எல்லா சுவாரசியமான விஷயங்களைப் போல இதுவும் முடிவுக்கு வந்துவிட்டது. Jeopardy நிகழ்ச்சியில் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டு வந்த கென் ஜென்னிங்க்ஸின் இன்னிங்க்ஸ் பத்து நிமிடங்களுக்கு முன்பு முடிந்துவிட்டது.

இன்றைக்கு ஆரம்பத்திலிருந்தே தன்னுடைய வழக்கத்துக்கு மாறாக ஊதாரித்தனமான பந்தயங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். எல்லோரும் எதிர்பார்த்தது போலவே, கென்னின் முடிவும் Final Jeopardy பதிலில்தான் இருந்தது. “Most of this firm’s 70,000 seasonal white-collar employees work only four months a year.” என்ற பதிலுக்கு கென் Fed-ex என்று விடையளிக்க அவருடன் போட்டியிட்ட பெண் (மூன்றாவது நபர் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகவில்லை). சரியான கேள்வி “What is H-R Block?” H-R Block வருமான வரி தயாரிப்பில் உதவும் நிறுவனம், வருடத்தில் வரிகட்டும் நாட்களில் மாத்திரம்தான் இவர்களுக்கு அதிகம் ஆள்தேவை. வெற்றி பெற்ற பெண் (பெயரெல்லாம் யாருக்குத் தெரியும், இனி அவர் கென் ஜென்னிங்ஸை வென்றவர் என்று மாத்திரமே அறியப்படுவார்), பந்தயத் தொகையாக இறுதிப் போட்டிக்கு முன் கென்னிடம் இருந்ததை விட ஒரு டாலர் கூட வைத்திருந்தார். கென் கிட்டத்தட்ட நாலாயிரம் டாலர்கள் இழந்த நிலையில் தன்னுடைய வெற்றிப் பயணத்தை முடித்துக் கொண்டுவிட்டார்.

பாதகமில்லை; மொத்த வருமானம், 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இது தொலைக்காட்சிப் போட்டிகளில் தனிநபர் சம்பாதித்த அதிகபட்ச தொகை. இவ்வளவு பணத்துக்கும் ஹெச். ஆர் பிளாக்காரர்கள் உதவியில்லாமல் எப்படி வருமான வரி கட்டப்போகிறாரோ தெரியவில்லை. ஒரு விதத்தில் இது ஹெச். ஆர் பிளாக்குக்கு நல்ல விளம்பரம்.