• கனேடியத் தேர்தல் – 1

    by  • June 17, 2004 • கனடா • 0 Comments

    canada_votes.pngநடந்து முடிந்த இந்தியத் தேர்தல் வரவிருக்கும் அமெரிக்கத் தேர்தல் இரண்டுக்கும் இடையே கனடாவில் தேர்தல் வருகிறது. வரும் ஜூன் மாதம் 28ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலைப்பற்றி கனேடியரல்லாதவருக்கான அறிமுகம் இது. இதைத் தொடர்ந்து இந்தத் தேர்தலில் முக்கிய பிரச்சனைகள், எதிர்ப்பார்ப்புகள், முக்கியமாக இதில் புலம்பெயர்ந்தவர்களின் நிலை என்ன என்பதைப் பற்றி எழுத உத்தேசம். பொதுவாக கனடாவைப் பற்றி பிற நாட்டு பத்திரிக்கைகள் அதிகம் எழுதுவதில்லை. மிகவும் முதிர்ச்சியடைந்த ஜனநாயகம் நடக்கும் இந்த நாட்டில் பிரச்சனைகள் குறைவு. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளைப் போல பிற நாட்டு விவகாரங்களில் கனடா நேரடியாகத் தலையிடுவது மிகவும் குறைவு என்பதால் கனடாவைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் பிற நாடுகளுக்கு இல்லை என்று தோன்றுகிறது. பெரும்பாலான பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளைப்போலவே கனடாவிலும் பாராளுமன்றம் கீழ், மேல் சபைகளாலானது. இவற்றில் மேல்சபை உறுப்பினர்களை குடிமக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுப்பதில்லை. இவற்றில் கீழ் சபையான குடிமக்கள் சபைக்குத்தான் இந்தத் தேர்தல். மொத்தம் 308 இடங்களில் (கடந்த முறை 301லிருந்து தொகுதிகள் இப்பொழுது அதிகரிக்கப்பட்டுள்ளன), பாதிக்கு மேலான இடங்களைப் பெறும் கட்சி ஆட்சியில் அமரும் (கிட்டத்தட்ட இந்தியாவைப் போலவே). ஆளும் கட்சி பெரும்பாலும் தன் கட்சி உறுப்பினர்களாலான மந்திரி சபையைத் தேர்ந்தெடுக்கும். இரண்டுக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் இருப்பதால் ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி “மாட்சிமை தாங்கிய அரசியின்(அங்கீகாரம் பெற்ற) எதிர்க்கட்சி” என்ற நிலையைப் பெறும். இதன் தலைவருக்கு மந்திரிகளை ஒத்த சலுகைகள் உண்டு. கட்சி சார்பில்லாமல் சுயேச்சையாகவும் போட்டியிட முடியும்.

    கனடாவில் மொத்தம் 13 மாநிலங்கள் இருந்தபோதும் ஒன்டாரியோ (106), க்யூபெக் (75), இரண்டு மாநிலங்களிலுமாக ஆகமொத்தம் 181 தொகுதிகள் (மொத்தம் 308ல்) இருக்கிறன. இதற்குக் காரணம் ஜனத்தொகை இந்த இரண்டு மாநிலங்களிலும்தான் அதிகம் (சொல்லப்போனால் அதிகம் புதிய குடிவரவாளர்கள் இருக்கும் டொராண்டோ நகரை உள்ளடக்கிய ஒன்டாரியோவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறைவுதான்). எனவே இந்த இரண்டு மாநிலங்களிலும் வெற்றி பெற்ற வேண்டியது ஆள ஆசையுள்ள கட்சிக்கு முக்கியம். நுனாவெ, வடமேற்கு மாகாணம், யூகான் என்ற மூன்று வடக்கு மாநிலங்களுக்கும் தலா ஒரு பாராளுமன்ற உறுப்பினர்தான்.

    * * *

    கனடாவின் தற்பொழுதைய தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகள் நான்கு; தற்பொழுதைய ஆளும்கட்சியான லிபரல், எதிர்க்கட்சியான கன்ஸர்வேட்டிவ் இவர்களுடன் கூட ந்யூ டெமாக்ரடிக் கட்சி மற்றும் பார்ட்டி க்யூபெக்வா. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனிக்கட்சிகளாக இருந்த கன்ஸர்வேட்டிவ் கட்சியும் மேற்கில் செல்வாக்கு பெற்ற அலையன்ஸ் கட்சியும் ஒன்றாக இணைந்துவிட்டன. கிட்டத்தட்ட பதினோறு வருடங்களாக லிபரல் கட்சி கனடாவை ஆண்டுவருகிறது.

    தற்பொழுதைய பிரதமராக இருப்பவர் பால் மார்ட்டின், இவர் ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள்தான் ஆகிறது. இதற்கு முந்தைய பிரதமர் ழான் க்ரெட்ச்யென் பத்துவருடங்கள் ஆட்சி செய்துவிட்டு விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார். பால் மார்ட்டின் க்ரெட்ச்யெனின் சபையில் நிதியமைச்சராக இருந்தவர். கடந்த தேர்தலுக்குப் பிறகு பிரதமராக வர ஆசை கொண்ட மார்ட்டினுக்கும் க்ரெட்ச்யெனுக்கும் நீண்ட பனிப்போர் நடந்தது. ஒருவழியாக பால் மார்ட்டினைச் சோர்வடையச் செய்துவிட்டு க்ரெட்ச்யென் நாற்காலியைக் காலி செய்து கொடுத்தார். இப்பொழுதைய பாராளுமன்றத்தில் கட்சிகளின் நிலவரம்:

    லிபரல் – 170,
    கன்ஸர்வேட்டிவ்-அலையன்ஸ் – 72
    பார்ட்டி க்யூபெக்வா – 33
    ந்யூ டெமாக்ரடிக் – 14

    லிபரல் கட்சிக்கு வசதியான பெரும்பான்மை இருக்கிறது. இதில் தனித்தனியே போட்டியிட்ட கன்ஸர்வேட்டிவ் கட்சியும், அலையன்ஸ் கட்சியும் பாராளுமன்றத்தில் தனியாகவே இருந்திருந்தால் லிபரலுக்கு எதிர்ப்பே இல்லாமல் போயிருக்கும். லிபரல் ஆட்சியும் நன்றாகவே நடந்து வருகிறது. புள்ளிவணி குமிழ் உடைந்து அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் பொருளாதாரம் சரிந்துகொண்டிருக்கும்பொழுதும், ஐரோப்பிய இணைப்பால் பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் திண்டாடும்பொழுதும், கனடா ஒரு நாட்டில்தான் G7 நாடுகளுக்குள்ளே நிலையான, (மெதுவாக) வளர்ந்துவரும் பொருளாதாரம் இருக்கிறது. தெற்கே அமெரிக்காவை இஸ்லாமியர் தொடங்கி பிரெஞ்சுக்காரர்கள் வரை எல்லோரும் வெறுக்கும் சமயத்தில் கனடாவிற்கு கிட்டத்தட்ட எதிரிகளே கிடையாது என்று சொல்லலாம்.

    * * *

    ஆனால் இப்பொழுது….

    நிலை தலைகீழாக மாறி வருகிறது. தற்பொழுதைய கணிப்பின்படி கன்ஸர்வேட்டிவ் ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏன்?

    அடுத்ததாக, கட்சிகள், கொள்கைகள், தலைவர்கள்…

    0 Responses to கனேடியத் தேர்தல் – 1

    1. Radhakrishnan
      June 18, 2004 at 4:19 am

      Payanulla thagavalgal.Aduththa pathivai ethirnookukiraen.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *