இராணுவ ஆராய்ச்சியை மீட்டெடுக்க சில வழிமுறைகள்

1. இராணுவ ஆராய்ச்சியையும் ஆயுத உற்பத்தியையும் தனித்தனியே பிரிக்க வேண்டும். ஆராய்ச்சி மிகச் சிறிய குழுக்களைக் கொண்டதாகவும், துல்லியமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் வரையறுக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். இது நோக்கம் தவறி இலக்குகள் தாமதப்படுவதை தவிர்க்க உதவும்.

2. அணுசக்தி நீர்மூழ்கி (Nuclear Submarine), இலகுப் போர்விமானங்கள் (Light Combat Aircraft) போன்ற மாபெரும் திட்டங்களுக்கு அணுசக்தி/விண்ணாராய்ச்சி, பல்கலைக்கழகங்கள், இராணுவ, விமான, கடற்படையைச் சேர்ந்த திட்ட மேலாளர்கள் போன்றவர்களைக் கொண்ட குழு தனியே பிரிக்கப்பட்டு முழுச் சுதந்திரத்துடன் இயங்கவிட வேண்டும்.

3. இப்படி பலதரப்பு அறிஞர்களைக் கொண்ட குழுவிற்கு துல்லியமான காலக்கெடு வரையறுக்கப்பட வேண்டும். அந்த நிலையில் நான் இராணுவம், நீ விஞ்ஞானி போன்ற ஆணவங்கள் தலையெடுக்காமல், குழுவின் ஒட்டுமொத்த வெற்றி தோல்வி என்ற வகையில் செயல்பட உதவும். இதற்கு முன்னுதாரணமாக அமெரிக்காவின் மான்ஹாட்டன் திட்டத்தைச் சொல்லலாம்.

முதல் அணுகுண்டு உருவாக்கும் குழுவில் ராபர்ட் பெர்க்லி பல்கலைக்கழகத்திலிருந்து ஓப்பன்ஹைமர், பிரின்ஸ்டனிலிருந்து ரிச்சர்ட் ·பெய்ன்மான், கொலம்பியாவிலிருந்து என்ரிக்கோ ·பெர்மி போன்ற முதல்தர விஞ்ஞானிகள் பொறுக்கியெடுக்கப்பட்டு லாஸ் அலமோஸ், ஓக்ரிட்ஸ் தேசிய ஆய்வகங்கள், இராணுவ அதிகாரிகள் போன்றவர்களுடன் இணைத்து தனியே விடப்பட்டார்கள். அதன் விளைவுதான் இன்றைக்கு அணுசக்தியில் அமெரிக்காவின் முதன்மை.

4. அரசியல்வாதிகளின் விருப்பங்களுக்கேற்றபடி அகலக்கால் விரிக்காமல் ஒன்றிரண்டு திட்டங்களை மாத்திரமே இலக்காகக் கொண்டு ரா.ஆ செயல்பட வேண்டும். அந்த நிலையின் பணம், சக்தி போன்றவை விரயமாகாமல் தடுக்கப்படும்.

5. முதல் கட்ட இலக்குகளாக, சிறிய ஆளற்ற உளவு விமானங்கள், இலகு டாங்கிகள், ஹெலிகாப்டர்கள் போன்ற சிறிய திட்டங்களை அடையாளம் காணவேண்டும். இந்தத் திட்டங்களுக்கு மற்ற நாடுகளிடையே வருங்காலத்தில் தோன்றவிருக்கும் சந்தையைத் துல்லியமாக உணரவேண்டும். (உதாரணமாக, அமெரிக்கா ஹெலிகாப்டர்கள் உற்பத்தியில் ஆர்வம் காட்டாது, மாறாக LCA போன்ற திட்டங்களில் அதனுடன் போட்டிபோடுவது இயலாத காரியம். நாம் எவ்வளவு கஷ்டப்பட்ட சொந்த LCA-வை வடிவமைத்தாலும், பாக்கிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து பெறக்கூடிய ஒற்றை LCA நம்மைச் சமாளிக்கப் போதுமானதாக இருக்கும்).

சிறிய ஆயுதங்களில் இந்தியா தனக்கென ஒரு தனியிடத்தை, அசைக்கமுடியாத சந்தையை (niche market) உருவாக்குவது அவசியம். இதற்கு உதாரணமாக, ஸ்வீடனின் ஹோவிட்ஸர்களையும் ப்ரேஸிலின் ஹெலிகாப்டர்களையும், இஸ்ரேலின் ஏவுகணைகளையும் சொல்லலாம்.

5. ஆயுத உற்பத்தியை, ஆயுத ஆராய்ச்சியிலிருந்து பிரித்தெடுக்க வேண்டும். இது அளவுக்கு அதிகமான இராணுவத்தினர் தொழில்நுட்ப ஆராய்ச்சியின் ஆரம்ப கட்டங்களில் தலையிடுவதைத் தவிர்க்க உதவும்.

6. ஆயுத உற்பத்தியை மிக நெருக்கமான தரக்கட்டுப்பாடுகளை வரையறுத்து, அதற்கு ஒப்ப திறமையான, இரகசியத்தைக் காக்க வல்ல, தனியாரிடம் விடவேண்டும். இது ஒன்றே இந்தியா ஆயுத இறக்குமதியைக் குறைக்கும் வழி.

இன்றைய தினத்தில் உலகின் எந்த நாடுகளிலும் பொதுத்துறையில் ஆயுத உற்பத்தி பெருமளவில் நடப்பதில்லை. இந்த உண்மையை இந்தியா அறிந்துகொள்வது அவசியம்.

7. சராசரி தளவாட உற்பத்தி ஊழியர்கள் இப்பொழுது போர்வீரர்களுக்கு ஒத்த சலுகையைப் பெறுகின்றனர். பொதுவில் இராணுவ ஊழியர் என்ற பட்டையைக் கட்டிக்கொண்டு, இவர்கள் சலுகைவிலையில் மளிகைச் சாமான்கள் தொடங்கி, முழு மருத்துவ வசதி, இலவச மிலிட்டரி ரம் வரை தேவையில்லாமல் அரசாங்கத்தைச் சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள். உற்பத்தி தனியார் மயமானால் இதுபோன்ற செலவீனங்கள் குறையும்.

8. தனியார் துறையில் ஆயுத உற்பத்தியை செலுத்தினால், இராணுவம் அதை மேற்பார்வையிடும் உரிமையை வைத்திருக்க வேண்டும். அந்த நிலையில் உள்வரும் /வெளிச்செல்லும் தொழில்நுட்பங்கள் இராணுவத்தின் வழியாகவே செல்ல வேண்டும் என்று வகுக்க வேண்டும்.

9. தனியார் துறை ஆயுத உற்பத்தி, சில நாட்களில் தொடர்புள்ள நுட்பங்கள் சராசரி பயனுக்கு மாறவும் உதவும். உதாரணமாக தீப்பிடிக்காத உடைகள், பலநாள் கெடாத உணவுச் சேமிப்பு போன்றவைகளில் தொடங்கி இணையம் வரை முதலில் இராணுவத்தின் பயனுக்கென கண்டுபிடிக்கப்பட்டு தரையிறங்கி சராசரி நுகர்வோர் பயன்பாட்டுக்காக வந்த தொழில்நுட்பங்கள் எண்ணற்றவை. இதுமாதிரியெல்லாம் இந்தியாவில் எதுவும் நடப்பதில்லை. இது சராசரி மனிதனின் வரிப்பணம் ஒருவகையில் இராணுவம் கடந்து அவனுக்கே திரும்ப வர வழிசெய்யும். தனியார் உற்பத்தியில் மாத்திரமே இந்தியாவில் இது சாத்தியப்படும் என்று தோன்றுகிறது.

நான் மேலே சொல்லியிருப்பவை பெரும்பாலும் ரா.ஆ -யை முன்வைத்திருந்தாலும் அணுசக்தி, விண் ஆராய்ச்சி போன்றவற்றுக்கும் இது ஓரளவுக்குப் பொருந்தும்.

Popularity: 3% [?]

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

No comments yet.

Leave a comment

(required)

(required)