Free Software and Open Source

சமீபகாலத்தில் பலரும் பரிவூற்று, திறவூற்று போன்ற சொற்களை Free Software, Open Source இவற்றைக்குறிக்கப் பயன்படுத்தி வருகிறார்கள். ரிச்சர்ட் ஸ்டால்மான் (Free Software), மற்றும் எரிக் ரேமண்ட் (Eric Reymond) இவர்களின் வரையறைகளைப்படித்தவர்களுக்கு இந்த மொழியாக்கங்கள் சரியில்லை என்பது எளிதில் தெரியும்.

தளையறு மென்கலன், திறந்த ஆணைமூலம் இரண்டு வார்த்தைகளும் என்னால் உருவாக்கப்பட்டவை. நான் கடந்த ஐந்து வருடங்களாக என்னுடைய கட்டுரைகள், தொழில்நுட்ப விளக்கங்கள், பயனுதவிக் கட்டுரைகள் எல்லாவற்றிலும் இவற்றைத்தான் நான் பயன்படுத்தி வருகிறேன். பரிவூற்று, திறவூற்று போன்ற வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. வலைப்பூக்களைப் போல கவித்துவம்தான் மிஞ்சி நிற்கிறது. தொழில்நுட்பப் பயன் நேரடியாக இல்லை. காரணம், Source என்பதை ஊற்று என்று கொண்டால், Source Code Error – என்பதை எப்படி மொழியாக்கம் செய்வது? ஊற்றுப்பிழை?? Source debugging?? Code point?? இப்படியாகப் பல குழப்பங்கள் வரும். தமிழில் செய்யப்பட்ட நல்ல மொழியாக்கத்தின் உதாரணம் ware – கலன்

hardware, software, shareware – முறையே வன்கலன், மென்கலன், பகிர்கலன், என்று அழகாக நீட்டிக்கிறது. இதே போல disk=வட்டு

harddisk, floppydisk, compace disc, minidisc, magnotooptic disk – முறையே கடினவட்டு, நெகிழ்வட்டு, குறுவட்டு, நுண்வட்டு, காந்தஒளிவட்டு, என்று அழகாக நீட்டிக்கும். இப்படித்தான் ஆதாரச் சொற்களைப் பார்க்கவேண்டும். Source code என்பதில் இருக்கும் இரண்டு வார்த்தைகளும் இப்படி ஆதார வார்த்தைகள், இவற்றைக் கொண்டு பல சொற்களை உருவாக்க முடியும். Source – மூலம், இங்கே ஆணைமூலத்தைக் குறிக்கிறது, Open – திறந்த, எனவே திறந்த ஆணைமூலம் என்று தொடுத்தேன். முதலில் இதைத் திறவாணைமூலம் என்றுதான் எழுத நினைத்தேன். பிறகு அதன் பொருள் Command to open, திறப்பதற்காகக் கொடுக்கப்படும் ஆணைமூலம் என்ற குழப்பத்திற்கு இடமிருப்பதால் திறந்த ஆணைமூலம் என்று எழுதினேன். இதை வைத்துக் கொண்டு எளிதாக நீட்டிக்க முடியும். Source code error – ஆணைமூலப் பிழை, (இது புழகத்தில் மூலப்பிழையாக மாறிச் சுருங்க முடியும்). Source debugging – மூலப் பிழைநீக்கம், இதை ஊற்றுப்பிழை நீக்கம் என்று சொல்வது பொருத்தமல்ல. Code point – ஆணை இடம்…. ஊற்று என்று கொண்டால் பல சிக்கல்கள் வரும். தொழில்நுட்ப ரீதியாக ஆணைமூலம் என்பதுதான் பொருத்தமாகப்படுகிறது.

திறந்த குழுமங்கள், திறந்த தரங்கள் என்பவை, திறந்த ஆணைமூலத்தின் ‘திறந்த’ – என்பதும் கொள்கை ரீதியாக ஒரே கருத்தைத்தான் சொல்கின்றன. இதில் இராம.கி ஐயா சொல்வதைப்போல் எந்தக் குழப்பமும் இல்லை.

இதை திறந்த நிரல் என்று சொல்வது கூடத்தவறுதான். திறந்த நிரல் என்பது – Open Program என்றுதான் ஆகும். தொழில்நுட்பத்தில் Source, Program, Software இவை எல்லாவற்றுக்கும் வெவ்வேறு பொருள்கள் உண்டு. ஒன்றுடன் ஒன்றைக்குழப்பமுடியாது.

திறந்த ஆணைமூலம் என்பதைச் சுருக்கமாக திறமூலம் என்று சொல்லலாம். திற என்பது வினைத்தொகையாக வருகிறது. ஆணைமூலம் என்று ஒவ்வொருமுறையும் நீட்டிமுழக்கிக்கொண்டிருக்க அவசியம் இல்லை. இங்கே மூலம் என்றாலே ஆணைமூலம்தான் என்று பொருள்படும்.

* * *

Free software – இதற்கு விடுதலைச் செயலிகள் (முழுப்பிழை), சுதந்திரச் செயலிகள் (இன்னும் பிழை) என்று பலர் எழுதுவதற்கு முன்பே நான் இதற்குத் தளையறு மென்கலன் என்று பெயர் முன் வைத்தேன். Free – தளையறு (இந்த இடத்தில் இலவசம் என்பது பொருளில்லை), அதாவது மென்கலனுக்கு எந்தவிதமானக் கட்டுப்பாடும் இல்லை. இது எழுதி வெளியிடும்போதே தளையற்று (தளையறுத்த) மென்கலன், இப்பொழுது தளையற்றுக் கிடைப்பது, எப்பொழுதும் தளையற்று இருக்கும் என்று வினைத்தொகையாக நிற்கும். இது Software = மென்கலன் என்பதன் நேரடி நீட்சியாக இருப்பதால் குழப்பம் ஏற்படாது. பரிவூற்று என்பதில் வரும் ஊற்று = Source மாத்திரம்தான் குறிக்கும், முழு மென்கலனையும் குறிக்காது. ஆனால் ஸ்டால்மானின் சித்தாந்தப்படி இது முழு மென்கலனையும் குறித்தாக வேண்டும், ஆணைமூலம் அதன் ஒரு பகுதிதான். எனவே, free software என்பதில் software என்ற இடத்தில் மென்கலன் வந்தாக வேண்டும், (எப்படி எல்லா disk களையும் வட்டு என்று அழைக்கிறோமோ அதேபோல்).

பரிவூற்று, திறவூற்று என்பவை நீட்டிக்க முடியாதா குழப்பம் தரக்கூடும் மொழியாக்கங்கள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. இதை தமிழ் உலகம் குழுமத்திலோ, வேறு இடங்களிலோ முன்னெடுத்துச் செல்லமுடியாதா நிலையில் இருக்கிறேன் (வேலைப்பளு ஒரளவுக்கு மேல் கடிதங்களைப் படிக்க இடம்தருவதில்லை). எனவே, இதை யாராவு முற்செலுத்தவும். ஆர்வமுள்ளவர்கள் இங்கோ, என்னுடைய வலைபபதிவிலோ எழுதினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

இறுதியாக, என்னுடைய நீண்ட (பலவருடச்) சிந்தனைக்குப்பிறகு

Open Source – திறமூலம் (திறந்த ஆணைமூலம்)

Free Software – தளையறு மென்கலன்.

Popularity: 3% [?]

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

நான் இனிமேல் இதே வகையில் குறிக்க எண்ணியுள்ளேன். விளக்கத்திற்கு நன்றி.

உங்க ஊர் மகாமகம் பற்றி ஒண்ணும் எழுதலையா?:-)

அன்புள்ள வெங்கட், உங்களுடைய விளக்கங்கள் தெளிவாக இருக்கின்றன. தளையறு மென்கலன் மிகப் பொருத்தமாக இருக்கிறது. ‘பரி’ என்று இதற்குப் பயன்படுத்தியது எனக்குப் புரியவில்லை. திறமூலம் என்று சுருக்குவதை விடத் திறந்த ஆணைமூலமே எனக்குப் பிடித்திருக்கிறது. ஒருவேளை திறந்த மூலம் என்று சுருங்கினால் கூடச் சரியாகத் தான் தோன்றுகிறது. திறமூலம் எங்கோ இடிக்கிறது.

நுட்பச் சொற்கள் சிலவற்றின் தமிழாக்கச் சந்தேகங்களை உங்களிடம் தான் கேட்க வேண்டும் என்று இருந்தேன். உ-ம் RFIDக்கு என்ன சொல்வீர்கள் ? வானொலி அலைவரிசை இனங்காட்டி ? இதனை எப்படிச் சுருக்குவது ?

முன்பு ஒருமுறை இயந்திரன்களைச் சுருக்கி நீங்கள் ‘ரன்’ என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அதையும் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. அது பற்றி அப்போதே எழுத நினைத்தேன். எழுதினேனா என்று சந்தேகமாய் இருப்பதால் இப்போது கூறுகிறேன். அவற்றை ‘இயன்’கள் என்று சுருக்கலாமே ?

திண்ணை இதழில் ‘RFID’க்கு ‘வானலை அடையாள குறிகள்’ என்று மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்!

http://www.thinnai.com/SC0302021.html

http://www.tcwords.com/ தளத்தில் கணிணி தொழில்நுட்பம் சம்மந்தமான மொழியாக்கங்கள் உள்ளன !!! (But they are not perfect.

For example, RAM has been translated to ரேம் :-)

அன்புள்ள திரு வெங்கட்

நல்ல விளக்கம். மிக்க நன்றி.

உங்களது ெசால்லாடலைத்தான் gnu manifesto தமிழாக்கத்திற்குப் பயன்படுத்துகிேறன். விைரவில் தமிழ் லினக்ஸ் குழுவில் வெளியிடுகிேறன்.

Leave a comment

(required)

(required)