இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தீபாவளி எப்பொழுதும் மனதில் இனிய நினைவுகளைத் தோற்றுவிக்கக் கூடியது. இனிப்பும், புத்தாடைகளும், மினுமினுக்கும் பட்டாசுகளுமாக நாமும் நம் மனிதர்களும் கவலைகளைச் சற்றே புறந்தள்ளிவிட்டு மகிழ்ந்திருக்கும் நாள் இது. இறைநம்பிக்கை, மூடநம்பிக்கை, இன்னபிற்வற்றை ஒதுக்கிவைத்துவிட்டு நம்முடைய சகமனிதர்களிடமிருந்து தொற்றும் சந்தோஷத்தை முழுமையாக மறுதலிப்பவர்கள் அடிமனதில் கொடூரர்களாகத்தான் இருக்க வேண்டும்.

சிறிய வயதில் தீபாவளி எத்தனையோ கனவுகளையும் கூடவே ஏமாற்றங்களையும் கொண்டுவரும். கொள்கை ஒன்றுக்காக என் அப்பா நிமிர்ந்து நிற்க, கோழைகளின் குலத்தில் பிறந்தவர் என்பதை ஆயுதமாகக் கையிலெடுத்துவேலை செய்த தனியார் பள்ளியின் நிர்வாகியால் வெற்று வேட்டியுடன் மனைவி குழந்தைகளுடன் ஊரைவிட்டு ஓட்டப்பட்டார். அப்பொழுது நான் பிறந்திருக்கவில்லை. அம்மா சொல்வாள்; “ரொம்பநாள் கழிச்சு ஆத்துல ஒரு பட்சணம் பண்ணியிருந்தது, அதை எறக்கிக் கீழ வச்சு, கொழந்தேள் வாயில ஒரு விள்ளல் போடல, இவர் கெளம்புடீன்னார்”. உயிருக்குப் பயந்து குடும்பத்துடன் அப்பா ஓடியது – தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பு. வாங்கிவைத்திருந்த புதுத்துணியும், வேகவைத்திருந்த அரிசியையும் முன் வாசல் தாழிடப்பட்ட வீட்டில் கிடத்திவிட்டுப் புறக்கடை வழியாக ஓடி ஏறிய பேருந்து கும்பகோணத்தில் நின்றது. பின்னர் வாழ்க்கை அங்கும் அடுத்த கிராமங்களிலும்.

சிறிய வயதில் ஒவ்வொரு தீபாவளியும் ஒரு திகில் படம்தான். இந்தவருடம் புதுச்சட்டை கிடைக்குமா? நூறு பிஜிலி வெடி வாங்கினா அண்ணா ரெண்டுபேரும் முப்பத்தஞ்சு முப்பத்தஞ்சு எடுத்துண்டு நம்க்கு முப்பதுதான் தருவா. இப்படித்தான் எனக்கு விபரம் தெரிந்த முதல் சில தீபாவளிகள் கழிந்திருக்கின்றன. அடுத்த வீட்டில் தஞ்சை மாவட்டக் கூட்டுறவு மையத்தில் சிவப்புக் கலரில் அச்சடித்துத் தரப்பட்ட பட்டாசுப் பட்டியலில் குறைந்தபட்சம் நூறு ரூபாய்க்காவது நிறையும்.

இடையில் ஒரு தீபாவளி, ஏழு அல்லது எட்டு வயது என்று நினைவு; “இந்த வருஷம் அப்பாவுக்குப் பணம் கெடக்கலை, அதுநால ரெண்டு வாரத்துல கார்த்திக்குப் புதுசு எடுத்துத் தர்ரேன்” தீபாவளிக்கு முதல் நாள் அம்மாவிடமிருந்து கடைசி வார்த்தை வந்தது. அந்தத் தீபாவளி அவ்வளவுதான் என்று நினைத்திருந்தோம். நாகத்து மாமிக்கு என் மூலம் சாயந்தரம் விஷயம் தெரியவர “நன்னா இருக்குடீ, கொழந்தேள் இருக்கெற ஆத்துல எழவு வந்தாமாரி பழசப் போட்டு பண்டிகையும் அதுவுமா நிக்க வைப்பாளா?” “இல்லேடி நாகம், அவருக்கு பணம் தர்ரேன்னு சொல்லியிருந்தவா தீபாவளி கழிச்சுதான் சொல்லிட்டா”. அவருக்குப் பணம் தர்ரேன்னு சொல்லியிருந்தவர்கள் வீட்டில் என் அப்பா செய்த மைசூர்பாக்கும், ஜாங்கிரியும் தீபாவளியை நிறைத்திருக்கும். பள்ளிக்கூட வாத்தியாருக்கு பண்டிகைச் செலவை கைகட்ட பரிஜாரகன் வேலைகூட உண்டு. (கோடையில் புத்தகம் பைண்டு செய்யும் வேலை, விளம்பரப் பலகை எழுதும் வேலை, இப்படி அவர் கையிலெடுக்காத வேலையே கிடையாது).

“செரிடீ, விக்கிண்டு நிக்கறதுடி கொழந்தேள். நாங்கள்லாம் வேத்து மனுஷாளாப் போய்ட்டோமா, ஒரு வார்த்த சொல்ல மாட்டியோடி”

“அதில்லேடி, தருவான்னு கடன ஒடன வாங்கி, நெறச்சு வைச்சா, இதுகளுக்கு கஷ்டம்தெரியாமப் போயிடுமோன்னோ. இல்லேன்னா, இல்லன்னு இருக்கத் தெரிஞ்சுக்கனுமோல்யோ”

“போடி போக்கத்தவளே, பண்டிகெலதான் பசங்களுக்கு கஷ்டம் சொல்லித்தர்ராளாம்”. அன்று இரவு நாகத்து மாமியின் ஆத்துக்காரர் ஹோட்டல் மூடி வரும்பொழுது டவுசருக்கும் சட்டைக்கும் துணி வந்தது. அந்தக் காலங்களில் ரெடிமேட் எல்லாம் கிடையாது. மறு நாள் டிராயர் துணியை இடுப்பில் கட்டிக்கொண்டு, மேலே அர்ணாக்கயிறை இழுத்துவிட்டுக்கொண்டு ஒலை வெடி வெடித்தபொழுது வந்த சந்தோஷத்தை என் வாழ்வில் இன்னொரு தீபாவளி கொண்டு வரப்போவதில்லை.

* * *

அதுதான் முதலும் கடைசியும், கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை விருத்தியடைந்து கொண்டு வந்தது. பின்னர் 1985 – பம்பாயில் குப்பை கொட்டப் போன பெரியண்ணா உருப்படியாகக் குப்பை கொட்டியிருந்த முதல் வருஷம்; மூன்று வருட டிப்ளோமா படித்து இரண்டாவது அண்ணா வேலை தேடிக்கொண்ட முதல் வருஷம்; குடும்பத்திலேயே முதன் முதலாக எம். எஸ். ஸி படிக்க நான் தலைப்பட்டிருந்த வருஷம் (குடும்பத்தின் முதல் டிகிரி என் மூத்த அண்ணாதான்). எப்படியாவது நாங்கள் மூன்று பேரும் தலைக்கு ஒன்றாக ஒரு புடவை வாங்கிக் கொடுத்து என் அம்மாவைத் திணறடிப்பது என்று ஒப்பந்தம். அண்ணா இருவரும் சின்னாளப்பட்டி புடவையும், கோடம்பாக்கம் புடவையும் வாங்குவது என்று; நான் சுங்குடிப் புடவை.

ஆனால் கடைசியில் திணற அடித்தவள் அவள்தான்; கஷ்டத்தில் எப்படி வாழ்க்கை நடத்துவது என்று சொல்லிக் கொடுத்துவிட்டு, சந்தோஷம் எப்படி இருக்கும் என்றே தெரியாமல் போய்ச் சேர்ந்தாள்.

* * *

இரண்டு பையன்களையும் அவர்களுக்குப் பிடித்த வெவ்வேறு ஷாம்புக்களைப் போட்டு தலைக்குளிப்பாட்டித் துவங்கிய தினம், என்னமோ இப்படி கனத்துப்போய் முடிகிறது.