்கிறது. இப்பொழுது ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் இந்தியா கிட்டத்தட்ட அமெரிக்கா, சீனா, இஸ்ரேல், பிரான்ஸ் உள்ளிட்ட மிகச்சில நாடுகளின் குழுவில் இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவைத் தவிர பிற நாடுகள் எல்லாம் தங்கள் தொழில்நுட்பத்தை விற்றுப் பணம் பண்ணுகின்றன. அமெரிக்காவின் பொருளாதாரத்தில் அதன் ஆயுத ஏற்றுமதி மிக முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்வளவு மூலதனத்துடன் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பத்தைத் தனக்காக மாத்திரம் சுருக்கிக் கொள்வதில் எந்தப் பயனுமில்லை (சொல்லப்போனால், இந்தியா இந்த ஏவுகனைகளை ஒருபோதும் பயன்படுத்தப் போவதில்லை). எனவே, இவற்றைச் சந்தைப்படுத்தி அதனால் வரும் இலாபத்தில் பிற தொழில்நுட்பங்களையும் பெருக்குவதுதான் ஒரே வழி.

    ஆரம்பத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கூச்சலிடும், கையை முறுக்கும், ஆனால் இதற்கெல்லாம் ஏற்றபடி வாய்ச்சவடால்களையும் எடுத்துவிடத் தயாராக இருக்க வேண்டும். போபர்ஸ் ஊழல் பிரபலமாகப் பேசப்பட்ட காலத்தில் ரேடியோ ஸ்வீடனிலிருந்து எனக்கு ஒரு புத்தகம் அனுப்பியிருந்தார்கள் “How Sweden can sell Howitzers and preach peace” என்று தலைப்பிடப்பட்ட அதில் சுவீடனின் நிலையை மிகவும் துல்லியமாக எடுத்துச் சொல்லியிருந்தார்கள். அதைப் படிக்கும் எவரும் சுவீடனின் நிலை சரியானதுதான் என்றே வாதிடத் தொடங்குவார்கள். அது போன்ற விளம்பரங்களில் முனைப்புடன் இந்தியா உலகத்திற்கு (குறிப்பாக ஏழை நாடுகளுக்கு) எப்படி உதவுகிறது என்று சொல்ல வேண்டும். உதாரணமாக, தன்னுடைய தகுதிக்கும் திறனுக்கும் மேலாக இந்தியா அகதிகளை ஏற்றுக் கொள்கிறது. ஐக்கிய நாடுகளின் அமைதிப்பணிகளுக்குப் படையுதவி அளிக்கிறது. இதெல்லாம் பன்னாட்டு மக்களை எளிதில் உணரவைக்கும் முகமான விளம்பரங்கள் தேவை. ஆயுதங்களை விற்பதால் மாத்திரமே நாம் சண்டைக்கார நாடாகிவிடுவோம் என்ற தவறான கருத்து இந்தியாவில் இருக்கிறது. ஸ்வீடனின் ஆயுத ஏற்றுமதி-மக்கள்தொகை வீதம் (Arms Export – Population Ratio) உலகிலேயே இரண்டாவது இடத்திலிருக்கிறது. என்றாலும் சுவீடனை ஒருவரும் சண்டைக்கார நாடு என்று சொல்வதில்லை. மறுபுறத்தில் தன்னுடைய சக்தி வாய்ந்த ஆயுதங்களை விற்காமல் இருந்தாலும் இந்தியாவை எல்லோரும் சந்தேகக் கண்களோடுதான் பார்க்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் தன்னுடைய அமைதிப்பணிகளை இந்தியா போதுமான அளவில் விளம்பரப்படுத்துவதில்லை.

    இந்தியாவின் கையில் காசாக்கக் கூடிய தொழில்நுட்பங்கள் மிகவும் குறைவாகத்தான் இருக்கின்றன. (மனித வள ஏற்றுமதி அழிவைத்தான் தரும்). அவற்றுள் முதன்மையானது கட்டுப்படுத்தப்படாத ஆயுதத் தொழில்நுட்பம். இதை நேர்மையான, திறந்த வழியில் மேற்கொள்வதுதான் இந்தியாவிற்கு தொலைநோக்கில் நன்மை தருவதாக இருக்கக்கூடும். அமைதி விரும்பி என்று வெறும் வார்த்தைகளில் சொல்லிப் புண்ணியமில்லை.

    One Response to இந்தியாவும் ஆயுத ஏற்றுமதியும்

    1. prabhu
      January 7, 2004 at 2:17 am

      இரு நாட்களாக நேரமின்மையால் இக்கட்டுரைகளை தவறவிட்டாலும் ‘மீயலி’ என்ற வார்த்தை என்னை படுத்திக் கொண்டே இருந்தது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் டைம்ஸில் அட்டைப்படக் கட்டுரையாகவும் அதனையட்டி நமது வீக்கிலும் அட்டைப்படக் கட்டுரையாக ‘அதிவிரைவு கடத்தி’யினை (super conductor) கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளில் ஏற்பட்ட பெரும் முன்னேற்றத்தையும் அதில் ஈடுபடுத்தப்படும் முயற்சிகளைப் பற்றியும் எழுதியிருந்தார்கள். அதிவிரைவுக் கடத்திகளால், பத்து ஆண்டுகளில் உலகின் போக்குவரத்தும், பொருளாதாரமும் பெரும் வளர்ச்சியுறும் என்ற தொனியில் எழுதப்பட்டிருந்த அக்கட்டுரைகள் மாணவர்களாகிய எங்களிடத்தில் பெரும் ஆர்வத்தை உண்டு செய்தது. முக்கியமாக, அமெரிக்கா, ஜப்பானுக்கு நிகராக நீங்கள் படித்த ஐ ஐ எஸ்ஸில் செய்யப்படும் ஆராய்ச்சிகளைப் பற்றியும் எழுதியிருந்தார்கள். என்னவாயிற்று அதிவிரைவு கடத்திகள். அவை கண்டுபிடிக்கப்பட்டதாக அறிகிறேன். ஜப்பானில் ரயில் கூட ஓடுகிறது என நினைக்கிறேன். இந்திய ஆராய்ச்சி என்னவாயிற்று? ஏனெனில், இந்தியாவில் இன்னமும் நம்பகத்திற்குரிய போர் விமானமோ அல்லது அதிநவீன டாங்குகளோ செய்யப்படவில்லை. இதற்கு பணத் தேவைதான் காரணமா? அல்லது வேறு காரணங்களா? நாற்பதுகளிலேயே அமெரிக்காவும், ஜப்பானும் வைத்திருந்த விமானம் தாங்கி கப்பல்களை நாம் ஏன் இன்னமும் உருவாக்கவில்லை? இந்த நவீன ஆயுதங்களை உருவாக்குவதில் பேடண்ட் பிரச்னை உள்ளதா? இதைப் பற்றியும் எழுதினால் நலம். அதே சமயம் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சூப்பர் கம்பியூட்டர் தொழில்நுட்பத்தை நமக்கு அமெரிக்கா தடை செய்த பொழுது…ஏதோ பிரளயமே வந்து விட்டதைப் போல தோற்றம் இருந்தது. தற்போது நம்மிடம் அதற்கு பேரனான கணணிகள் கூட இருக்கிறது என அறிகிறேன்.

      உங்கள் வலைப்பதிவில் எதிர்வினைகள் பக்கத்தில் வாக்கியங்கள் ஒன்றன் மீது ஒன்று படர்ந்து தெரிகிறது. எனக்கு மட்டும் இப்படியா இல்லை மற்றவர்களுக்குமா?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *