நாத்திகம் பயில்? -2

நாத்திகம் பயில்? என்று தலைப்பிடப்பட்ட என்னுடைய குறிப்பிற்கு கார்த்திக் எழுதிய சில கருத்துகளுக்கு என்னுடைய பதில்கள் :

கொஞ்சம் சிரமத்தைப் பார்க்காமல் அருள் செல்வனின் நாத்திகம் பயில் (கேள்விக்குறி இல்லாமல்) வலைக்குறிப்பைப் படித்துவிட்டு வந்துவிடுங்கள்.

{அருள் சிக்கிரம் திரும்பி வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்கள், கொஞ்சம் பெண்முதல் சமுதாயங்கள், தந்திரம், சார்வாகம், சாங்கியம், அதர்வண வேதம், நம்மாழ்வார், தேபிப் ரஷோத் சட்டோபாத்யாயா, ராதாகிருஷ்ணன், என்று ஜாலியாகப் பேசிக்கொண்டிருக்கலாம். வெட்டிப் பேச்சு என்று சொல்லிவிடாமல் இருக்க, இடையிடையே சீரியஸாக அஷ்டாங்க யோஹா, குண்டலினி, வாஸ்து, விசிறி சாமியார், விளக்குமாத்து மாதா என்று நாட்டுக்கு உருப்படியான விஷயங்களையும்தான்}.


ஞானிகள் எல்லோரும் கடவுளுக்கு ப்ரோ? அது ஏன்? அல்லது ஓரிறைக் கொள்கைக்காவது -ப்ரோ. அதாவது இறையின் மீதும், இறைக்கொள்கை மீதும் சார்புடையவர்களாக எளிதில் காணலாம். யாரை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். பக்கம் பக்கமாக எழுதியிருப்பார்கள் அல்லது இறையைப் பற்றி நிறைய விளக்கங்களைப் பேசி, அவற்றை அருகிலிருப்ப்வர்கள் எழுதியிருப்பார்கள்.

பக்கம் பக்கமாக எழுத வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு. எனென்றால் நிரூபிக்க வேண்டிய சுமை (Burden of Proof) அவர்களுக்குத்தானே. ஆத்திகம் – நாத்திகம் இரண்டும் கற்பிதங்களில் இருக்கிறது என்று சொல்பவர்களுக்குத்தான் எங்கே/ஏன்/எதற்கு/எப்படி/எத்தனை போன்று பல கேள்விகளுக்கு விடையளித்தாக வேண்டிய கட்டாயம். இல்லாதவர்களுக்குப் பக்கம் பக்கமாக எழுதவேண்டிய கட்டாயம். பக்கம் பக்கமாக எழுதப்பட்டனவற்றுள் பிழையாக இருக்கும் ஒற்றை வாத்தத்தை நிரூபித்தாலே போதும், அது தகர்ந்து போகிறது.

படிப்படியாக அரிசியை வடித்துக் கொட்டுகிறார்கள், ஆனால் அவனோ பசியில்லை என்று எழும்பிப் போகிறான். யாரிடம் தவறு?


நாத்திகர்களில் யாரவது ஞானி உண்டா? அப்படியே உண்டு என்று சொன்னால், அவர் வாழ்வின் மிக உயர்ந்த நிலையாகிய , விடுபட்டத் தன்மையை இந்த அளவுக்கு பேசியோ எழுதியோ உள்ளனரா, என்பது மிகவும் யோசிக்க வேண்டிய கேள்வி. ஆனால் அவசியக் கேள்வி.

நாத்திகர்களில் ஞானிகளுக்குத் தேவையில்லை. ஏனென்றால் அவர்கள் இவ்வுலகில் கண்கூடாகத் தெரியும் விடயங்களைத் தாண்டிக் கற்பிதமாக ஒரு கேள்வியை வரையறுத்துக் கொள்வதில்லை. நீங்கள் தினசரி வாழ்வியல் விஷயங்களைச் சொல்வதற்கு சிந்தனையாளன் தேவையில்லை என்று சொல்கிறீர்கள். நாத்திகம் அதைத் தாண்டிய கேள்விகளின் தேவையின்மையை வலியுறுத்துகிறது. கேள்வியே தேவையில்லை என்று அவர்கள் சொல்லும்பொழுது அந்தக் கேள்வி ஒரு அற்புதமான சிந்தனை என்று ஆத்திகர்கள் சொல்கிறார்கள்.


அதி அமானுஷ்யம் என்பது பேயோ பிசாசோ அல்ல. வெளி காலம் என்று பேசப்படும், வாழ்வியல் சாராத ஆனால் மனித அறிவுக்கு என்றுமே சவாலைத் தரக் கூடிய விடயங்களாம்.

இன்றைக்குப் பிரமிப்பூட்டும் அமானுஷ்ய விஷயங்களின் உண்மைத் தெரிய வர நாளை அதன் அமானுஷ்யத் தன்மை குறைந்துபோகிறது. (இன்றைய உதாரணம் பேய், பிசாசுகள்) இப்படி இல்லாத ஒன்றைக் காணல்நீராகத் தேடி அலையவேண்டிய அவசியத்தைத்தான் நாத்திகர்கள் கேள்வியாக முன் வைக்கிறார்கள்.

ஆனால் வேறு அமானுஷ்யங்கள் புலப்படத் தொடங்கையில் மீண்டும் ஆத்திகம் மேலெழும்புகிறது. ஆர்வம் கொண்ட நம்மில் பலருக்கு அந்தக் கேள்விகளில் இருக்கும் கவர்ச்சித்தன்மை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. சில சமயம் அதைத் துரத்துவதில் இருக்கும் ஆசுவாசம் தலையெடுக்க ஓய்வெடுத்துக் கொண்டாலும், ஓட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.


ஆனால் , நான் மேலே சொன்ன, ஞானிகள் என்று நத்திகர்களாலும் ஒத்துக் கொள்ளக் கூடியவர்கள், இந்த காலம், வெளி போன்றவற்றை வெகு எளிதில் எடுத்து தமது பாடல்களிலும் உரைகளிலும் கையாண்டிருப்பதைக் வெகு இடங்களில் காணலாம். உதாரணம், திருமூலர். எனவே திருமூலர் செய்ததைச் செய்தால் நாமும் அந் நிலைக்கு செல்ல முடியும் என்பது வாத்துக்கு ஒத்துக் கொள்ளகூடியதாம். ஆனால் சிக்கல் அவர் என்ன செய்தார் என்று நமக்கு தெரியாதது தான்.

அப்படியே தெரிந்துபோனாலும், திருமூலர் செய்ததைத் திருப்பிச் செய்தால் மெய்ஞ்ஞானம் கிட்டும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. இது அறிவுத்தேடல் இருப்பவர் ஒவ்வொருவரும் காலம்காலமாகத் தமக்குள்ளே நிகழ்த்திப் பார்த்துக் கொள்ளவேண்டிய கட்டாயம். இதில் பாதை போட்டுத்தர யாரும் இல்லை. இருந்தபொழுதும் புத்தர், திருமூலர், நம்மாழ்வார், ஏசு, நபிகள் போன்றவர்கள் நடந்த பாதையில் கவர்ச்சி இருப்பது உண்மைதான்.


விடை தேட முயல்பவர்கள் , இவர்களை விட ஒரு தட்டு மேல். இவர்களுக்கும் விடை கிடைத்ததா? என்ற கேள்வி இவர்கள் சாகும் வரையில் இவர்கள் இதயத்தில் இருந்து , இவர்கள் செத்தாலும், கேள்வி மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும்.

ஒரு விதத்தில் எனக்கும் விடை தேட முயல்வதன் அவசியம் இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால் பல நேரங்களில் இந்தக் கேள்வியை முற்றாக ஒதுக்குவதில் என்னவோ தோல்வியை ஒப்புக்கொண்டு ஓய்ந்துபோவதைப் போன்ற ஒரு தோல்வியுணர்ச்சி, தாழ்வுமனப்பாண்மை தலையெடுக்கிறது. எத்தனையோ விஷயங்களை அவற்றின் தேவையின்மை தெரிந்தும் செய்கிறோம் அல்லவா, அதே போல் இதையும் அவ்வப்பொழுது தொட்டுத் தொடர்ந்து செல்வதில் ஒரு ஆர்வம் இருக்கிறது. (ஆஹா, அதி முக்கியமான கேள்வியை வெட்டிவேலை என்ற நிலைக்குக் கொண்டு வந்தாகிவிட்டது!).

-தொடரும் (தொடர ஆள் இருக்கும்வரை)

Popularity: 4% [?]

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

>இல்லாதவர்களுக்குப் பக்கம் பக்கமாக எழுதவேண்டிய கட்டாயம்

இல்லாததாகச் சொல்பவர்களுக்குப் பக்கம் பக்கமாக எழுதவேண்டிய கட்டாயமில்லை என்று வாசிக்கவும்.

எந்த ஒரு விஷயமும் அந்த விஷயத்த பேச வைத்த சமூகத்தின் நிலையோட தொடர்பு படுத்தி புரிஞ்சுக்கணும்னு நான் விரும்பறேன். அத்தகைய புரிதலில்தான் எனக்கு நம்பிக்கை அதிகம்.

இந்த கண்ணோட்டத்தில் நான் நாத்திகன்.

அந்த கடவுளுக்கு நல்ல பவர் இருக்கு. இந்த சோசியக்காரர் சொன்னா சரியா இருக்கும் ங்கற வெற்றுப்பேச்சு நிறைய இருக்கின்ற இச்சமூகத்திற்கு நான் நாத்திகன்.

என்னை சுற்றி இருக்கும் மனிதர்கள் ஆத்திகவாதிகளாக இருந்தாலும், என் கல்லூரி பேராசிரியர் போன்ற உறுதியான நாத்திகர்கள் (மரணத்தின் பிடியில் இருந்தும் பிரச்சாரம் செய்யும்) என் முன்மாதிரிகள். ஆகையால் எனக்கு agonst என்ற கருத்தில் ஒப்புதல் இல்லை.சரி!. இப்போ ஒரு புத்தகம் வந்துள்ளது. அந்த புத்தகத்தில் பெரியாரின் விரிவான பார்வை என்னை மிகவும் வியக்க வைத்ததுடன், அவர் தளைகளை தகர்த்த ஒரு செம்முயற்சியில் ஈடுபட்டவர் என்ற உண்மை புரிந்தது. சமூகத்தின் முன்னேற்றத்திற்கான தளைகளை மட்டும் அல்ல, தனி மனிதனின் இருத்தலை உணர்த்தும் பார்வை.

//சமூகத்தின் முன்னேற்றத்திற்கான தளைகளை மட்டும் //

please read the above line as

சமூகத்தின் முன்னேற்றத்திற்கு இடைஞ்சலான தளைகளை மட்டும்

அன்புள்ள வெங்கட், இது எனது முதல் காமெண்டின் தொடர்ச்சி….

தனி மனிதனின் இருத்தலை பற்றிய பார்வையும் கொடுக்கின்றார். இந்நூலைப் பற்றி விரைவில் நான் எழுத எண்ணம்.

மேலும், தேடல் என்பதின் நோக்கத்தை நான் ‘என்லைட்மென்ட்’ அடைவது என கூறுவேன். நிறுவனமாக்கப்படாத எத்தளங்களிலும் இது சாத்தியமே. ஓர் ஓவியன், ஓர் செயல்வீரன், பரோபகாரி அனைவருக்கும் என பலருக்கும் இது சாத்தியமே. ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல் என்ற புத்தகம் நினைவு கூறத்தக்கது.

கற்ப்பிக்கப்பட்ட புறக்காரணங்களை கடந்து பார்க்கும் தைரியம் இதன் முதல் தேவை என நான் நினைக்கின்றேன். இத்தைரியத்தை அடைய சில அல்லது பல புறத்தேவைகள், ‘மெட்டீரியலிஸ்டிக்’ தேவைகள் அத்தியாவசியம் என நம்புகிறேன். மூன்று வேளை சாப்பாடு இல்லாதவனிடம், என்லைட்மென்ட் பேசுவது அறிவிலித்தனம் என்பது என் எண்ணம். ஆகையால், அவனிடம் என்லைட்மென்ட் என்பதை பேசுவது ஒரு பம்மாத்தாக இருக்கும். அவனுக்கு தனது தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு பின்பு அருகிலிருப்பவனை கனிந்து நோக்க ஓர் களத்தை ஏற்படுத்தி கொடுப்பதுதான் உடனடியாக செய்யப்பட வேண்டியது. (இதில் நான் சமூகத்தையும், தேடலையும் குழப்பவில்லை என்பது சற்று ஆழமாகப் பார்த்தால் நிதர்சனம்)

அன்புடன்

பாலாஜி-பாரி

அடடே! வெங்கட்டு அண்ணே உங்களுக்கு டைம் கிடைச்சதை ஒட்டி எனக்கு சந்தோஷம் :-)

தாமதத்துக்கு தண்டம் சமர்ப்பிக்கிறேன். _/\_

மதிப்பிற்குரிய நண்பர் அருள்செல்வனின் இந்த பதிவை படித்தேன்.

மிகவும் தெளிவாய் எழுதியுள்ளார் வாழ்த்துக்கள் விவாதத்தின்(விவாதம்- இந்த வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை இங்கு) தொடர்ச்சிக்காக அவரது வரிகளை அவருடைய அனுமதியுடன் உபயோகித்துகொள்கிறேன்.

அருள்:

>தந்தையை விட மதமும், கடவுள் எனும் கருத்துருவமும் அப்பாதையின் மிகப் >பெரும் தடைகள். நாத்திகமே அவனுக்கு முழு சுதந்திரம் அளிக்கிறது.

சுதந்திரம் – இந்த வார்த்தையை நாத்திகமும் ஆத்திகமும் மிக உயர்ந்த ஒரு, ஆனால் சுத்தமாய் தெளிவாய் தெரியாத நிலையை சுட்டிக்காட்ட பயன்படுத்திக் கொள்கின்றன. சுதந்திரம் என்பது நத்திகத்துக்கும் ஆத்திகத்துக்கும் மிகவும் சப்ஜெக்டிவாய் உள்ளது.

இரண்டையும் ஒப்பீடு செய்து பார்த்தல் , நமது புரிதலை மேம்படுத்த ஒருவேளை முடியலாம்.

நாத்திகத்தின் சுதந்திரம் என்பது கோவிலுக்கே செல்லாமல் இருப்பது, ஆத்திகக் கோட்பாடுகளை மறுத்தல் என்று வைத்துக் கொள்ளலாம். அத்தகைய சுதந்திரத்தோடு, வாழ்ந்து மறைந்த ஞானி ஒருவரின் சுதந்திரத்தை எடுத்துக் கொண்டால் , யாருடைய சுதந்திரம் பெரிதெனப் படும்?

உதாரணமாய், பட்டினத்தார், தனது சொத்து மனைவி மக்கள் கூட சுதந்திரத்துக்கு தடை

என்று நினைத்து சென்றாரே. அவ்வாறு செல்ல வைக்கும் சுத்தந்திரம் எத்தகையதாய் இருக்கும்? என்று சற்றேனும் நம்மால் யோசிக்க முடியவில்லை.

மற்றுமொரு உதாரணம், ஏசு பிரணான், பாவங்களைப் போக்க என்று *அவர் நம்பிய* வழியில் சென்று,

கைகளில் ஆணி அறையினும், உயிறை நிமிட நிமிட நேரமாய் குடிக்கும் தண்டனை எற்றுக் கொண்டாரே?

அவர் எந்த சுதந்திரத்தில் வாழ்ந்திருப்பார்? என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. :-)

இத்தகைய சுதந்திரத்தை நாத்திகம் கொடுக்குமா? எனக்கு இல்லை என்றே தோன்றுகிறது?

இது போல ஒரு உதாரணத்தை நாத்திகம் தர இயலுமா? யாரவது சொன்னால் நான் அவர்களைப் பற்றி துப்புரவாய் படிக்கத் தாயாராய் இருக்கிறேன். ஏசுபிரானையே மறுத்துவிடுதல் மிக எள்ல்தில் நாத்திகத்தால் முடியும். நாம் இஙு விடைகளைத்தேட முயல்வாதால் *அத்தகையா* நாத்திகம் நமக்கு தேவையில்லை இங்கு.

அருள்:

****நாத்திகம் மனிதனை தூய்மைப் படுத்துகிறது. மனிதனின் சிந்தனைகள் குழு,இன,மத,தேச மாசுகளால் கறைபடாமல் துல்லியமான ஒரு சிந்தனைத் தளத்தை வழங்குகிறது. அவனை திரும்பத்திரும்ப இவ்வுண்மையை எதிர்கொள்ளச் செய்து சிந்தனையை வழிப்படுத்தி அவன் செயல்களை தூய்மையாக்குகிறது. ****

இதையேச் செய்த ஞானிகளை நாத்திகம் ஏற்றுக் கொள்ளட்டுமே? உதாரணமாய், சில காலத்துக்கு முன்னால் வாழ்ந்த , வள்ளலாரைப் பாருங்கள். அவருக்கு, முதலியார்,பிள்ளை, முதல் எல்லாக் கீழ்ச்சாதியிலும்(என்று சாதி பாரட்டக்கூடியவர்களால் சொல்லப்படும்) பின்பற்றியவ்ர்கள் இருந்தார்கள். ஜாதியை இல்லாமல் செய்வது ஆத்திகத்தின் வேலைதான். ஆனால் எப்படி

நாத்திகத்தை ஏற்றுக் கொள்ளப் புரியாதவர்கள். அதைச்செய்த எத்தனையோ சித்தர்களை நாமே பார்க்கமுடியுமே, ஆனால் யாராவது ஒருவராவது, ஜாதியை எதிர்ர்த்துப் பேச நாத்திக்கத்தை அழைக்கவில்லையே? அடெப்படி எல்லோருமே கடவுளை (அல்லது கடவுட் கொள்கையை) ஏற்றவர்களாக ஒன்று போல் சொல்லிவைத்தாற் போல் உள்ளனர்? அதிசயம்தான்!

” ஒன்றே குலம் ஒருவனே தேவன் ” என்று சொன்னவர் எங்கே , இரட்டைக் குவளைகள் முறையையும், மலம் திண்ண வைக்க ஆசைப்படும் ஈன ஜென்மங்கள் எங்கே? எங்கோ புரிதலில் கோளாறு இருந்திருக்க வேண்டும்?

அந்த கோளாறை சரி செய்ய இன்றைய அளவில் நாத்திகம் மிகவும் உதவியாத்தான் உள்ளது. மறுப்பதற்கில்லை. ஆனால் அதனாலேயே இந்த கோளாறுகளை கனவிலும் நினைத்துப்பார்க்காத இறைக் கொள்கையை மறுத்தல் அவசியமா? கொள்கையில் கோளாறு இல்லை, நமது புரிதலில்தான் கொளாறு! இது நாத்திகத்துக்கும் பொருந்தும். நம்க்கு சொல்லிக் கொடுத்தவ்ர்களின் புரிதலின் லட்சனம் இத்தைகயதே , சர்வ மனித அறிவுக்கும் சவாலாய் இருக்கும் இறைக் கொள்கை என்ன செய்தது? நம்மால்தான் ஏறிச்செல்ல இயலவில்லை. அல்லது தெரியவில்லை, முக்கியமாய் புரியவில்லை.

அதனால் மலை உயரமற்றது என்று சொல்லிவிடுவது எத்தனை புத்திசாலித்தனம்? மலை உயரமுடையது? அது ஏன் இத்த்தகைய உயரத்தில் உள்ளது என்ற கேள்விக்கும், மலை ஏறியவ்ர்கள் பதில் அறிவர். நான் ஏற மாட்டேன் கடைசிவரையில், என்றும் சொல்லிக் கொண்டு,

மலையே இல்லை அல்லது மலை உயரமில்லை என்று சொல்வது போலதான் எனக்குப் படுகிறது நாத்திகம் சொல்வது. ஆகக் கடைசியாக, மலை நம் முன் உள்ளதா என்ற கேள்வியும் இருந்துகொண்டே உள்ளது நமக்கு.

வெங்கட்டு:

**படிப்படியாக அரிசியை வடித்துக் கொட்டுகிறார்கள், ஆனால் அவனோ பசியில்லை என்று எழும்பிப் போகிறான். யாரிடம் தவறு?***

பசியில்லை என்று எத்தனை நாள் இருந்துவிட முடியும் அவனால், கடைசிவரை பசியில்லை என்று அவன் அடம்பிடித்து செத்தால் கூட யாரிடம் தவறு? வடித்து கொட்டுவர்களிடமா?

ஆனால் நாம் பேசுவதோ ருசியைப்பற்றி, ருசி அறியாதவன் எழுந்து போகிறான்.. ருசி அறிந்தவன் அனுபவித்து அனுபவித்து பக்கம் பக்கமாய் எழுதுகிறான் பிறர்க்கும் சொல்கிறான். :-)

மெய்ஞானத்தை கள் என்றும் கஞ்சா என்றும் சொன்ன ஞானிகள் உள்ளனர்தானே?

அருள்:

****

நாத்திகம் மனிதனை பொறுப்புள்ளவனாக மாற்றுகிறது. அவனை தன் செயல்களுக்கு தன்னையே பொறுப்பேற்க கற்றுத்தருகிறது. எந்த முன்முடிபுகள் மிக்க சுமைதாங்கிகளையும் அவனுக்கு அது அளிப்பதில்லை. அவன் சுமையை அவன் தான் சுமக்க வேண்டும். இரக்கம் கொண்டு கடைத்தேற்ற யாரும் எதுவும் இல்லை.

********

இங்கு சொல்லப்படும் பொறுப்புணர்ச்சி இருபுறத்தாருக்கும் சமமே . அப்படியெனில்,

சமூகத்தைபற்றி நாத்திகம் அக்கறை எடுக்க வேண்டிய அவசியம் என்ன? இன்னொரு மனிதனுக்கு உதவுவதைப் பற்றியும், பொது உடைமை பற்றியும் நாத்திகம் ஏன் கவலப்படுகிறது? அல்லது இன்னொருவனிடமிருந்து உதவி தேவைப்படும் போது மட்டும் நாத்திகம் ஏன் வளைந்து கொடுக்கிறது?

மனிதன் தன் அற்ப வேலைகளுக்கு கடவுளை காரண்ம் காட்டுகிறான். அதில் பெரும் பகுதியினர்

ஆத்திகர்கள் என்பது ஒத்துக் கொள்ளக் கூடியதே! இதற்கும் இறை என்ன செய்யும்?

“”மனிதனை நாத்திகம் பொறுப்புள்ளவனாக மற்றுகிறது.”" நாத்திகத்தைவிட சுயனலம் பொறுப்புள்ளவனாக் மற்றுகிறது என்று கூட சொல்லமுடியும்?

என்வே எல்லோரும் சுயனலத்துடன் இருங்கள் என்று போதித்துவிட முடியுமா என்ன?

நாத்திகம் சொல்லும் பொறுப்பு ஆத்திகர்களிடம் இல்லை. நாத்திகம் புறுப்புணர்வு என்று சொல்வது

தன் குஞ்சுகளுக்கு பல மைல் தூரம் பறந்து சென்று இரை கொண்டு வந்து கொடுக்கும் காக்கையை எந்த நாத்திகம் பொறுப்புடையாதாய் மாற்றியது? இதைவிட பெரிய பொறுப்புணர்ச்சியையா நாத்திகம் போதித்து விட போகிறது?

//இன்றைக்குப் பிரமிப்பூட்டும் அமானுஷ்ய விஷயங்களின் உண்மைத் தெரிய வர நாளை அதன் அமானுஷ்யத் தன்மை குறைந்துபோகிறது. //

திருமூலர் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பேசியுள்ளாரே, இத்தனை ஆயிரம் ஆண்டுகளாகவா

அதன் அமானுஷ்யத்தன்மை குறைந்து போகத்தேவைப் படுகிறது? அல்லது அதன் அமனுஷ்யத்தன்மை தனது ஒரே ஆயுளில் கண்டுகொண்ட திருமூலர் , இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த மனிதர்களைவிட புத்திசாலியோ? :-)

//(இன்றைய உதாரணம் பேய், பிசாசுகள்) இப்படி இல்லாத ஒன்றைக் காணல்நீராகத் தேடி அலையவேண்டிய அவசியத்தைத்தான் நாத்திகர்கள் கேள்வியாக முன் வைக்கிறார்கள். //

இப்படி ஒரு கேள்வி கேட்பதினாலேதான், எனக்கு நாத்திகர்கள் முக்கியமானவர்களாகவும் மிகத்தோழமையுடனானவர்களாகவும் ஆகிவிடுகின்றனர். ஏனெனில் கேள்வி கேட்டுவிட்டார்களே? :-)

ஆத்திகர்கள் நான் பிடித்த முசலுக்கு முக்கா காலே என்று வாதிடுவதால் என்னால் அவர்களை நெருங்க முடிவதில்லை. அவரவரும் ஒரு முசலைப் பிடித்துக் கொள்ளலாம். தனக்கு ஏற்ற அளவில் கால் கணக்குகளை வைத்துக் கொள்ளலாம். அதற்கு ஒன்று செய்யமுடியாது. அந்த முசலை உண்டாக்கியவன் தான் யார்? என்று சற்று தேடி மட்டும் பார்க்க முடியும். :-)

//நாத்திகம் மனிதனை மனிதனாக்குகிறது. மதங்கள் மனிதனை மிருகம் என்கின்றன. பாவி என்கின்றன. அவனை தேவனாக்க முயல்கின்றன. மனிதனின் இருத்தல் நிலையை கீழானதாகக் காட்டி வசைபாடி அவனை குற்றவுணர்சியும் பய உணர்சியும் கொண்டவனாக்கி மனச் சமனை நிலைகுலைக்கின்றன.//

நாத்திகம் உலகம் முழுவதும் பரவிவிட்டது என்று வைத்துக் கொள்வோம்(ஒரு விளையாட்டுக்கு :-) )

அதற்குபின் உலகில் போரே நடக்காது என்று உங்களால் நினைக்க முடிகிறதா?

சீனாவில் குற்றௌணர்ச்சி உள்ளவர்களே இல்லை என்கிறீர்களா? நாத்திகம் அவர்களை முழுப்புனிதர்களாக ஆக்கிவிட்டதா என்ன?

இரண்டு தரப்பிலும் அயோக்கியர்கள் இருப்பதால் அவற்றை கணக்கில் எடுத்துக் கொள்வதில் பலனொன்றும் விளையப்போவதாகத் தெரியவில்லை எனக்கு.

நாம் தேடுவது ஞானம் என்று ஞானனூல்களில் பேசப்படும் பரிபூரண சுதந்திர நிலை அடையக் கூடியதா இல்லையா என்பது பற்றி அல்லவா? இனி அதைப்பற்றி மட்டும் ஏதாவது எழுத முயற்சிக்கிறேன்.

//நாத்திகம் அதைத் தாண்டிய கேள்விகளின் தேவையின்மையை வலியுறுத்துகிறது. கேள்வியே தேவையில்லை என்று அவர்கள் சொல்லும்பொழுது அந்தக் கேள்வி ஒரு அற்புதமான சிந்தனை என்று ஆத்திகர்கள் சொல்கிறார்கள்.//

ஒரு பொருளை நமக்கு தெரியாது என்று வைத்துகொள்வோம், உதாரணமாய் மார்ஸ்.

நமக்குச் சுத்தமாய் தெரியாது! அல்லவா? அப்படியிருக்க , மார்சில் உள்ள நமக்கு மிகவும் பலன் தரக்குடிய (ஒரு வாயு என்று வைத்துக் கொள்வோம்) ஒன்றை நமக்கு எப்படி தெரிந்திருக்கமுடியும். கொஞசம் எனக்கும் ட்விஸ்ட் ஆகுது , மீண்டும் சொல்கிறேன் :-) , ஒன்றை நமக்குத் தெரியாத போது , அந்த ஒன்றினால் நமக்கு விளையபோகும் பயனையும் தெரியாது அல்லவா?(எப்படியோ சமாளிச்சுட்டேன் :-) )., தெரியாத ஒன்று தெரியாத ஒன்றுதான், அது இல்லாத ஒன்று ஆகவே ஆகாது ஒருபோதும், உதாரணமாய் மார்ஸ் 1880(ஆண்டு கணக்கு புருடா) வரை நமக்கு தெரியாதது தானே, ஆனால் மார்ஸ் இருந்துகொண்டுதானே இருந்தது. எனவே தெரியாத ஒன்றை இல்லை என்று சொல்வது அப்படி புத்திசாலித்தனம் ஆகும்?எனக்கு சத்தியமாய் தெரியாது :-)

அண்ணனுங்களா நான் கொஞசம் தூங்கிட்டு வந்து எழுதுறன்,

டங்ஸன் ஆகுற மாதிரி எதனா எழுதி இருந்தன்னா, இந்த கஸ்மாலத்த அஜீஸ் பண்ணிக்கோங்க கோச்சிகாதீங்க, எல்லாம் லுள்ளாயீ.. :-)

இதையொட்டி சட்டுன்னு வந்த கேள்வி,

நாத்திகம் மறுக்கிறதா? அல்லது நாத்திகத்துக்கு தெரியாதா?

நாத்திகத்துக்கு விடை தெரியவில்லை என்றாவது அதற்கு தெரியுமா அல்லது, அல்லது “இல்லை” என்று விடை தருகிறதா?

தெரியாததனால் இல்லை என்று சொல்லிவிடமுடியுமா என்ன?

இரண்டுக்கும் உலக அளவு வித்தியாசம் உள்ளதல்லவா?

Leave a comment

(required)

(required)